நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 28, 2013

பம்பையில் ஆராட்டு

சபரிமலை பங்குனி உத்திரத் திருவிழா!

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளைப் போலவே - பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி அன்று காலை பத்து மணி அளவில் ஸ்ரீகோயில் முன் மண்டபத்தில் தந்திரிகளின் கொடிப்பட்ட பூஜை முடிந்ததும் மேளம் தாளம் முழங்க கொடிப்பட்டம் பவனியாக வந்தது.

நெற்றிப் பட்டத்துடன் அலங்காரமாக விளங்கிய யானை கொடிமரம் முன் வந்து நிற்க பக்தர்களின் சரண கோஷ முழக்கத்துடன் தந்திரி கண்டரரு ராஜீவரரு தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றினார். 


கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது.

அன்று முதல் ஒன்பதாம் நாள் திருவிழா வரை தினமும் உச்சபூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி,  இரவு அத்தாழபூஜைக்கு பின்னர் ஸ்ரீபூதபலி ஆகியன நடைபெற்றன. ஐந்தாம் திருவிழா முதல் தினமும் இரவு ஒன்பது மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஸ்வாமி  எழுந்தருளினார்.

ஸ்வாமியின் பிறந்த நாளான உத்திரத்தையொட்டி ஸ்ரீகோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஒன்பதாம் நாளான 26-ஆம் தேதி பள்ளிவேட்டைக்காக ஸ்வாமி சரங்குத்திக்கு எழுந்தருள - நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்ரீகோயிலுக்கு எழுந்தருளிய ஸ்வாமி ஸ்ரீகோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி கொண்டார். 

நேற்று 27-ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து கோயிலுக்குள் ஸ்வாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் கணபதி ஹோமம் வழக்கமான நெய்யபிஷேகம் மற்றும் ஆராட்டு பலி பூஜைகள் நடைபெற்றன. 

காலை ஏழு மணியளவில் நடை அடைக்கப்பட்டது. பம்பையில் ஆராட்டுக்காக யானை மீது ஸ்வாமி மேள தாள வாத்திய முழக்கத்துடன் பக்தர்கள் புடை சூழ, பம்பை  ஆற்றுக்கு எழுந்தருளினார்.


மதியம் 12.30 மணி அளவில் பம்பை நதிக்கரையை வந்தடைந்ததும் பம்பை திருவேணி சங்கமத்தில் ஆராட்டு நடைபெற்றது. ஸ்வாமிக்கு மஞ்சள் காப்பு நடைபெற்றது. தந்திரியும், பூஜாரிகளும் ஸ்வாமி விக்ரகத்துடன் பம்பையில் மூழ்கி எழுந்தனர்.  

மாலை மூன்று மணி வரை பம்பை கணபதி கோயிலில் எழுந்தருளிய ஸ்வாமியை பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பம்பையில் தரிசனம் நிறைவுற்ற பின்,  பறை வழிபாடு சமர்ப்பணம் நடைபெற்றது.

அதன்பின் - சன்னிதானத்துக்கு ஸ்வாமி எழுந்தருளினார். பத்து மணி அளவில் சன்னிதானம் வந்தடைந்ததும் சிறப்பு பூஜை தீபாராதனைகளுடன் திருக்கொடி இறக்கப்பட்டதும் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்றது.

திருவிழாவையொட்டி - நெய்அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ரகலச  அபிஷேகம்,  உதயாஸ்தமன பூஜை, படிபூஜை -  என  பூஜைகள் நடந்துள்ளன.

சித்திரை விஷூ திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி மீண்டும் திருநடை திறக்கப்படும்.

பூதநாத சதானந்த சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம: 

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..