நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி முதல் நாள் திங்கட்கிழமை
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கின்ற
உத்தராயண காலத்தின் இரண்டாவது மாதமான மாசி முதல் நாள் - இன்று..
சிவநேசச் செல்வர்களுக்கு மிகவும் உகப்பான மாதம்..
மகா சிவராத்திரியும் மாசி மகமும் சிவாலயங்கள் பலவற்றில் கொடியேற்றம் உற்சவம் வீதியுலாக்களும் இந்த மாதத்தில் தான்!..
இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர்
அருளிச் செய்த திருப்பதிகம்..
(நன்றி: பன்னிரு திருமுறை)
தலம்
திரு ஐயாறு
இறைவன்
ஐயாறப்பர்
அம்பிகை
அறம் வளர்த்த நாயகி
தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
கங்கையின் மேலால்ன காவிரி..
காசிக்கு நிகரான
தலம்..
இதற்கு மேல் வேறென்ன வேண்டும்
ஆன்மாக்களுக்கு!..
நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 38
கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே..1
ஐயனாகிய ஐயாறப்பன் - தமது சடையில் கங்கை நதியையும் பாம்பினையும் இளந்திங்களையும் சூடிய வண்ணம் எல்லாத் திசையிலுள்ள மக்களும் தம்மைத் தொழுது வணங்குமாறு மங்கையொரு பாகராக மான் கன்றினையும் மழு ஆயுதத்தையும் அங்கையில் தீயையும் கொண்டு விளங்குகின்றார்..
பொடிதனைப் பூச வைத்தார்
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 2
ஐயனாகிய ஐயாறப்பன்
வெண்ணூலையும் நாகத்தையும் அணிந்து கூற்றுவன் தனது உயிரைக் கக்குமாறு உதைத்தவராக வடிவுடைய தேவியை ஒரு பாகமாக மார்பில் கொண்டு அடியவர்கள் திருநீறு பூசியவர்களாக - தமது திருவடிகளைத் தொழுமாறு வைத்தவர் ஆவார்..
உடைதரு கீளும் வைத்தார்
உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 3
ஐயனாகிய ஐயாறப்பன்
கீள் எனப்படும் ஆடை அணிந்து உலகங்களை நிலை நிறுத்தியவர்.. மழுப்படை ஏந்தியவர்.
தாருகா வானத்திலிருந்து
பாய்ந்து வந்த புலியின் தோலை உடுத்தவர். காளைக் கொடியை உடையவர் வெண்புரிநூல் அணிந்தவர் அடியார்கள் தம்மை அடைவதற்கு அருள் புரிபவர்..
தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயன் ஐயாறனாரே.. 4
ஐயனாகிய ஐயாறப்பன்
அடியார்கள் தம்மைத் தொழும்படி வைத்தவர்
தூய பிறை விளங்கும் சடையில் இண்டை எனும் மாலையை வைத்தவர்.. அடியவர்க்கு என்றும் இன்பம் பெருகிடச் செய்தவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய தேவியை ஒரு பாகமாக உடையவர். அனைத்து அண்டங்களின் தேவர்களாலும் வணங்கப்படுபவர்..
வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 5
ஐயனாகிய ஐயாறப்பன்
வானவர் தம்மை வணங்கச் செய்தவர். அடியவர்களுடைய கொடிய வினைகளை அழித்தவர். மயானத்தில் கூத்து நிகழ்த்துபவர். மன்மதன் சாம்பலாகும்படி செய்தவர். ஆவினில் ஐந்தினை வைத்தவர். அந்த ஐந்தினால் திருமுழுக்கு செய்விப்பவருக்கு அருளும் வைத்தவர். தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் ஆவார்..
