நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 26, 2012

திருவெம்பாவை - 08

மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை
ஆட்கொள்ளும் வித்தகர்
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு  இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். - 15

அழகிய அணிகளுடன் விளங்கும் கச்சணிந்த கொங்கைகளை உடைய  நங்கையீர்! 

இவள் ஒவ்வொரு சமயத்தில், மட்டும் ''எம்பெருமான்'' என்று சொல்லி வந்தாள். ஆனால்  இப்பொழுது இவள்  இறைவனின் பெருமையை,  புகழை  வாய் ஓயாமல் கூறிக்கொண்டிருக்கின்றாள்...இறைவனின் திருப்பெயரினைக் கூறி மகிழ்தலை ஒருகாலும் நீங்காதவளாக திகழ்கின்றாள்... 

இவள் மனம் மகிழ்ச்சி மிக்குற்று,  கரிய விழிகளினின்றும், ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கன்னங்களில் வழிகின்றன.  

 ஈசனை நினைந்து  நெக்குருகி  ஒருமுறை வணங்க என்று பூமியின் மேல்  வீழ்ந்தவள் - மீண்டு எழ மனமின்றிக் கிடக்கின்றாள்..

பிற தேவர் எவரையும் எதற்கும் வணங்காதவளாகி விட்டாள். 

பெருந்தலைவனாகிய இறைவனின் பொருட்டு, இப்படியும் ஒருவர் பித்தராவரோ!...

இப்படி  பிறரை அன்பினால் அடிமை கொள்ளும் வித்தகர் யார்?... எம்பெருமான் ஈசனே அல்லவா!.... அவருடைய திருவடித் தாமரைகளை வாயார, மனமாரப் புகழ்ந்து பாடி, 

தாமரையும், அல்லியும், குவளையும் ஆம்பலும் என - அழகிய மலர்கள் நிறைந்து குளிர்ந்த இந்த பொய்கை நீரில் - கை வளையல்கள் குலுங்க குடைந்து நீராடுவீராக.

கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர்  எம்பாவாய்.   16

அலைகள் ஆரவாரிக்கும் நீலக் கடலின் நீர் ஆவியாகி , விண்ணில்   மேகம் என மேல் எழுகின்றது. அவ்வாறு எழுகின்ற மேகம் எம்மை அன்பர்களாக உடையவளாகிய அம்பிகையின் திருமேனி போல நீலநிறத்துடன் விளங்குகின்றது!... 

அது மட்டுமா!....அம்பிகையின் சிற்றிடை என  ஒளிர்ந்து மின்னல் எனப் பொலிகின்றது!... 
திருப்புருவம் என வானவில்
எம்பிராட்டியின் திருவடிகளில் இலங்கும் மேல் அணிந்த பொற்சிலம்புகளைப் போல அதிர்ந்து ஒலித்து, அவளது திருப்புருவம் போல்  வானவில் எனத் திகழ்கின்றது!...

எம்மை ஆண்டு அருள்பவளாகிய அம்பிகையின் திருமேனியினின்று அகலாத எங்கள் இறைவன் தன் அன்பின் அடியார்களுக்கும் ஐயனின் பணி பூன்டு இலங்கும் எங்களுக்கும்  - அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இன்னருளைப் போன்று மேகமே - 
முன் சுரக்கும் இன்னருளே!.. மழையே!...
நலங்களும் வளங்களும் எங்கும் திகழ மாரி எனப் பொழிவாயாக!...

என்று பாவையே!... நீராடுவாயாக!....
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..