நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 23, 2024

நினைவெல்லாம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 6
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

உயர்நிலைக் கல்வி..

ஒன்பது பத்து பதினொன்று என்ற மூன்று வகுப்புகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி.. 

அந்தப் பள்ளியில்
ஆறு ஏழு எட்டு என்ற மூன்று வகுப்புகளும் இருந்தன..

தமிழாசிரியர்களாக வந்தவர்கள் திரு K. குஞ்சிதபாதம் ஐயா அவர்களும்  வித்வான் பால சுந்தரம் ஐயா அவர்களும்...  
திரு குஞ்சிதபாதம் அவர்கள் ஆங்கில வகுப்புகளும் நடத்துவார்.. 

திரு தங்கராசன்  M.A., திரு வைரக்கண்ணு M.A., எனும் முது நிலை ஆசிரியர்கள் 9B 10B 11B வகுப்புகளில் தமிழ் நடத்துவர்.

நான் மூன்று வருடங்களுமே
9A 10A 11A ( மாணவர்களுடன் மாணவியரும் பயிலும்) வகுப்புகளிலேயே இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது

9A 10A 11A  என்ற மூன்று நிலைகளிலும் வகுப்பு (ஆங்கில) ஆசிரியராக வந்தவர் திரு .A.சுப்ரமணியன் ஐயா அவர்கள்..

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ண மூர்த்தி M.A., அவர்கள்..  மிகவும் கண்டிப்பானவர்.. 

ஒன்பதாம் வகுப்பின்
மனப் பாடப் பாடல்கள் இன்றைய பதிவில் :


நாராய் நாராய்
 செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப்
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் மனையும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனையாளைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே..
 -: சத்திமுற்றப் புலவர் :-

தமிழரின் பரந்த அறிவுக்கு இப்பாடலும் சான்று.


ஏழையாளன்... 

ஏதோ ஒரு சூழ்நிலையில்
நாடு விட்டு நாடு பொருள் தேடச் சென்று  -  உடலையும் மனதையும்  வாட்டுகின்ற 
வாடைக் காற்றிலும்
பனிச் சாரலிலும் சிக்கிக் கொண்டு விட்டான்..  

மேல் துணி இல்லாமல் வாடுகின்ற காலத்திலும் கூட வலசை எனும் பறவைகளின் இடப் பெயர்வினைக்  கவனிக்கத் தவறவில்லை.. 

இணையாகப் பறக்கின்ற பறவைகளை நட்புடன் அழைத்து மழைக்குத் தாங்காத இற்றுப் போன கூரைக் குடிசையில் - பல்லியின் சகுனத்திற்காகக் காத்திருக்கும்
தனது அன்பு மனையாளுக்குத் தூது அனுப்புகின்றான்..

பாண்டிய நாட்டில் தான்  - பத்திரமாக இருப்பதைச் சொல்லி அனுப்புகின்ற போதும் வீட்டின் அடையாளத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குத் தவறவில்லை.. 

அத்தோடு நிற்காமல் தமது ஊர்க் குளத்தில் விருந்தினராகத் தங்கிச் செல்லும் படியும் அந்த நாரைகளிடம் கேட்டுக் கொள்கின்றான்.. 

என்னே மாண்பு!..

இதைத் தான் வறுமையிலும் செம்மை என்றனர்..

வாடைக் காற்று உடலை வாட்டுகின்ற பனிக்காலத்தில் புலவர் மதுரையில்
இருக்கின்றார். 

வானில் வடக்கு நோக்கி செங்கால் நாரைகள் பறந்து கொண்டிருக்கின்றன..

செங்கால் நாரை  வடக்கே சைபீரியாவில் இருந்து தெற்கே  வந்து குமரியில் நீராடி மகிழ்ந்து விட்டு திரும்புகின்ற காலம் மார்கழி
(நவம்பர்)..

ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்ற சொல் வழக்கும் நம்மிடையே இருக்கின்றது..

பனிக் காலம் என்பதும் இத்துடன் சரியாகப் பொருந்துகின்றது..

அரிய செய்திகளுடன் கூடிய இனிய தமிழ்ப் பாடல்..

இத்தனை நயம் மிக்க பாடலை இயற்றிய புலவரது பெயர் தெரியாததால் அவர் குறிக்கின்ற சத்தி முற்றம் எனும் ஊர்ப் பெயரே குறியீடு ஆயிற்று.. 

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ளது  சத்திமுற்றம்.. 
**

வீட்டு வாசலில் சிவனடியார்.. உணவு கேட்டு  நிற்கின்றார்.. 

மழை வேறு தூறிக் கொண்டு இருக்கின்றது..

அடியாருக்குக் கொடுக்கத் தக்கதாக வீட்டில் எதுவுமே இல்லை.. 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள - பெருமழை பிடித்துக் கொண்டது..

அப்போது தான் இளையான்குடி மாறனாருக்கு காலையில் வயலில் நெல் விதைத்தது
நினைவுக்கு வருகின்றது.. 

