நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 23, 2013

ஸ்ரீ ரங்கராஜன்

சத்யலோகம்.

நான்முகன் சரஸ்வதியுடன் ஏகாந்தமாக வீற்றிருந்தார். தேவரும் அசுரரும் அவரவர் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தனர். அதனால் - அவர்களால் இப்போது வரை எந்த தொந்தரவும் இல்லை. எனவே பிரம்ம தேவனின் மனம் அமைதியாக இருந்தது. அருகில் அன்னை கலைவாணியின் வீணையில் இருந்து மீட்டாமலேயே - நாதவெள்ளம்.

''..நாம் இத்தனை உயிர்களைப் படைத்தளித்துக் கொண்டிருக்கின்றோமே!.. இத்துடன் நம் வேலை முடிந்து விடுகின்றதா!... ஆன்மாக்களின் புண்ணிய பாவக்கணக்கின்படி தலையெழுத்தை எழுதி விட்டால் சரியாகி விடுமா?... எல்லா உயிர்களும் கடைத்தேற நாம் என்ன செய்திருக்கின்றோம்?... ஆதி தகப்பனாகிய நமது பங்கு இதில் என்ன?.. உயிர்கள் உய்வடைய வழிகாட்ட வேண்டாமா?...'' - இப்படி  யோசித்தார். ஏகப்பட்ட கேள்விக்குறிகள் எதிர் நின்றன. மிகவும் குழம்பினார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்கள் இருந்தும்,

ஞான ஸ்வரூபிணியாக அன்னை கலைவாணி - தன் அருகிலேயே இருப்பது அவருக்கு விளங்க வில்லை. அனைத்தையும் உணர்ந்தவளான அன்னை மெல்லியதாக புன்னகைத்தாள்.


கமலபீடத்திலிருந்த  பிரம்மன் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வைகுந்த வாசலை வந்தடைந்தார். ஜய விஜயர்கள் வணங்கி வரவேற்றனர். அவர்களை வாழ்த்திய நான்முகன் பார்வையாலேயே, ''.. நிலவரம் எப்படி?...'' என்றார்.

''...தங்களுக்காகத்தான் பெருமான் காத்துக் கொண்டிருக்கின்றார்..'' என்றனர்.

''...ஓம் நமோ நாராயணாய!...ஓம் நமோ நாராயணாய!...''

வைகுந்தவாசலைத் தொட்டு வணங்கி உள்ளே நுழைந்த பிரம்மன் ஐயனையும் பிராட்டியையும் போற்றினார். பணிந்து வணங்கினார். '' பளிச் '' என்று ஒரு மின்னல் நான்முகனின் நெஞ்சுக்குள். அவருடைய  நான்கு முகங்களும் மலர்ந்தன. ''  உத்தரவு...''  என்றார். உடனே அங்கிருந்து புறப்பட்டார்.

மஹாலக்ஷ்மிக்கு வியப்பு.  ''...என்ன ஸ்வாமி!...'' என்றாள். ''..உடனே நீயும் புறப்படு.. நம்மை ஆராதித்து பிரம்மன் உத்ஸவம் நிகழ்த்த இருக்கிறான்.. இனி கொஞ்ச நாட்களுக்கு ஓய்வு இருக்காது... ம்ம் ... சீக்கிரம்!...'' என்றார் பெருமாள்..

கருடன் தன்னுடலை உலுக்கி சிறகுகளை உதறியபடி - புறப்படத் தயாரானான்.

''..எங்கே!.'' - என்றாள் பிராட்டி. ''பூலோக வைகுந்தத்திற்கு.'' என்றார் பெருமாள்.

*  *  *

இப்படி - பூலோக வைகுந்தமாகிய ஸ்ரீரங்கத்தில் -

தான் படைத்த உயிர்கள் யாவும் உயிர்கள் உய்வடையவும் கடைத்தேறவும் வழிகாட்டி - பங்குனியில்  பிரம்மா தொடங்கி  நடத்திய விழா அதன் பின் வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!..

பிரம்மன் முன்னின்று நிகழ்த்தியதாலேயே, '' பிரம்மோத்ஸவம் '' எனப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் - இதைத்தான், "ஆதி பிரம்மோத்ஸவம்'' என்கின்றனர்.

இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திர தினத்தில் ஸ்ரீரங்கராஜன் , ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவர்கள் இருவரும் சேர்த்தியாய் சேவை சாதிக்க ஒருவர் பாடுபட்டார். அவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் வந்து சேர்த்து வைப்பதற்குள் திருவளர் செல்வனாகிய ஸ்ரீரங்க ராஜன் பெரும்பாடுபட்டான். அது ஏன்?...

அது '' ப்ரணய கலகம் '' எனும் ஊடல்... அது எதுக்கு இங்கே வந்தது!?...

பூவுலகில் வைகுந்தமாக திருஅரங்கம் நிலை பெற்ற பிறகு, இங்கு நிகழ்ந்த அற்புதங்களும் ஆனந்தங்களும் ஏராளம்!...ஏராளம்!...


உறையூரை ஆண்டு கொண்டிருந்த நங்க சோழன் என்ற மன்னருக்கு மகப்பேறு இல்லை. ரங்கநாதனின் பக்தனான,  அவர் தமக்கு புத்திர பாக்கியத்தினை பிரசாதிக்கும்படி வணங்கி வந்தார்.  பக்தனின் தீவிர அன்புக்கு இரங்கிய பெருமானும் பிராட்டியும் அவன் குறை தீர என்று திருஉளங்கொண்டனர்.

அதன்படி, வேட்டைக்கு வந்த  நந்தசோழன் வனத்தினுள் குழந்தை அழும் குரல் கேட்டுத் திகைத்தான். ஆவல் மேலிட பரிதவிப்புடன் மன்னன் தேடிச் சென்ற போது, ஒரு தடாகத்தில் பொற்றாமரை மலரில், ஆயில்ய நட்சத்திரங்கூடிய சுபயோக சுபவேளையில் கோடி சூர்யப்ரகாசத்துடன் குழந்தை எனத் தோன்றினாள் திருமகள்.

பேராவலுடன் அந்தக் குழந்தையை வாரி அணைத்த மன்னன், நாமே இந்தக் குழந்தையை வளர்க்க வேண்டும் என உந்தப்பட்டாலும்  பெயரளவுக்கு யாரும் குழந்தைக்கு  உரிமை கொண்டாடி வருகின்றார்களா என சிறிது நேரம் காத்திருந்தான். மழலையாய் மலர்ந்த மஹாலக்ஷ்மி மன்னனின் கரங்களில் உழன்று கொண்டிருந்தாள். குழந்தையைத் தேடி, ஒருவரும் வரவில்லை. ஆதலால் உறையூர் அரண்மனை திருவிழாக்கோலம் பூண்டது. திருமகளின் வரவினால் -

கொடுங்குற்றவாளிகள் குணங்கெட்டு நல்லவராகினர். சிறைச்சாலைகள்  - அறச்சாலைகளாயின. வறியவர் என்ற சொல்லே வழக்கொழிந்து போனது. அதனால் வாரிக் கொடுக்கவும் வாங்கிக் கொள்ளவும் ஆளின்றி - பொக்கிஷப் பேழைகள் திறந்தே கிடந்தன.

நீருண்ட மேகங்கள் வேறெங்கும் செல்ல மனமின்றி,  மாதம் மும்மாரி பெய்த பின்னும் - '...இன்னுமொரு முறை  சூழ்ந்து பெய்யவா!...'' என்று கேட்டபடி உறையூரை சுற்றியே அலைந்து கொண்டிருந்தன.

" கமலவல்லி '' எனத் திருப்பெயரிட்டு கொஞ்சினான். உச்சி முகர்ந்தான். தன் கரங்களிலேயே குழந்தையை வளர்த்தான் மன்னன்.

காலங்கள் வேகமாகச் சுழன்றன. இளங்கன்னியாக தோழியருடன் காவிரிக் கரையோர வனத்தில் தென்றலோடு தென்றலாக உலவிக் கொண்டிருந்தாள் கமலவல்லி. காவிரி சூழ் பொழில் கமலவல்லியின் பாதம் பட்டு புனிதமானது.

கமலவல்லியின் வளைக்கரம் பற்றவும், சோழமன்னனை ஆட்கொள்ளவும் வேளை நெருங்கியது. கருடனை அழைத்தார் ஸ்வாமி. கருடன் ஓடி வந்த வேகத்தில் குதிரையாகி நின்றான்.

'' பெருமானே!. என்ன இது?.'' திகைத்தான்.

''...இன்னும் சில நாட்களுக்கு இப்படியே இரு!.'' என மொழிந்த பெருமாள், குதிரை வாகனத்தில் இளங்காளை என ஆரோகணித்தார். குதிரையை காவிரிக் கரையை நோக்கிச் செலுத்தினார்.

குதிரையாக உரு மாறிவிட்டதால், கருடன் புதிதாக நடை பழகினான். அதற்கு காவிரிக்கரை - குளிர்ந்த காற்றுடன் வசதியாகவே இருந்தது. கள்ளர் பிரானைச் சுமந்து கொண்டு குதிரை இப்படியும் அப்படியுமாக நடை பயின்றது.

''.. யாரது!.. இளவரசியார் உலவும் நந்தவனத்தின் குறுக்கே!..'' ஆயுதங்களுடன் ஓடி வந்த காவலர்களிடம் கமலவல்லி சொல்லத்தான் நினைத்தாள் - ''..அவர் என உள்ளங்கவர் கள்வன்..'' - என்று. ஆனால் முடியவில்லை.


பெருமானை நோக்கி ஆயுதங்களுடன் ஓடி வந்த காவலர்களோ திகைத்தனர். ''..நம்ம ஊர்லயும் இவ்வளவு அழகான பசங்க  இருக்கானுங்களா!..'' - மருகினர்.

அண்ணல் நோக்கினார்.  மூடிக்கிடந்த விழியிரண்டும் - ''..பார்.. பார்..'' என்றதால் அன்னையும் நோக்கினாள்.

கதிரவன் இதைப் பார்த்து சிரித்துக்கொண்டே நகர்ந்தான். இப்படியே சில நாட்கள்... மன்னரின் காதுகளில் இந்த செய்தி விழுந்தது. எனினும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.  பெண்ணாகப் பிறந்த பெருந்தகையாள் பிரானைக் கண்ட நாள் முதலாக பேசுதற்கு மொழியின்றி நலிந்தாள்...நடை மெலிந்தாள்..

இதற்கு மேல் இந்த நாடகம் தகாது என்று - நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், எல்லாவற்றையும் உணர்த்தி - கமலவல்லியின் கரம் இருப்பதாக கூறினார். உள்ளந்தெளிந்த சோழமன்னன், கமலவல்லியை ஸ்ரீரங்கத்திற்கு மேளதாளங்களுடன் அழைத்துச்சென்றார். அங்கே ஸ்ரீரங்கராஜனுடன், கமலவல்லி ஜோதி வடிவாக ஐக்கியமானாள்.

சோழமன்னர் பெருமகிழ்ச்சியுடன் , தன் உள்ளம் நிறைந்தபடி கமலவல்லி நாச்சியாருக்கும்  ஸ்ரீரங்கநாதனுக்கும் உறையூரில் கோயில் எழுப்பி எல்லா வைபவங்களையும் ஸ்ரீரங்கத்தார் போலவே கொண்டாடி பரமபதம் சேர்ந்தார்.

அதன் பிறகு, பங்குனி உத்திர வைபவத்தில் - உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ஆயில்ய நட்சத்திரத்தன்று  சேர்த்தி கொண்டருள விரும்பி - படி தாண்டா பத்தினியாகிய ஸ்ரீரங்கநாயகி அனுமதியுடன்,

ஸ்ரீரங்கராஜன் சென்றபோதுதான் அது  நடந்தது... அல்லது நடத்தப்பட்டது.

அது நன்றாகவே நடத்தப்பட்டது.

- இனி நடக்க இருப்பதும் நன்றாகவே நடக்கும். 

ஆண்டளக்கும் ஐயனின் திருவடிகள் போற்றி!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..