நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கருடனுடன் கொண்டிருந்த பகை நீங்குவதற்காகத்
தவமிருந்த ஆதிசேஷன் ஆட்கொள்ளப்பட்ட நாள்
இன்று..
ஆதிசேஷனைத் தனது சயனமாகக்
கொண்டு - பெருமாள் சேவை சாதித்தருளிய
புண்ணிய நாள் இன்று..
மாசி மாத வளர்பிறை ஏகாதசி..
(மாசி 4 வியாழன்)
பதிவில் திவ்ய தேசக் குறிப்புகளைத் தரலாம் - என்று நினைத்த போது, சட்டென மனதில் தோன்றிய தலம் -
ஸ்ரீ கிருபா சமுத்ரப் பெருமாள் உறையும் - சிறுபுலியூர்..
சரி.. - என்று தல புராணத்தைத் தேடி வாசித்தால் - ஆதிசேஷனை ஸ்வாமி ஆட்கொண்ட நாள் மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி - என்றிருக்கக் கண்டு மனதில் பரவசம்..
அதன் விளைவே இந்தப் பதிவு..
சிவபெருமானின் ஆணைப்படி வியாக்ரபாத முனிவர் தரிசனம் செய்ததால் இவ்வூருக்கு சிறுபுலியூர் எனப் பெயர்..
திவ்ய தேச வழிநடை வரிசையில் இருபத்து நான்காவது திருத்தலம்..
மயிலாடுதுறை மாவட்டம் கொல்லுமாங்குடிக்கு அருகே (இரண்டு கி.மீ) தொலைவில் உள்ளது..
தன்னைத் தேடி வந்து வணங்கிய
வியாக்ரபாத முனிவருக்கு
பெருமாள் முக்தி நல்கியதாக ஐதீகம்..
பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களுக்கும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. விளைவு,
இருவருக்குள்ளும் வெறுப்பு வளர்ந்து பகையாக மாறியது.
இந்தப் பகை விலக வேண்டும் என்று ஆதிசேஷன்
தவமிருந்தார். அவரது தவத்துக்கு மனம் இரங்கிய
பெருமாள் மாசி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று அவருக்கு சேவை சாதித்ததாக தலபுராணம்..
மூலவர்
சலசயனப் பெருமாள்
உற்சவர்
கிருபா சமுத்ரப் பெருமாள்
தாயார்
திருமாமகள் (தயாலக்ஷ்மி)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மானஸ புஷ்கரணி
நந்தவர்த்தன விமானம்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெற்கு நோக்கிய சயனத் திருக்கோலம்.
உடன் வியாச முனிவரும் வியாக்ர பாத முனிவரும் கங்கையும் உள்ளனர்.
கருடாழ்வாருக்கும் ஆதிசேஷனுக்கும் பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால் பூமிக்கு கீழ் கருடன் சந்நிதியும் உயரமான இடத்தில் ஆதிசேஷன் சந்நிதியும் அமைந்துள்ளன..
வியாக்ர பாத முனிவருக்குத் துணையாக வந்து வழிகாட்டிய ஈசனுக்கு வழித்துணை நாதர் என்ற பெயரில் இவ்வூரில் அமைந்த கோயில் - இன்று கங்காள நாதர் கோயில் எனப்படுகின்றது..
நன்றி
படங்கள்: விக்கி
தலபுராணம்/ பாசுரங்கள்: தமிழ்வேதம்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருமொழி ஏழாம் பத்து
மங்களாசாசனத் திருப்பாசுரங்கள்..
