நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 25, 2013

ஸ்ரீ நாடியம்மன்

பட்டுக்கோட்டை என்றவுடன் முதலில்  நம் நினைவில் தோன்றுபவள் அங்கே குடியிருக்கும் அன்னை அருள்மிகு நாடியம்மன் தான்!...


பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் சர்வ சாதாரணமாக மக்களின் பெயர்கள் ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி...

இந்த அன்னையின் திருப்பெயரை ஒட்டியே சூட்டப்பட்டிருப்பது ஒன்றே இவளுடைய பெருமையைக் கூறும்.

மழவராயர்கள் எனும் ராஜவம்சத்தினர் பட்டுக்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு, .

ஒரு சமயம் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் இவ்வழியே இராமேஸ்வரம் செல்லும் போது - விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்..

எந்த வைத்தியம் செய்தும் குணமாகாத நிலையில் தஞ்சை மாரியம்மனை வேண்டிக்கொள்ள - அடுத்த சில மணித்துளிகள் நோய் நீங்கப்பெற்றது..

அந்த நன்றியின் விளைவால் -

அங்கேயே - அன்னை நிலை கொள்ளும்படி அவளுக்கு ஒரு ஆலயத்தினை அமைத்தார் மன்னர்.

நாடியம்மன் எனத் திருப்பெயர் சூட்டப்பட்டது அவளுக்கு!..

அன்று நாடி வந்து நலிந்தோர்க்கு அருள் புரிந்த அன்னை  - இன்றும் தன்னை நாடி வருபவர்க்கும் தேடி வருபவர்க்கும்  - தேடாமல் திரிவார்க்கும் கூட, ஓடி வந்து அருள் புரிபவளாக விளங்குகின்றாள்!...

பங்குனி உத்திரத்தில் காப்புக் கட்டுதலுடன் நாடியம்மனுக்கு பங்குனிப் பெருந் திருவிழா தொடங்குகிறது. சில சமயங்களில் இந்தத் திருவிழா சித்திரை மாதத்திலும் தொடரும். 

திருவிழா காலங்களில் அம்மன் தனது ஆலயத்தை விட்டுக் குடிபெயர்ந்து பெரியகடைத் தெருவின் நடுவிலுள்ள மண்டகப்படி மண்டபத்தில் குடியேறி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் பகலில் பல்வேறு திருக்கோலங்களில் விளங்குகின்றாள்.

இரவில் அம்மன் - காமதேனு, யானை, அன்னம், பூதம், ரிஷபம், குதிரை என - வாகனங்களிலும் பல்லக்கிலும் அலங்காரமாக நகர்வலம் வருகிறாள்.  

வெண்ணைத்தாழியின் போது அம்மன் ஸ்ரீகிருஷ்ணனைப் போல,

பல்லக்கில் வெண்ணெய்க் குடத்தை அணைத்த கோலத்தில் வீதிவலம் வரும்போது,

பக்தர்கள் பட்டுத்துணிகளை வாங்கி காணிக்கை வழங்குகின்றார்கள். 

திருவிழாவினை ஒட்டி நகரமே பெருமகிழ்வுடன் திகழும். தினமும் மாலை வேளைகளில் மண்டகப்படி மண்டபத்தின் அருகில் இன்னிசை விருந்தும் நடைபெறும்.

மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் அம்மனின் ஐம்பொன் உற்சவத் திருமேனி திருவிழா காலங்களில் மட்டும் பெரிய கடைத் தெருவில் உள்ள மண்டகப்படிக்குக் கொண்டு வரப்படும். 

இந்த விழாவையொட்டி, நாடியம்மனுக்கு கோட்டை பெருமாள் கோயில் சீர்வரிசை வரும்..

பங்குனிப் பெருந்திருவிழாவில் நாடியம்மனுக்கு அணிவிக்கப் பெறும் வரகரிசி மாலை தான் பிரதானம்.

வரகரிசி மாலை சூடும் வைபவத்தை நள்ளிரவிலும் விழித்திருந்து, சுற்றுப்புற மக்கள் பெருந்திரளாகக்  கண்டு மகிழ்ந்து நாடியம்மனைத் தரிசித்துச் செல்வர்.

நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவள் நாடியம்மன். சுற்று வட்டாரத்தில் நாடியம்மனை வணங்காமல் பக்தர்கள் எதையும் தொடங்குவது இல்லை.  

இவ்வூர்  மக்களும் சுற்று வட்டார மக்களும் நாடியம்மன் திருவிழா எப்போது வரும் என்று காத்திருப்பார்கள் என்றால் அந்த அளவுக்கு நாடியம்மன் மக்களைக் கண் போல காத்திருக்கின்றாள் என்பது விளங்கும். 

நல்லருள் வழங்கி, நலம் பல கொடுக்கும் நாடியம்மனை நாமும் வணங்கி வளம் பெறுவோம்!...

நாடியம்மன் திருவடித் தாமரைகள் 
போற்றி!... போற்றி!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..