அந்த நெல்லைத் திரட்டி அள்ளிக் கொண்டு வந்தால் அடியாருக்கு ஏதாவது செய்து கொடுக்கலாமே!..

உற்சாகத்துடன் இரவுப் போதில் மழையின் ஊடாக ஓடுகின்றார் வயலை நோக்கி..

அப்படியான இரவுப் பொழுதை சேக்கிழார் பெருமான்  இப்படி வர்ணிக்கின்றார்..

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிருளின் கணங் கட்டுவிட்டு
உருகுகின்றது போன்றது உலகெலாம்.. 15

ஆகாயத்தினின்றும் பெருமழை பொழிகின்றது.. எதிரிலிருக்கும் ஏதொன்றையும் அறிய இயலாதபடி இருள் சூழ்ந்த நள்ளிரவு.. 
கரிய நிற மை மேலும் கருகியதைப் போல இருளானது உருகி நிறைந்திருக்கின்றநிலையில்  ஊரும் உலகமும் இருந்தன..

பெரிய புராணப் பாடலை இப்படி விளக்குகின்ற போது - பாலசுந்தரம் ஐயா அவர்களின் கண்கள் குளமாகி இருக்கும்..

ஐயா அவர்கள் தன் விருப்பமாக துணைப் பாட நூலில் இருந்து நடத்திய மெய்ப்பொருள் நாயனாரின்  மெய்த் திறம் கூறுகின்ற திருப்பாடல் இது..


கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேடமே மெய்ப் 
பொருளெனத் தொழுது வென்றார்.. :-
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுரம் ஆதீனம்..
**
நினைவெல்லாம் தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க 

ஓம் 
நம சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. பள்ளியின் பெயரைச் சொல்லவில்லையே...   எந்த ஊரில் என்றும் சொல்லவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியின் பெயர் விவரம் தனிப் பதிவாக வரும்..

      இந்த ஊரும் பள்ளியும் எனது சிறுகதைகள் சிலவற்றில் வந்திருக்கின்றன.

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அந்தோணியார் பள்ளியில் A வகுப்பு என்றாலே ஆங்கில மீடியம்.  ஆனால் சோகம், கோ எஜுகேஷன் கிடையாது!  பக்கத்து காம்பௌண்ட் சுவர் வழியாக கான்வென்ட் மாணவிகளை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்!!!

    பதிலளிநீக்கு
  3. நாராய் நாராய் தவிர ஏனைய பாடல்கள் எனக்கு பரிச்சயமில்லை! அல்லது நினைவில்லை!

    பதிலளிநீக்கு
  4. நினைவெல்லாம் மிக அருமை.
    பகிர்ந்த பாடல்கள் படித்தது நினைவுகளில் .
    சக்திமுற்றம் கோயில் நினைவுக்கு வருகிறது.
    இளையான் குடி மாறனார் , மெய்பொருள்நாயனார் கதைகளை பள்ளியில் நாடகமாய் போட்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க

      நீக்கு
  5. இனிமையான நினைவுகள். எங்கள் தமிழாசான்கள் குறித்த நினைவுகள் போற்றத்தக்கவையாக இருந்ததில்லை. தமிழ் மீது அதீத பற்று என்று சொல்லிக்கொண்டு வகுப்பில் ஒரு ஆங்கில வார்த்தை சொன்னாலும் விரல் முட்டிகளை பேர்த்துவிடுவார். எல்லாவற்றுக்கும் அடி தான் அவருக்குத் தெரிந்தது. தமிழ் மீது பற்று இருந்தாலும் அவரை பிடிக்காமல் போயிற்று - 9-10-ஆம் வகுப்புகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதெல்லாம் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தான் பேசிக் கொள்வோம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  6. நாராய் நாராய் செங்கால் நாராய் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பாடல்.
    என் சின்ன அண்ணன் இந்த மனப்பாடப் பாடலை மனனம் செய்யும்போது, காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் நாளாம் நாளாம் திருநாளாம் மெட்டில் பாடுவார்!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பள்ளிநினைவுகள் அருமை.

    செங்கால் நாரை பாடல் எங்கள் நினைவுகளிலும்வருகிறது.. எமக்கு பெண் பாடசாலைதான். ஆசிரியரும் பெண்தான் திருமணம் ஆகாதவர் நீங்கள் கூறியது போல உருகி உருகி சமயபாடம்,, தமிழ் பாடம் எடுப்பார் .

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்கள் நினைவெல்லாம் பதிவாகி இருப்பது அருமையாக உள்ளது. நாராய், நாராய் பாடலை பள்ளியில் கற்றதை மறக்க முடியுமா? அழகான பாடல், நல்ல விளக்கம். இப்போதும் படித்து மகிழ்ந்தேன். சிவனடியராகிய இளையான்குடி மாறநாயினாரரையும் மறக்க இயலாது. கதை கேட்கும் போதெல்லாம் நினைவெல்லாம் இனிக்கிறது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..