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிகழல் தொழுவீர்
வெள்ளம் முதுபரவைத் திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணிதிகழும் சிறு புலியூர்ச் சலசயனத்து
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே.. 1 (1628)
தெருவில் திரிசிறு நோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்
திருவில் பொலிமறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உருவக் குறளடிகள் அடி உணர்மின் உணர்வீரே.. 2 (1629)
பறையும் வினை தொழுது உய்ம்மின்நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால்
சிறைவண்டுஇனம் அறையும் சிறு புலியூர்ச் சலசயனத்து-
உறையும் இறைஅடி அல்லது ஒன்று இறையும் அறியேனே.. 3 (1630)
வானார் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தானாகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார்பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆனாயனது அடிஅல்லது ஒன்று அறியேன் அடியேனே.. 4
(1631)
நந்தா நெடுநரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுதுஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை அடியாய் உனதுஅடியேற்கு அருள் புரியே.. 5 (1632)
முழுநீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார்அவர் கண்வாய் முகம் மலரும்
செழுநீர்வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும் நீர்மையது உடையார் அடி தொழுவார் துயர் இலரே.. 6 (1633)
சேய்ஓங்கு தண் திருமாலி ருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்குஉரையாய் இது மறை நான்கின்உளாயோ?
தீயோம் புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ? உனதுஅடியார் மனத்தாயோ? அறியேனே.. 7 (1634)
மையார் வரிநீல மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உனகழலே தொழுது எழுவேன் கிளிமடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐவாய் அரவணைமேல் உறை அமலா அருளாயே.. 8 (1635)
கருமாமுகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெருமால் வரை உருவா பிறஉருவா நினதுஉருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடல்அமுதே உனது அடியே சரணாமே.. 9 (1636)
சீரார் நெடுமறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஏரார்முகில் வண்ணன்தனை இமையோர் பெருமானை
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன்ஒலி மாலை
பாரார் இவை பரவித்தொழப் பாவம் பயிலாவே.. 10 (1637)
-::-
ஏகாதசி நாளாகிய இன்று சிறுபுலியூர் திவ்ய தேசத்தை சிந்தித்திருக்கச் செய்த இறைவனுக்கு நன்றி..
திருமங்கையாழ்வார் திருவடிகள்
போற்றி போற்றி..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***
ஏகாதசி தினத்தன்று எங்களுக்கும் அந்த திவ்யதேசத்தை நினைக்கச்செய்து படிக்கச்செய்த உங்களுக்கும் எங்கள் நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குநலம் வாழ்க..
பாசுரங்களை பாடி சலசயனப்பெருமாளையும் தாயார் தயாலக்ஷ்மியையும் வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஇந்த தலத்தை தரிசனம் செய்து இருக்கிறோம்.
நான் பதிவிடும் போதே நினைத்தேன்... நீங்கள் தரிசனம் செய்து இருப்பீர்கள் என்று..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
இது புதிய தகவல். அறிந்ததில்லை. சிறுபுலியூர் சலசயனத்து தரிசனம் நன்று, துரை அண்ணா,
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குநலம் வாழ்க..
தரிசித்து கொண்டேன் நன்றி ஜி
பதிலளிநீக்குவாழ்க வையகம்
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குவாழ்க வளமுடன்..
சில மாதங்கள் முன்பு (3 மாதங்களுக்கும் குறைவு) இந்தத் தலத்தைத் தரிசித்தேன் (இரண்டாம் அல்லது மூன்றாம் முறையாக). சிறிய, சயனகோலப் பெருமாள். மிக அழகு. சென்ற மாதத்தில் மனைவி, பெண்ணுடன் சென்றிருந்தபோது, நேரமின்மையால் (அவங்க ஒரே நாளில் காலையில் கும்பகோணம் சென்று, திருவிண்ணகரில் 2 மணிவரை இருந்து பிறகு இரவு 6:30 மணி வண்டியில் திரும்பும்படியாக டிக்கெட் போட்டிருந்தனர். அதற்கு ஏற்றபடி, பேருந்து 2 மணி நேரம் தாமதமாக கும்பகோணம் சென்று என்னை ஆராவமுதன் கோவிலுக்குக்கூடப் போகமுடியாதபடி செய்துவிட்டது) வேறு மூன்று கோவில்களுக்கு மாத்திரம் சென்றோம்.
பதிலளிநீக்குதாங்கள் இன்னும் வரவில்லையே - என்று இருந்தேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
ஆதிசேஷனைக் காத்த நாராயணன் பாதம் பணிகிறோம்.
பதிலளிநீக்குநாமும் பணிவோம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
வாழ்க நலம்.