நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 21, 2023

சக்தி லீலை 7


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 4
சனிக்கிழமை

மங்களகரமான நவராத்திரியின்
ஏழாம் நாள்


இசையாய் தமிழாய் இருப்பவனே!..
என்று புகழ்வது தமிழ்.

அவன் மட்டுமல்ல அவளும் அப்படித்தான்!...

நவராத்திரி நாட்களில் இன்றும் நாளையும் நாளை மறுநாளும்
ஜகன் மாதாவாகிய அம்பிகை -
ஸ்ரீ சரஸ்வதியாக வழிபடப்படுகின்றாள்..

ராஜ மாதங்கி எனும் திருக்கோலத்தில் அம்பிகை வீணையுடன் திகழ்கின்றனள்..

ஈசனின் திருக்கோலம் வீணாதர தக்ஷிணாமூர்த்தி..

மனம் மாறி புறச் சமயம் சார்ந்த போதும் - 
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்.. - என்கின்றார் அப்பர் பெருமான்..

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே.. 
என்றும்
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி..
என்றும் -
அப்பர் பெருமான் இறைவனைப் போற்றுகின்றார்..

இப்புகழுரைகள் ஐயனின் திருமேனியில் சரிபாதியாக விளங்குகின்ற அம்பிகைக்கும் உரியன..

கும்பகோணத்திற்கு அருகில் இன்னம்பூர் எனும் தலத்தில் இறைவன் எழுத்தறிவித்த நாதன் என்று திகழ்கின்றார்..

அம்பிகை பால் கொடுத்ததன் விளைவாக, சம்பந்தர் - ஞானசம்பந்தர் என்றாகி தலங்கள் தோறும் கைத் தாளம் இட்டு திருப்பதிகங்கள் பாடி  வரும் வேளையில் - பொன்னால் ஆன தாளம் ஒன்றினை ஞானசம்பந்தருக்கு வழங்கினார் இறைவன்.. 

இருந்தும் அந்தப்  பொற்றாளத்தில் ஒலி உண்டாகவில்லை.. 

அப்போது அந்த பொற்றாளத்தினுள் ஓசை - ஒலியாகப் புகுந்து பொலிந்தவள் அம்பிகை..

திருக்கோலக்கா எனும் இத்தலத்தில் அம்பிகையின் திருப்பெயர் ஓசை கொடுத்த நாயகி..


பண் களிக்கும் குரல் வீணையும் கையும் ..

நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகி..

- என்றெல்லாம் பட்டர் புகழ்கின்றார்..


சரஸ்வதியைப் போற்றி வணங்கி  ஏழை எளியோர்க்கு இன்முகம் காட்டி  சிற்றுயிர்களை ஆதரித்து இயற்கை வளங்களை இயன்ற வரை காத்தலே எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு நாம் செய்யும் தொண்டு..

இந்நாட்களில் சரஸ்வதி ஸ்தோத்திரம் சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை முதலான ஞான நூல்களின் வழியாக ஞான சரஸ்வதியை சிந்தித்திருப்பது நலம் தரும்..


வெள்ளைக் கமலத்திலே அவள் 
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான் நன்கு 
கொட்டு நல் யாழினைக் கொண்டிருப்பாள்..

வாணியைச் சரண் புகுந்தேன்
அருள் வாக்களிப்பாள் எனத் திடம் மிகுந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்..
-: மகாகவி :-
*

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே 
காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி 
சித்திர் பவது மே சதா
**
ஓம் 
ஞான ஸரஸ்வத்யை நம

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய 
 திருச்சிற்றம்பலம்
***

10 கருத்துகள்:

  1. மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணியை போற்றி ஞானமெல்லாம் பெற முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  3. ஓம் சக்தி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  4. சரஸ்வதி படங்கள், பாடல்கள் எல்லாம் அருமை.
    மகாகவி பாடலை பாடி சரஸ்வதி அம்மனை வேண்டி கொண்டேன். இன்று சகலகலாவல்லி பாடலை பாடினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..
      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் அன்னையை பாடி துடிப்பும்.

    எல்லாம் வல்ல கல்வி செல்வத்தை தருமாறு வேண்டி துதிப்போம்.

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கோயில்களூக்கு எல்லாம் போயிட்டு வந்த நினைவுகள் வந்தன. சரஸ்வதி படங்கள் அழகோ அழகு. நம்ம வீட்டில் படிக்கும் பேத்திகளூக்காகக் கூத்தனூர் சரஸ்வதியிடம்பிரார்த்தித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..