நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 17
வியாழக்கிழமை
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (1)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! வேதங்களைத் தன்னுடைமையாய்க் கொண்ட வேதியனே, புலியின் தோலினை ஆடை என அணிந்த தூயவனே, அழகாய் முடித்த நீள்சடையின் மேல் வளர் பிறையினைச் சூடியவனே - என்றெல்லாம் உன்னைப் புகழ்ந்து வாழ்த்தினால் குறையுடையருடைய குற்றங்களை மனதில் கொள்ளாமல் - அவர்களுக்கு அருள் புரிகின்ற பெருமானே!.. உன்னை வணங்கும் கொள்கையினால் உயர்ந்து நிறையுடையார் ஆகிய அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணிஇராப் பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (2)
திருநெடுங்களம் மேவிய இறைவனே!... வெண்ணிற அலைகள் புரளும் பெருங்கடலில் ஆரவாரத்துடன் பொங்கி எழுந்த நஞ்சினை - சின்னஞ்சிறு தினையின் அளவாக்கி, அதையும் கண்டத்தில் நிறுத்தி நீலகண்டனாக அருளிய தேவதேவனே!..
உன்னை மனத்தகத்தில் நிறுத்தி உனது புகழினைப் பாடியும் ஆடியும் அல்லும் பகலும் உன்னையே தியானித்து வாழ்ந்து வருகின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (3)
திருநெடுங்களம் மேவிய இறைவனே!.. நிமலா!... நீயே சரண்!.. - என, நின் திருவடிகளை வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்கு வந்த வலிய கூற்றுவனை - 'என் அடியவன் உயிரைக் கவராதே!.. - என்று உதைத்தருளிய பெருமானே!..
உன் பொற்றிருவடிகளை வழிபடுவதற்காக நறுமணம் மிக்க மலர்களையும் திருக்குடங்களில் தூய நீரையும் நாளும் சுமந்து வரும் அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
மலைபுரிந்த மன்னவன்தன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (4)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! மலையரசனின் திருமகளைத் திரு மேனியில் ஓர்பாதியாகக் கொண்டு மகிழ்பவனே!.. அலைபுரளும் கங்கையை விரிந்த சடையினுள் கொண்ட திருஆரூரனே!.. கபாலத்தில் பலியேற்று மகிழும் தலைவனே!..
உனது திருவடி நிழலின் கீழ் நின்று அநவரத தியானத்தால் உன்னை மறவாத அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் தாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (5)
திருநெடுங்களம் மேவிய இறைவனே!.. நற்குணமுடையவர்களும், தவநிலை தாங்கியவர்களும் - பலருடைய இல்லங்களிலும் பலி ஏற்கும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களைப் பாடி உன் திருவடிகளைத் தொழுது வணங்குகின்றனர். கரை கடந்த வெள்ளம் எனப் பொங்கிப் பெருகி வரும் அன்பினால் தலைவனாகிய -
உனது திருவடி நிழலை நீங்கி நிற்க இயலாத அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர்நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (6)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! வழிபடும் அடியார் பொருட்டு அவரவர் தன்மைக்கேற்ப விருத்தராக வேடந்தாங்கியும், பாலனாக இளமை வடிவங் கொண்டும் அருள் புரிந்து ஆட்கொள்பவனே! நான்கு வேதங்களையும் உணர்ந்த தலைவனே! நானிலம் வாழும் பொருட்டு நங்கை எனும் கங்கையை நறுமணம் கமழும் சடையின்மிசை மறைத்து வைத்துள்ள பெருமானே! கலைஞானங்களின் முதற் காரணனாகவும் மெய்ஞானங்களின் நிறைந்த பொருளானவனாகவும் திகழ்பவனே!..
