நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 27, 2012

திருவாதிரை


சிவ ஆலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில், இன்று மார்கழி 12 (27.12.2012) ஆருத்ரா அபிஷேகமும், நாளை (28.12.2012) ஆருத்ரா தரிசன  தீபாராதனையும் நடைபெறும்.
thanjavur
அம்மையே!... அப்பா!... ஒப்பிலா மணியே!...
தமிழகத்தில் ஐந்து திருக்கோயில்கள் - பஞ்ச சபை என்று புகழப்படுகின்றன. அவை:- திருவாலங்காடு - ரத்தினசபை, சிதம்பரம் - பொற்சபை, மதுரை - வெள்ளியம்பலம், திருநெல்வேலி - தாமிரசபை, குற்றாலம்  - சித்திரசபை.

சிதம்பரத்திலும் மற்ற சிவாலயங்களிலும் மார்கழி திருவாதிரையன்று ஆருத்ரா   தரிசனம் மிகச் சிறப்பாக நிகழ்வுறும்.

சித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு. அம்பரம் - வெட்டவெளி. நடராஜர் சந்நிதியின் வலப்புறத்தில்  தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. பொதுவாகக் காண முடியாதபடி திரையினால்  மறைக்கப்பட்டிருக்கும். 

நடராஜருக்கு நிகழும் ஆராதனையின் போது திரை விலக்கப்பட்டு தங்க வில்வ மாலைக்கும் ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது? என்று கவனித்தால், ஆகாயம் போன்ற சித்திரம் தான் தெரியும். 

தில்லை திருச்சிற்றம்பலம்
இறைவன் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதையே இது குறிக்கிறது. எனவே பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் ஆகும்.

திருவாதிரை அன்று நடராஜருக்கு நிவேதனம் களி. 
திருவாதிரைக் களி என்றே பிரசித்தம். 

தில்லை நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது. ஏன்? 

தில்லையில் - சேந்தனார் என்னும் சிவ பக்தர்  தினமும்  எவருக்காவது உணவளித்த பிறகு தான், தான் உணவு உண்ணும் வழக்கமுடையவர். இதுதான் சேந்தனார் செய்யும் சிவபூஜை. 

இவருடைய தொழிலோ பட்டுப் போன மரங்களை - மட்டும் -  வெட்டி, விறகாக்கி விற்பது.. ஏழை எனினும் அடியார்களை வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை.

சேந்தனாரின் விருந்தோம்பல் பண்பினை பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன்,  திருவுள்ளம் கொண்டார். 

தில்லையில் திருவாதிரைத் திருவிழா நடந்து கொண்டிருந்த போது, திருவிழாவினைக் காண வேண்டி சோழ மன்னர் கண்டராதித்தரும் வந்திருக்கின்றார். 

இவரோ - அனுதினமும் இரவில் சிவ பூஜை செய்து முடித்ததும் சிவபெருமானின் தண்டை  ஒலியினைக் கேட்கும் வரத்தைப் பெற்றிருந்தார். 

அன்று திருவாதிரைக்கு முதல் நாள்.. கடுமையான மழை. 

கண்டராதித்த சோழர் சிவபூஜையை நிறைவு செய்ததும் வழக்கமாகக் கேட்டு இன்புறும் தண்டையின் ஒலி - கேட்காததைக் குறித்து மிகவும் வருத்தமடைந்தவராக உறங்கினார்..

விடிந்த பொழுதில்,  கோயிலைத் திறந்த  அந்தணர்கள் ஈசனின் பட்டாடையிலும் அம்பலத்திலும்  களியின் துணுக்குகளைக் கண்ணுற்றனர். அதிர்ந்து மன்னனிடம் ஒடோடிச் சென்று தகவல் அறிவித்தனர்.. 

மன்னர் மேலும் குழம்பினார். ஆனாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளைத் தொடர உத்தரவிட்டார். தில்லை திருவிழாக்கோலம் பூண்டது.

எல்லோருக்கும் விடிந்த பொழுது சேந்தனாருக்கும் விடிந்தது., அவர் மனைவியுடன் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார். 

அங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது நிற்க - அரசனின் பெரும் படையும் முயற்சித்துத் தோற்றனர்.. ''என்ன பெருங்குற்றம்'' என்று எல்லோரும் திகைத்து நிற்க,

''சேந்தன் பல்லாண்டு பாட தேர் நகரும் '' - என  இறை வாக்கு வானில் ஒலித்தது.

''யார் இந்தப் புண்ணியர்'' - என்று ஊரெல்லாம் உற்று நோக்க,

சேந்தனார், பெருந்தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டு,

''மன்னுக தில்லை வளர்க நம்  பத்தர்கள் ''

என்று பல்லாண்டு பாட, ஓடாது நின்ற பெருந்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருளத் தொடங்கின. மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது. மகேசன் அறிவித்தான்.

''முதல் நாள் இரவில் சேந்தனின் குடிசையில் தாம் களி உண்டதையும் அதனாலேயே - சோழ மன்னரின்  பூஜையில் தண்டை ஒலி கேட்கவில்லை'' என்பதையும்,

சேந்தனாரும் அவர் மனைவியும் வானிலிருந்து பெய்த பூமழையில் குளிர்ந்தார்கள்.

மன்னவரும் மறையவரும் மற்றவரும் - களி உண்டு களிநடம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை அறிந்தார்கள்.  

சேந்தனாரையும் அவரது மனைவியையும் பணிந்தார்கள். போற்றி மகிழ்ந்தார்கள்.

அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது.

திருச்சிற்றம்பலம்

4 கருத்துகள்:

  1. ஆரம்பமே அமர்களமாய் சிறப்பாய் உள்ளது திருவாதிரைப் பதிவும் அருமையாய் உள்ளது.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியதுடன்
      இனிய கருத்துரையும் வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. அன்பின் துரை செல்வராஜு

    திருவாதிரைப் பதிவு அருமை

    சிவபெருமானின் ஐந்து சபைகள் - அவைகளீள் ஓண்றான சிதம்பரம் - அங்கு ஆகாயத்தலம் - அங்கு நெய்வேத்தியம் களி - திருவாதிரைக் களீ - நெய்வேத்தியத்தின் தத்துவம் - ஏன் களி சிவபெருமானுக்குப் பிடித்த ஒன்று - விளக்கங்கள் அருமை.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியதுடன் -
      இனிய கருத்துரை வழங்கி சிறப்பித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..