ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 14
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் |
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
வாய் நெகிழ்ந்த செங்கழுநீர் |
எம் பாவாய்!.....உங்கள் வீட்டின் பின்புறம், புழைக்கடைத் தோட்டத்தில் உள்ள சிறு குளத்தில் - சூரியனின் வருகையினை எதிர் நோக்கி செந்தாமரை மலர்கள் மலரத் தொடங்கிவிட்டன.
நேற்றைய இரவில் பூத்த ஆம்பல் மலர்களோ கூம்பி விட்டன....செங்கல் பொடிக்கூறைத் தவத்தவர் |
செங்காவியினைத் தரித்தபடி தூய தவத்தினை மேற்கொண்டுள்ள தவசிகள் - இளங்காலைப் பொழுதில் நீராடி முடித்து - தங்கள் திருக்கோயிலில் நடைதிறந்து நித்ய வழிபாடுகளை - தூய வெண்சங்கு முழக்கத்துடன் மேற்கொள்வதற்கு விரைகின்றனர்..
''நான் வந்து உங்களையெல்லாம் எழுப்புகிறேன்'' - என்று நேற்று எம்மிடம் கூறினாயே! நீ ஒற்றைச் சொல் உடையவள் போல என்று, நாங்களும் உன் வார்த்தைகளை உண்மை என நம்பினோம்..
ஆனால்... நங்காய்!.... நடந்ததென்ன?....
உனக்கு வெட்கமாக இல்லையா?....இப்படிக் கிடந்து உறங்குவதற்கு!.தித்திக்கத் தித்திக்கப் பேசும் இதழ்களால் பொய் பேசினையே!...
நங்காய்! எழுந்திராய்!... நாணம் இல்லாதவளே! எழுந்திரு!.....
பாஞ்ச சன்னியம் எனும் சங்கினையும் சுதர்சனம் எனும் சக்கரத்தையும் ஏந்தி ''சரணம்'' என்று தன்னைச் சார்ந்தவர் தம் துயரங்களைக் களைபவன்,
வள்ளல் என வாரி வாரிக் கொடுப்பதற்கும், வல்லசுரர் தம் கொடுமையினின்று தம் மக்களைக் காப்பதற்கும் என - வலிமையான கரங்களை உடையவன் நம் பெருமான்!
அன்பருக்கு அன்பரான ஐயனை, அண்டினோர்க்கு அரசனை, தாமரை மலர் போன்ற திருவிழிகளை உடைய உத்தமனை - பாடிப் பரவிட எழுந்திராய்!...
நன்றி - ரதி, தேவி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..