நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 01, 2024

ஐயனார் பாட்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 15 
செவ்வாய்க்கிழமை

ஆவணி இரண்டாம் செவ்வாய் அன்று திருச்செந்தூர் அருகே ஸ்ரீ கற்குவேல் ஐயனார் தரிசனம்..

அப்போது மனதில் தோன்றிய சிறு பாமாலை.. 

முந்தைய பதிவில் வெளியான சில கண்ணிகளின் விரிவாக்கம் இன்றைய பாமாலை..


கற்கு வேலும் இருக்கையிலே
கவலை இல்லையே ஐயன்
கனிந்த முகத்தைப் பார்க்கையிலே
கலக்கம் இல்லையே..
1
நன்றி சொல்ல நாவில் ஒரு
வார்த்தை இல்லையே ஐயன்
தாமரைப் பூம்பாதம் தொழப்
பிணியும் இல்லையே.. 2

தேரிக் குடிஇருப்பை நோக்கித்
தேடி வரும் மானிடர்க்கு  
துணை கூட்டும் நீதியனே
கற்கு வேல் ஐயா.. 3

தினப் பொழுதும் திருவடிகள்
தொழ வேண்டும் தொழ வேண்டும்
வேத மந்த்ர ஜோதியனே
கற்கு வேல் ஐயா.. 4

கற்கு வேலின் கழலடிக்குப்
பாத நமஸ்காரம் ஐயன் 
குடியிருக்கும் கோயிலுக்கு
கோடி நமஸ்காரம்.. 5

பொங்கி வரும் பொங்கலுடன் 
பூஜை புனஸ்காரம் ஐயன்
குளிர்விழிகள் நோக்கிட்வே
சூழும் சுக ஸ்தானம்.. 6

ஏறிவரும் குதிரைச் சத்தம் 
எட்டுத் திசையும் கிடுகிடுக்கும்
சந்தனமும் சவ்வாதும் 
ஊர் முழுதும் கமகமக்கும்.. 7

பாவியரின் இதயக் குழி 
பதறிப் பதறி படபடக்கும்
கடுவிழிகள்  கதறிக் கதறி
கண்ணீரும் தான் வடிக்கும்.. 8

பாவியரைத் தண்டங்கொள்ள
கற்கு வேலும் பளபளக்கும்
பூத்து வரும் புண்ணியங்கள் 
புதுமலராய் சிலுசிலுக்கும்.. 9

பூர்ணகலை பொற்கலையும் 
அருகிருக்கும் கோலம் ஐயன்
திருக்கோலம் நலம் அருளும் 
வாழ்வில் வசந்த காலம்.. 10


நானுண்டு காவலுக்கு 
என்று வரும் தெய்வமே
நீயிருக்கக் குறையும் ஏது
கற்கு வேலும் சரணமே.. 11

இருபத்தோரு பரிவார
தெய்வங்களும் சரணமே
இதயத்திலே ஜோதியாக
சிவ மகனும் சரணமே.. 12

மாடசாமி மனம் கூடி
மகிழ்ந்திருக்க வரணுமே
கருப்பசாமி விருப்பசாமி
கை கொடுக்க வரணுமே.. 13

சிவஹரியின் புத்திரனே
சேவடிகள் சரணமே
செய்ததையும் பொறுத்தருளி
திருவருளும் தரணுமே.. 14 

செந்தூரின் அருகிருக்கும் 
செண்டாயுத தெய்வமே
சேர்ந்தவர்க்குக் காவலாக
நின்றிருக்கும் தெய்வமே.. 15

ஆறுமுக வேலவனின்
அருகிருக்கும் ஸ்வாமியே
அருள் அரசைக் காண்பதற்குத்
தேடி வந்தோம் ஸ்வாமியே.. 16

ஆதரவே அருள் முகிலே
அடைக்கலமே அடைக்கலம்
நீதியனே ஜோதியனே
அடைக்கலமே அடைக்கலம்.. 17

வருந்துயரும் தீர்த்திடுவாய்
அடைக்கலமே அடைக்கலம்
பெருந்துயரில் காத்திடுவாய்
அடைக்கலமே அடைக்கலம்.. 18

வல்வினையும் அணுகாமல்
அடைக்கலமே அடைக்கலம்
தொல் பிணியும்  சேராமல்
அடைக்கலமே அடைக்கலம்..19

பகை பழியும் ஓட்டிடுவாய்
அடைக்கலமே அடைக்கலம்
வகையென்று வாழ்வுதர
அடைக்கலமே அடைக்கலம்.. 20

ஆருமில்லா வழிதன்னில் 
ஐயா நீ அடைக்கலம்
அன்னையாக தந்தையாக 
என்றென்றும் அடைக்கலம்.. 21


தாய்மடியாய் சாய்ந்திடவே
அடைக்கலமே அடைக்கலம்
தந்தையெனக் காத்திடவே
அடைக்கலமே அடைக்கலம்.. 22

கற்குவேல் ஐயனே
அடைக்கலம்
அடைக்கலம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. பாமாலை அருமை.  ஐயனை பணிந்து அருள் பெற்றுச்  செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தாங்கள் இயற்றிய பாமாலை பாட்டு நன்றாக உள்ளது. படித்து, கற்குவேல் ஐயனை வணங்கி பிரார்த்தித்தும் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. கற்குவேல் ஐயனே சரணம்.

    உங்கள் பாமாலை நன்று படித்துக் கொண்டோம்.

    "ஆருமில்லா வழிதனில் ஐயா நீ அடைக்கலம்"..... வணங்குகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆருமில்லா வழிதனில் ஐயா நீ அடைக்கலம்"...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  4. செண்டாயுத தெய்வம் காவல் இருப்பார், துணை இருப்பார் பாமாலை அருமை. பாடி ஐயனே சரணம் என தொழுது கொண்டேன்.
    அவர்தான் வழிகாட்டி, வழித்துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்தான் வழிகாட்டி, வழித் துணை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..