சங்கணி குழையும் வைத்தார்
சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 6
ஐயனாகிய ஐயாறப்பன்
சங்கினாலாகிய காதணியை அணிந்தவர். அடியவர்கள் திருநீறு அணியும்படி செய்தவர். சூரியனை விளங்குமாறு வைத்தவர். எல்லா உலகங்களையும் படைத்தவர். இரவையும் பகலையும் உண்டாக்கியவர். கடுமையான வினைகள் அகலும் வழிகளை வைத்தவர். வேத ஆகமங்களை ஓதி உணர்வதற்காக வைத்தவர்..
பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 7
ஐயனாகிய ஐயாறப்பன்
பத்தர்களுக்கு அருள்பவர். காளையை வாகனமாக உடையவர். அடியவர் மனத்தை ஒருநிலைப் படுத்துபவர். அதனால் தன்னையே நினைக்குமாறு செய்தவர். அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவர். அந்நிலை எய்துதற்குரிய வழிகளையும் வகுத்து வைத்தவர். தாருகாவனத்து யானைத் தோலைப் கொண்டவராய் விளங்குகின்றார்..
ஏறுகந் தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 8
ஐயனாகிய ஐயாறப்பன்
காளை வாகனத்தைத் தமது விருப்பமாக வைத்தவர். இருப்பிடமாக இடைமருதூரையும் கொண்டவர். மணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவர். இடுப்பில் பாம்பினைக் கட்டியவர். உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். தாருகா வனத்தினர் தமக்கு எதிராக ஏவிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவர். கங்கை நதியை சடையில் வைத்தவராக விளங்குகின்றார்..
பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 9
அன்பு
ஐயனாகிய ஐயாறப்பன்
பல பூதகணங்களைத் தம்முடன் கொண்டவர். ஒளிவீசும் வெண்ணீற்றை அணிந்தவர். அடியார்களைப் பாட வைத்தவர். அந்தப் பாடல்களுக்கு கின்னரம் இசைக்க வைத்தவர்.. தமது திருவடிகளை வழிபடும்படிச் செய்தவர். தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவர்..
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 10
ஐயனாகிய ஐயாறப்பன் இரந்து நிற்பவருக்கு கொடுக்கும்படி
வைத்தவர். அப்படிக் கொடுத்தவர்களுக்கு நல்லருளை வைத்தவர். இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் மறைப்பவர்களுக்காக கொடிய நரகத்தையும் வைத்தவர். பரந்து விளங்கும் கங்கையை தமது சடையின் ஒரு பாகமாக வைத்தவர். கயிலாய மலையினைப் பெயர்த்த இராவணனுக்கும் அருளை வைத்தவர்..
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மீள் பதிவா? முதலில் போட்டது ஞாயிற்றுக்கிழமையா? ஞாயிறை திங்களாக்கவும்!
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ..
நீக்குஇந்தப் பதிவு முதலில் ஞாயிற்றுக்கிழமையில் தான் இருந்தது.. கிழமையை திருத்துவதில் கவனக் குறைவு..
குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
ஐயாறப்பா, அறம் வளர்த்த நாயகி இருவரும் வல்வினையை போக்கி அருள வேண்டும். பதிகம் பாடி ஐயனை வேண்டிக் கொண்டேன். அப்பர் திருவடிகளே போற்றி போற்றி.
பதிலளிநீக்குஇன்று மாமா அவர்களின் ஆண்டு நினைவு தினம். கோவையில் சாரின் சகோதரர்கள் பேரூர் போவார்கள்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபெரியவர் அவர்களை சிந்தை செய்வோம்..
நலம் வாழ்க..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
ஓம் சிவாய நம..
நீக்குவாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி..
நன்றி ஜி..
ஓ மாசி பிறந்துவிட்டதா! மாசிமகம், மஹா சிவராத்திரி, மற்றும் மாசி முடியும் அன்று காரடையான் நோன்பு!!
பதிலளிநீக்குஐயாறப்பர், அறம் வளர்த்த அம்பிகை துணை!
கீதா
//ஐயாறப்பர், அறம் வளர்த்த அம்பிகை துணை!..//
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..