நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 14
ஞாயிற்றுக்கிழமை
தொகுப்பிற்குத் துணை :-
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்.
மற்றும் கூகிள்..
திருத்தலம்
தில தர்ப்பணபுரி
திலதைப்பதி
தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் - ஸ்ரீ ராம லட்சுமணர் - தில தர்ப்பணம் (திலம் - எள்) செய்த தலம்..
ஸ்ரீ ராமர் - வைத்து வணங்கிய நான்கு பிண்டங்களும் லிங்கங்களாக மாறின - என்பதாக தலபுராணம்..
அந்த லிங்கங்களை மூலஸ்தானத்தின் பின்புறம் தரிசிக்கலாம்..
ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர் திருமேனிகளும் அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்களும் இங்கே விளங்குகின்றன..
கிழக்கு நோக்கி விளங்குகின்ற சந்நிதியில் -
ஸ்ரீ முத்தீஸ்வரர்..
தெற்கு நோக்கியவளாக அம்பிகை ஸ்ரீ ஸ்வர்ணவல்லி..
ஸ்ரீராமர் வழிபட்ட இத்திருக்கோயிலின் - மேற்கு கோட்டத்தில் விளங்குகின்ற மஹா விஷ்ணு - ஸ்ரீ வரதராஜப் பெருமாள் என, பூதேவி ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியிலும் திகழ்கின்றார்..
தவிர, ஸ்ரீ ராமர் திருமேனி இலங்குவதும் இக்கோயிலின் சிறப்பு..
திலதர்ப்பணபுரி என்பது ஊரின் பெயராக அமைய, கோயிலின் பெயர் மதிமுத்தம் என்பதாகவும் ஆன்றோர் கருத்து..
ஞானசம்பந்தப் பெருமான் மதிமுத்தம் எனக் குறித்து பதிகம் அருளியதால் - இறைவன் மதிமுத்தீசர் - ஸ்ரீ முத்தீஸ்வரர்..
ஆன்மாக்களுக்கு முக்தி நல்குவதால் ஸ்ரீ முக்தீஸ்வரர்..
திலதைப்பதி என்பதே செதலபதி - என, மருவி வழங்குகின்றது..
தீர்த்தங்கள் - சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் அரசிலாறு என்றெல்லாம் விளங்குகின்றன..
தல விருட்சமாக மந்தாரை மரம்.. மருத்துவ குணம் மிக்கது..
மந்தார இலைகளை சேர்த்துத் தைத்து அதில் உணவு உண்ணும் வழக்கமும் பலகாரங்கள் வைத்துத் தரும் வழக்கமும் நம்மிடையே இருந்திருக்கின்றது...
(அந்தி மந்தாரை என்றொரு செடி வகையும் உள்ளது)
திருக்கோயிலுக்குப் பின்புறத்தில் அழகேசர் சந்நிதி..
கோயிலுக்கு எதிரில் ஆதி விநாயகர் சந்நிதி..
திலதைப்பதிக்கு செல்லும் வழியில் தான் கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி கோயில்..
திருஞானசம்பந்தர் திருப்பதிகம் அருளிச் செய்த திருத்தலம்..
இந்தத் திருத்தலம்
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில், பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ.,
தொலைவில் கூத்தனூரை அடுத்து அமைந்துள்ளது..
பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்பபணம் முதலான கடமைகளைச் செய்வதற்குரிய தலம்..
இங்கு அமாவாசை, திதி என்று குறிப்பிட்ட நாள் இல்லாமல் எல்லா தினங்களிலும் சிரார்த்தம் தர்ப்பணம் செய்யலாம் என்கின்றனர்..
மூதாதையர்களுக்கு விடுபட்ட தர்ப்பண வழிபாடுகளை இங்கே செய்யலாம்..
மஹாளய பட்சம் தொடங்கியிருக்கும் இவ்வேளையில் - அவரவர் சூழ்நிலையை உத்தேசித்து - ஏதாவதொரு நாளில் இங்கு வந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது..
கங்கைதிங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல்பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்த அழகார் மதிமுத்தமே.. 4
கங்கை, பிறை, வன்னி, எருக்கு , கூவிளம் , நாகம் ஆகியவற்றைத் தமது விரிசடையில் வைத்த விகிர்தனாகிய சிவபெருமானின் தலமாகத் திகழ்வது -
மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற அரிசிலாறு சூழ்ந்ததும் மேகங்கள் தவழும் சோலைகள் நிறைந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம் ஆகும்..
புரவி ஏழும் மணிபூண்டு இயங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே..5
ஏழு குதிரைகள் இழுக்க மணிகள் ஒலிக்க கொடி பறக்கும் தேரைச் செலுத்துகின்ற சூரியன் நின்று இறை வழிபாடு செய்கின்ற தலம் - ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் சோலைகளை உடைய திலதைப்பதியின் மதிமுத்தம் ஆகும்..
ஆறுசூடி அடையார் புரம் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க்கு இடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே.. 2/118/7
கங்கையைச் சூடியவர் திரிபுராதிகளின் கோட்டைகளை அழித்தவர். பொற்கொடியாகிய உமையாம்பிகையை ஒரு பாகத்தில் உடையவராகிய இறைவர்க்கு உரிய தலம் - தேன் மலர்ப் பொழில்கள் நிறைந்ததும் வற்றாத அரிசிலாற்றினால் சூழப் பெற்றதுமாகிய திலதைப்பதியில் உள்ள அழகிய மதிமுத்தம் ஆகும்..
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
நல்ல தகவல்கள். இன்று மஹாபரணியில் நாங்கள் மகாளயபட்ச தர்ப்பணம் கொடுத்து விடுகிறோம். பரணி இன்றும் நாளையும் இருப்பதாகச் சொன்னார்கள். சாதாரணமாக சதுர்த்தசியில் தருவோம்.
பதிலளிநீக்குநாளைக்குத் தானே பரணி..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
நிறைய விவரங்களுடன் மீண்டும் ஸ்ரீ முத்தீஸ்வரர் கோவில் .
பதிலளிநீக்குதலவரலாறு, மற்றும் விவரங்கள் அருமை.
பாடலை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
சாரின் தம்பி வீட்டில் இருக்கிறது, மந்தாரையை கொழுகட்டை மந்தாரை என்பார்கள். இலையும் பூவும் நல்ல பெரிதாக இருக்கும் நல்ல மஞ்சள் கலராக இருக்கும்.
மந்தாரை இலையில் சாப்பிடுவதும் உடலுக்கு நல்லது..
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
ஒரு தரம் போயிட்டு வந்தோம். அருமையான விபரங்களுடன் கூடிய நல்லதொரு தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி. மந்தார இலையில் முன்னெல்லாம் மதுரை ஓட்டல்களில் பகோடா கட்டித் தருவாங்க. இப்போல்லாம் மெல்லிசு ப்ளாஸ்டிக் பேப்பர் தான். :(
பதிலளிநீக்கு