உன் இணையடிகளின் புகழினை எல்லோரும் உணரும் வண்ணம் -
தாம் அறிந்த ஆடலாலும் பாடலாலும் பரவிப் பணிந்து - நாளும் பணி செய்து வாழ்கின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம்எரித்த மன்னவனே கொடிமேல்
வர சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (7)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்ட பெருமானே! அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டி அமைத்த அம்பினால் - அன்பருடனும் அடியாருடனும் பகை கொண்டு மாறுபாடுற்று திரிந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்துப் பொடியாக்கிய மன்னவனே! இடபக்கொடி உடைய ஏந்தலே!..
இதுவே மணம் நிறைந்த சந்தனம் என்று,
எம்பெருமான் அணிந்த திருநீற்றை விரும்பி அணிந்து மகிழும் அடியவர்களின்
இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்திஇராப் பகலும்
நின்றுநைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (8)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! காற்றில் ஆடும் கொடிகள் விளங்கும் மதில்களால் சூழப்பட்டு குன்றின்மேல் திகழ்வதாகிய இலங்கையின் அரக்கர் கோன் என்ற செருக்குடன் - திருக்கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சித்த இராவணனை அம்மலையின் கீழேயே அல்லலுறும்படி கால் விரலால் அடர்த்த பெருமானே!
இத்தகைய நின் பெருமையினைப் புகழ்ந்தும் வாய்மொழியாகிய தாய்மொழி கொண்டு - நல்ல தோத்திரங்களால் போற்றி,
இரவும் பகலும் உன்னையே நினைத்து நெஞ்சம் உருகி மனம் கனியும்
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
வேழவெண்கொம்பு ஒசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழஎங்கும் நேட ஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம்பு அணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியி
நீழல்வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (9)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! கம்சன் ஏவி விட்டதனால் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை ஒடித்த கண்ணபிரானாகிய திருமாலும், புகழ் விளங்கும் நான்முகனும், தங்களைச் சுற்றியுள்ள இடமெங்கும் தேவரீரைத் தேடி நின்றபோது இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்ற ஜோதியனே! பன்றியின் கொம்பினை மார்பில் அணிகலனாக அணிந்த பெருமானே!..
உனது பொன்னடி நீழலையே எண்ணி வாழ்கின்ற
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (10)
திருநெடுங்களம் மேவிய இறைவனே! உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணர்ந்து அறியாதவர்களாகி - தாம் கைக்கொண்ட தவநிலைக்கு சிறிதும் பொருந்தாமல் கொடுஞ்சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு உண்மைப் பொருள் இல்லாது ஒழுகும் சமண, சாக்கியர்களை விட்டு விலகி, அழியாப் புகழுடைய வேதங்களாலும், தோத்திரங்களாலும் உன்னைப் பரவி - உனது திருவடித் தாமரைகளை நெஞ்சில் வைத்து வாழ்கின்ற
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.. (11)
மேன்மேலும் வளர்ந்து பொலியும் சடைமுடியுடன் திகழும் பெருமான் மேவிய திருநெடுங்களத்தை - மூத்தோர் வாழும் பெரிய வீதிகளைக் கொண்ட சிரபுரம் எனும் சீர்காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றி வணங்கி, பனுவல் மாலை எனப் பாடிய,
திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் நலங்கொண்டு உணர்ந்து -
எம்பெருமானை வழிபட வல்லவர்களின் பாவங்கள் விலகும் என்பது உறுதியே!..
திருச்சிற்றம்பலம்
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
மேன்மைமிகு தருமபுர ஆதீனம் அருளிய - உரையை அனுசரித்து எழுதப் பெற்றது.
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
திருநெடுங்குளம் மேவிய இறைவன், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் தலைவன், அவன் தாள் வணங்கி அருள் பெறுவோம்.
பதிலளிநீக்குஅவன் தாள் வணங்கி அருள் பெறுவோம்.
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அனைவருடைய இடர்களையும் எல்லாம் வல்ல ஈசன் அகற்ற எனது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி வெங்கட்
திருநெடுங்களம் ஈசன் திருமுறைப்பாடல்கள் கண்டு பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஅவனருளை வேண்டி நிற்போம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி