நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 10, 2013

மகா சிவராத்திரி

இன்று மகாசிவராத்திரி!...

மகாப் பிரளயத்தின் போது சர்வ லோகங்களும், அனைத்து உயிர்களும் சிவபெருமானிடத்தே ஒடுங்கி அமைதியுற்றன. 

மீண்டும் உலகமோ  உயிர்களோ தோன்றவில்லை. 

எம்பெருமான் கங்காளராக - திருக்கரங்களில் வீணையினைத் தாங்கி வாசித்துக் கொண்டிருக்கின்றார். இதனை - 
 
பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின்ற  எம்மிறை நல் வீணை வாசிக்குமே!..

- என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பாடுகின்றார்.

இந்நிலையில் அம்பிகையிடம் எல்லையில்லாக் கருணை பொங்கிப் பிரவாகமாக வழிந்தது. தாய்மை உணர்வுடன், அண்டங்கள் மீண்டும் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனைத் தியானம் செய்தாள்.  

ஒடுங்கி இருந்த உலகங்கள் மீண்டும் உண்டாகின.

அதில் பல்வேறு வகையான உயிர்களை -  பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் படைத்தருளினர். 

ஸ்ரீ கபாலீஸ்வரர் - கற்பகவல்லி

நமது பண்டைய கால அளவின்படி  - ஒரு நாள் என்பது 60 நாழிகை.   இதில்  பகல் 30 நாழிகை ( 4 சாமம்).  இரவு 30 நாழிகை ( 4 சாமம்).

ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை. ஒரு நாழிகை என்பது  24 நிமிடங்கள்.   ஒரு சாமம்  என்பது 180 நிமிடங்கள்.  இன்றைய அளவில் மூன்று மணி நேரம்.

ஆக, சிவராத்திரி அன்று  மாலை 6 - 9 மணிக்குள் முதற்காலம். முன்னிரவு 9 - 12 மணிக்குள் இரண்டாம் காலம். நள்ளிரவு 12 - 3 மணிக்குள் மூன்றாம் காலம். பின்னிரவு 3 - 6 மணிக்குள் நான்காம் காலம் - என நான்கு கால பூஜைகள் நிகழ்வுறுகின்றன. 

இந்த கால அளவினுள்ளும் அதன் மத்திய காலம் சிறப்பானது என்பர்.மூன்றாம் காலத்தின் மத்திய காலமான ஒன்றரை மணி தான் மகாசிவராத்திரியின் லிங்கோத்பவ காலம் என்கின்றனர்.


அம்பிகை தனித்திருந்து, ஈசனை வழிபட்ட பொழுது தான் சிவராத்திரி எனினும் - பின்னர் விரதங்களும் பூஜைகளும் அனுசரிக்கப்பட்ட  காலத்தில் - 

முதற் கால பூஜையினை -  நான்முகன் நடத்துவதாகவும், இரண்டாம் கால  பூஜையினை  - மஹாவிஷ்ணு நடத்துவதாகவும் உணரப்பட்டது.

மூன்றாம் கால பூஜை அம்பிகையினால் ஏகாந்தமாக நிகழ்த்தப்படுவது.

விடிவதற்கு முன் நான்காவது கால பூஜை தான், சிருஷ்டிக்குப்பின் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் ஆத்மார்த்தமாக - சிவபெருமானை பூஜிப்பதற்காக என்று கருதப்படுகிறது.

ஆலயங்களுக்குச் சென்று நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க  இயலாதவர்கள் வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் இயன்றவரை பூஜை செய்தல் நலம். 

பூஜைக்கு உரிய பொருட்கள் எவை என்பது நாம் அறிந்திருக்கின்றோம். 

நல்ல பழங்கள், கற்கண்டு, தேங்காய், தாம்பூலம், நறுமணமுள்ள மலர்கள் - இவைகளுடன் நிவேத்ய பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் போன்றவைகளை சமர்ப்பித்து நெய் விளக்கேற்றி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து தேவார திருவாசக பாராயணம் செய்து தூப தீப ஆராதனையுடன் வணங்குதல் உத்தமம். 

வழிபாட்டின் போது '' அது வேண்டும் ... இது வேண்டும் '' என்று கேட்காமல் அன்பினால் பணிவோம். 

'' பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிவு உடையவன் '' -  அல்லவா எம்பெருமான்.

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டிநீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே!...

''... நான்முகனும் மாலும் உன்னைத் தேடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு அரியவனாகத் தோன்றிய எம்பெருமானே!... என்னை நின் பணிக்கு ஆளாகக் கொண்டு, நான் வேண்டிக் கேட்காமலே எனக்கு வேண்டியவைகளை அருளும் உன்னிடம், நான் வேண்டிக் கேட்பதெல்லாம் - நான் உன்னிடம் என்றும் மாறாத அன்பு கொள்ளவேண்டும்  என்ற  ஒன்று தான்!....'' 

- மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் நமக்கு வழிகாட்டுகின்றார்.

நமக்குத் தேவையானவற்றை  -  பரம்பொருளாகிய இறைவன்  அளிப்பான்.

ஏனெனில் - நம்மைப் பெற்றெடுத்த தாயும் பேணிக் காத்த தந்தையும் அவனே!..

மகாசிவராத்திரி வேளையில் -
சிவ சிவ என்று சிந்தித்திருக்க அப்பர் ஸ்வாமிகள் அருளிய இனிய தேவாரம்!..


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசி வாயவே..1

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமசி வாயவே..2

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமசி வாயவே
..3

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமசி வாயவே
..4

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமசி வாயவே
..5

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமசி வாயவே
..6

வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமசி வாயவே
..7

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசி வாயவே
..8

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமசி வாயவே
..9

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமசி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்க ணில்லையே..10 

மகாசிவராத்திரி விரதத்தை அனுசரித்து அம்மையப்பனை வழிபட்டு அனைவருடைய நல்வாழ்விற்கும் வேண்டுவோமாக!.. 

ஐஸ்வர்ய, ஆனந்த, ஆரோக்ய, ஆயுள் - எனும் செல்வங்களை அடைவோமாக!..

திருச்சிற்றம்பலம்..
* * *









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..