சிவராத்திரியின் நான்காம் காலம்
-: பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை :-
பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன.
பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!...
சாப விமோசனம் நிகழு நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தது. ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் தேற்றினான்.
புண்டரீகமுனிவர் ஏற்படுத்தியிருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.
விநாயகர் எழுந்தருளி கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
நாகாபரணப்பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்து ''ஓ'' எனெக் கதறி அழுத நாகராஜன் - அவர் அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.
கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது. கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கி பாதாரவிந்தங்களில் விழுந்தான்.
''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க... எம்பெருமானே!...'' - குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின. அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,
கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.
பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்.
* * *
இப்படி சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நாகராஜன் வழிபட்ட திருத்தலம்,
வளம் தரும் திருநாகப்பட்டினம்.
இறைவர் - காயாரோகணேஸ்வரர். புண்டரீக மகரிஷியை சரீரத்தோடு ஏற்றுக் கொண்டதனால் - காயாரோகணர் (காய ஆரோகணர்) எனும் திருப்பெயர்.
இறைவி - நீலாயதாட்சி. கருந்தடங்கண்ணி. இளங்கன்னி எனப் பொலிபவள்.
மெய்யன்பர்கள் ''காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி'' எனப் போற்றி வணங்கிடும் சக்தி பீடங்களுள் ஒன்று.
திருமூலத்தானத்தில் கல்யாணத் திருக்கோலத்தில் ஸ்வாமியையும் அம்பிகையையும் தரிசிக்கலாம். முசுகுந்தசக்ரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்து அமைத்த விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் - சுந்தர விடங்க திருத்தலம்.
நாகராஜனுக்கு அருளிய நாகாபரண விநாயகர் திருக்கோயிலின் முதலில் வீற்றிருக்கின்றார்.
தலவிருட்சம் மாமரம். முக்கனிகளுள் முதலாவதான இதன் கீழ் முதற் பொருளான விநாயகர் அமர்ந்து அருள்கின்றனர். தீர்த்தம் - தேவதீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.
வசிஷ்டர், கெளதமர், மார்க்கண்டேயர், காஷ்யபர், அகத்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர் - ஆகிய புண்ணியர்கள் வணங்கிய திருத்தலம்.
அதிபத்த நாயனார் தோன்றிய திருத்தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் - என மூவரும் வந்து வணங்கி திருப்பதிகம் அருளியுள்ளனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருஞ்செல்வத்துடன் ஆடை ஆபரணங்களையும் வேண்டிப் பெற்ற திருத்தலம்.
அழுகணிச்சித்தர் ஜீவசமாதி கொண்ட திருத்தலம்.அருணகிரி நாதர் போற்றிய திருத்தலம்.
திருக்கோயில் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் பேருந்து மற்றும் இரயில் வசதி உடைய சிறந்த கடற்கரை நகரம் நாகப்பட்டினம்.
* * *
நாகம் என்பது குண்டலினியாக உருவகப்படுத்தப்படுவது. குண்டலினி நமது ஜீவசக்தி. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் உயிர் சக்தி.
இப்போது இவற்றை ஒன்றுபடுத்திப் பாருங்கள்!... -
அகங்காரத்தினால் சிதறிப்போகின்றது ஜீவசக்தி. நாம் மனம் ஒன்றி சிவபூஜை செய்து - இதை ஒருங்கிணைத்தால் பெறுதற்கரிய பெருவாழ்வினை மீண்டும் பெறலாம் .
இதுவே - சிவராத்திரியன்று நிகழ்த்தும் சிவவழிபாட்டின் தத்துவம்!...
இந்த புனிதமான பொழுதில், உங்களோடு என்னையும் திருத்தலங்களைத் தரிசிக்கும்படித் தண்ணருள் செய்த - எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்குகின்றேன்!..
''ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்!...''
''திருச்சிற்றம்பலம்!...''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..