நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 24, 2023

விஜயதசமி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 7
செவ்வாய்க்கிழமை

விஜயதசமி நன்னாள்

நவராத்திரிக்கு
பத்து நாட்கள் முன்பு பட்டியல் 
இடப்பட்டிருந்தவை வேறு..

நவராத்திரி நாட்களில்
வெளியானவை வேறு..

ஏன்.. என்ன காரணம்?..

ஸ்ரீமதி கீதா அக்கா அவர்கள் 
நவராத்திரி பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.. 
- என்று கருத்து எழுதியிருந்தார்கள்.. 

அடித்துப் பிடித்துக் கொண்டு 
அனைத்தும் மாற்றப்பட்டன..

தேவாரம் காட்டுகின்ற உண்மைகள் 
மற்றும் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றுடன்
அமைந்த தொடர் பதிவுகள் இந்த அளவில் 
நிறைவு பெறுகின்றன..

கீதா அக்கா அவர்களுக்கும் 
ஆதரவளித்த தங்களுக்கும் 
நெஞ்சார்ந்த நன்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..


திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் ஷண்முகக் கவிராயர் சிவகாமி தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்து - செந்தில் நாதனின் திரு அருளால் பேச்சு வரப் பெற்றவர்.. 

அப்போது பாடப்பட்டதே கந்தர் கலி வெண்பா..

மீனாட்சியம்மனைப் புகழ்ந்து பிள்ளைத் தமிழ் பாடியபோது  
மீனாட்சியே குழந்தையாய் வந்து  முத்து மாலை பரிசளிக்கப்பட்ட பெருமை உடையவர்..

சந்நியாசம் ஏற்று தருமபுரம் ஆதீனத்தின் தம்பிரான் ஆகி அங்கிருந்து வடக்கே காசிக்குப் பயணப்பட்டவர்..

இந்துஸ்தானிய மொழி தெரியாததால் ஷாஜஹானின் மகன் தாரா ஷிகோ என்பவனது சபையில் அவமதிக்கப்பட்டவர்..

வேற்று மொழியை அறிந்து கொள்வதற்காக 
கலைமகளைப் புகழ்ந்து பாடினார்.. 

அதுவே - சகலகலா வல்லி மாலை..

அந்த விநாடியே  தேவியின் அருளால் பன்மொழி வித்தகம் கைவரப் பெற்றார்..

மறு நாள் அரசவைக்குச் சென்றார்.. பின்னும் ஏளனம் தொடர்ந்திட அரசவையில் சிங்கம் ஒன்றினைத் தனது யோக சித்தியினால் வரவழைத்து அதன் மீது அமர்ந்து கொண்டு பேசினார்.. 

இதனால் அச்சமுற்ற தாரா ஷிகோ குமரகுருபரர் கேட்டபடி காசியில் சிவ மடம் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தான்..

அதன் பின்னர் -
காசியில் ஸ்ரீ கேதாரேஸ்வர் திருக்கோயிலை மீட்டெடுத்து திருப்பணி செய்தளித்தார்..

காசியம்பதியில் ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளுக்காக கருடன் வட்டமிட்டுப் பறந்தது எனில் மேலும் சொல்லுதற்கு எதுவும் உளதோ!..

ஸ்ரீ குமரகுருபரர் அருளியவையே - செல்வ முத்துக்குமர பிள்ளைத் தமிழ், நீதிநெறி விளக்கம்..
 

அனைவருக்கும்
விஜயதசமி நல்வாழ்த்துகள்

இன்று
ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அருளிச்செய்த
சகலகலாவல்லி மாலை

நன்றி - தமிழ் இணையம்

வெண்தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொலோ சக மேழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந்து உன் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவில் நின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகம் என்
நெஞ்சத் தடத்து அல ராததென்னே நெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே.. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பாற்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் உளங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல்வித்தை யும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனம் சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 9


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.. 10
*
சகலகலாவல்லி போற்றி போற்றி!..
**
 
ஓம் சிவாய திருச்சிற்றம்பலம் 
***

14 கருத்துகள்:

  1. அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.

    கீதா அக்காவுக்கு நன்றி. நவராத்திரி பதிவுகள் வித்தியாசமான முறையில் சிறப்பாக அமைந்திருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      கீதா அக்கா அவர்களுக்கு நன்றி.

      அன்பின் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  2. விஜயதசமி வாழ்த்துகல் துரை அண்ணா.

    பதிவுகள் மாற்றம் பெற்றதற்குக் காரணம் கீதா அக்காவா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இந்தத் தொகுப்புகளுக்கு
      கீதா அக்கா அவர்கள் தான் காரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      அன்பின் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  3. முன்னரே சொல்லி இருந்தீர்கள். இந்தப் பதிவுகள் எழுத நான் தான் காரணம் என. சிறப்பான கௌரவம். தற்காலங்களீல் என்னால் தான் எழுத முடியாமல் இருக்கு. என் மூலம் இன்னொருத்தராவது எழுதி இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      என்றும் தங்களது ஆசிகள் வேண்டும்..

      நீக்கு
  4. முழுதும் வித்தியாசமாகச் சிறப்பான முறயில் நவராத்திரிப் பதிவுகள் போட்டு அதை முடித்ததற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

      அக்கா அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. சகலகலாவல்லி மாலை படித்து அம்மனை தரிசனம் செய்து கொண்டேன்.
    குமரகுருபரர் வரலாறும் அருமை.
    கீதா சாம்பசிவம் கேட்டு கொண்ட படி நவராத்திரி சிறப்பு பதிவுகளை சிறப்பாக தொகுத்து அளித்து விட்டீர்கள்.
    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நவராத்திரி சிறப்பு பதிவுகளை சிறப்பாக தொகுத்து அளித்து.. //

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நவராத்திரி கால பதிவுகள் அருமை. உங்களுக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.

    அன்னை அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..