நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


செவ்வாய், மார்ச் 19, 2013

குரு ராகவேந்திரர்

குருநாதர் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் அவதார தினம் இன்று.

சிதம்பரத்திற்கு அருகிலுள்ள புவனகிரியில் திம்மண்ணபட்டர் , கோபிகாம்பாள் என்னும் தம்பதியர் செய்த அருந்தவத்தின்  பயனாக பங்குனி மாதம்  மிருக சீரிஷ நக்ஷத்திரம், சுக்ல ஸப்தமி - வியாழக்கிழமை - கூடிய நன்னாளில்   (1595)   மூன்றாவது  புதல்வனாக அவதரித்தார்.

வெங்கண்ணர் என்பது திருப்பெயர்..


திருப்பதி வெங்கடேஸ்வரர் அருளால் பிறந்ததன் நினைவாக வேங்கடநாதர் எனவும், அழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே வேங்கடநாதரின் தந்தை பரமபதம் சேர்ந்து விட்டார்.

மதுரையில் வசித்த சகோதரி வெங்கடம்மாளின் கணவர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சார்யாவின் ஆதரவில் அவரது இல்லத்தில் வேங்கட நாதனின் கல்வி தொடர்ந்தது.

கல்வி நிறைவடைந்த ஒரு கட்டத்தில்,  நற்குணங்கள் நிறையப் பெற்ற சரஸ்வதி எனும் நல்லாளுடன் (1614) இவரது திருமணம் நிகழ்ந்தது. 

இறை வழிபாட்டிலும், இல்லறத்திலும் சேவையிலும்  ஈடுபட்ட  வேங்கட நாதன் வறுமையில் வாடினார்.

ஆன்மீக குருவான சுதீந்திர ஸ்வாமிகளைத் தேடிப்போய் வழிகேட்டார். 

சுதீந்திரருடைய மனதில் -
மத்வ பீட இருக்கைக்கான முழுத்தகுதி வேங்கடநாதனுக்கே!..
-  எனத் தோன்றியது.  

ஆனாலும், குடும்பப் பொறுப்பு, பந்த பாசங்களின் காரணமாக முதலில்  வேங்கடநாதன் மறுத்தார்.

புவனகிரிக்கே திரும்பிச் சென்றார். சுதீந்திர தீர்த்தருக்கு உடல்நலம் குன்றியது. இவ்வேளையில் -

இவ்வுலகம் உய்ய, துறவறத்தினை மேற்கொள்ளுமாறு இறையருளால் உந்தப்பட்ட வேங்கடநாதன் தனது மனதை மாற்றிக் கொண்டார். இதன்படி,

1621-ல் பங்குனி மாதம், சுக்ல த்விதியை கூடிய நன்னாளில் தஞ்சை மன்னரும் மந்திரிகளும் ஆன்றோர்களும் திரளாக மக்களும் கூடியிருக்க, தஞ்சாவூரில் மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் கரையில் -  ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என திருப்பெயர் கொண்டு துறவறம் பூண்டார்.

தன் கணவர் துறவறம் பூணுவதற்குள் அவரை ஒரு முறை பார்த்துவிட வேண்டுமென ஓடி வந்த சரஸ்வதி -   தன் கணவர் துறவறம் பூண்டு விட்டார் என அறிந்ததும் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

மனைவியின் ஆவி தன்னைத் தேடிவந்து, ஆவலுடன்  தவிப்பதை உணர்ந்த ஸ்வாமிகள், கமண்டல நீரைத் தெளித்து மோட்சம் அளித்தார்.. 

ஸ்ரீமத்வ பீடாதிபதியாகப் பட்டாபிஷேகம் ஏற்று 12 ஆண்டுகள் தஞ்சையில் வீற்றிருந்தார் ஸ்வாமிகள். 


தஞ்சையில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் குடந்தைக்கு மடத்தினை மாற்றிய ஸ்வாமிகள் , சில ஆண்டுகளுக்குப் பின் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ஸ்வாமிகளைப் பின் தொடர்ந்தார்கள்.

அவர் தரும் அட்சதை, பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின.

புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதோனிக்குச் சென்றார்,

ராகவேந்திர ஸ்வாமிகளின் மகிமை அறியாமல் சோதித்த நவாப் சித்தி மசூத்கான், தன் செயலுக்காக மனம் வருந்திய நவாப் தன்னை மன்னிக்கும்படி வேண்டி, பொன்னும் பொருளும் காணிக்கையாக அளித்தான்.

அவற்றை நிராகரித்த ஸ்வாமிகள் - துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள மாஞ்சாலி கிராமம் மட்டும் போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக்கொண்டார்.

மாஞ்சாலி கிராமத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்த மாஞ்சாலி அம்மனின் அருளுக்கு உரியவரானர்.

மாஞ்சாலி அம்மனையும் நேரில் தரிசித்து அருள் பெற்றார்.

மாஞ்சாலி கிராமம் தான் - இன்றைய மந்திராலயம்.

கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த இடம் தான்  மாஞ்சாலி என்பதை உணர்ந்திருந்த ஸ்வாமிகள், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமாகத் திருவுளம் கொண்டார்.

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

தம் சீடர்களை அழைத்தார். ''பிருந்தாவனத்தில் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!." என்று அருளிய ஸ்வாமிகள், எல்லோருக்கும் அறிவுரைகள் வழங்கினார்.

தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நேரத்தை முன்னதாகவே உரைத்தார்.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தபின், சுற்றிலும் சீடர்களும் பக்தர்களும் சூழ்ந்து  துக்கத்தில்  ஆழ்ந்திருக்க, 

விரோதிகிருது (1671) வருடம் ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், துவிதியை திதியுடன் கூடிய வியாழக்கிழமை ,

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனப் பிரவேசம் நிகழ்ந்தது.
*  *  *

மந்த்ராலயத்தின் பிருந்தாவனத்தில் வாசம் செய்து கொண்டிருக்கும்
குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் - நாடி வரும் பக்தர்களின் நல்வாழ்வினுக்குத் துணையாகத் திகழ்கின்றார்..

வேண்டுவோர்க்கு வேண்டுவன யாவற்றையும் தந்தருள்கின்றார்.

பூஜ்யாய ராகவேந்த்ராய 
ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய 
நமதாம் காமதேனவே:

ஸ்ரீ குருவே சரணம்!..
* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக