நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 22, 2012

திருப்பாவை - 07

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 07 
ஆண்டாள்
நாராயணன் மூர்த்தி
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்,
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்!....

வலியன் குருவி
கீச்சு கீச்செனும் கரிக் குருவிகள்
விடியலில் துயில் கலைத்து எழுந்த ஆனைச்சாத்தன் எனும் வலியன் குருவிகள் கீச்சு.. கீச்சு... என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதை நீ கேட்கவில்லையா?... அந்த சத்தத்தினைக் கேட்டும் துயிலெழ உனக்கு மனமில்லையா!... 

எமக்கு இரங்காத நீ....பேய்ப்பெண்ணா!..
தயிர் மத்தினால் ஓசை
நறுமணம் கமழும்  கூந்தலையுடைய ஆய்ச்சியர்கள் , தாம் அணிந்துள்ள காசுமாலை மற்றும் மங்கல அணிகலன்களுடன் கை வளையல்களும் கலகல என்று ஒலியெழுப்பும் வண்ணம் - மத்தினால் தயிரினைக் கடையும் ஓசையைக் கூட நீ கேட்கவில்லையா?...

நாம் நோற்கும் நோன்பிற்கு நாயகமாக விளங்குபவளே!...
(எமக்கு முன் நீ எழுந்திருக்க வேண்டாமா?) 
  
அனந்தனே!.. ஆதிமூலனே!..
நானிலங் காக்கும் நாராயணனை நரசிங்க மூர்த்தியை அவன் கீர்த்தியை கேசி எனும் அரக்கனை வீழ்த்திய கேசவனை மாதவனை வாமனனை வத்சலனை வாசுதேவனை அச்சுதனை அனந்தனை ஆதிமூலனை நாங்கள் அனைவரும் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கின்றோம்.. 

அதனை செவி குளிரக் கேட்டும் ஏதும் கேட்காதவள் போல படுக்கையில் கிடக்கின்றாயே!... இது நியாயமா?...

ஒளி தவழும் மேனியளே!... (ஒளி உடலில் மட்டுமா?.. உன் உள்ளத்தில் இல்லையா?) 

எம் பாவாய்!....வா!...எழுந்து வந்து கதவைத் திறவாய்!....
***

3 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கு நன்றி. ''காசும் பிறப்பும்'' என்பதற்கு - சில நூல்களில் ஆபரணங்கள் என்றும் காசு மாலை என்றும் குறிப்பிடுகின்றனர். வேறு சிலவற்றில் ஆமைத்தாலி, அச்சுத்தாலி என்றிருக்கின்றது.அதனை ஒட்டியவாறு மங்கலஅணிகலன்கள் என்று குறிக்கப்பட்டது.தயிர் கடையும் இளம் கன்னியர் தாலி அணிந்திருக்க வாய்ப்பிலை தானே!...

    பதிலளிநீக்கு
  2. ஜி திருப்பாவை ஏழு படித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி..

    இதெல்லாம் பழைய பதிவுகள்..

    சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..

    நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..