நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 07, 2019

அறம் செய விரும்பு

அறஞ்செய விரும்பு!..

தமிழின் மிக அற்புதமான சொற்றொடர்களுள் இதுவும் ஒன்று...

தானமும் தவமும் மன சாட்சியும் மலிந்திருந்த அந்தக் காலத்தில்
யாருக்காகச் சொன்னார் ஔவையார் - இந்த வார்த்தைகளை!?...

இன்றிருக்கும் சூழ்நிலை அன்றே அவருக்குப் புலனாகியிருத்தல் வேண்டும்...

ஆக,
நமக்காகத் தான் ஔவையார் சொல்லியிருக்கின்றார்!..
- என்று கொள்ளலாம்...

சரி.. அறம் என்றால் என்ன?...

அறம் செய்ய விரும்புவதே அறம்!.. - என்பதெல்லாம் இருக்கட்டும்...


அறம் என்றால் என்ன?...

ஆலமரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும்
ஊடாக வந்து ஒளிரும் சூரியக் கதிர்களைப் போல -
அறம் பற்பலவாய் வடிவங்கொண்டு நிற்கிறது...

அந்தந்த சூழ்நிலைகளில் அவற்றை அனுசரித்து செய்யப்படும்
நற்செயல்களை அறம் எனக் கொள்ளலாம்...

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை!.. - என்கிறார் வள்ளுவப் பெருந்தகை..

வறிஞர்க்கென்றும் நொய்யின் பிளவு அளவேனும்!.. - என்கிறார் அருணகிரிநாதர்...

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
வாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே..

பற்பல வகையாய் அறங்களைச் செய்தாலும்
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை!..
- என்று திருமூலர் புரிய வைக்கின்றார்...



ஆனால், ஔவையாரோ

நல்லாள் எனப்பட்ட நங்கையை இல்லாள் எனக்கொண்டு
அவளுடன் நடாத்தும் இல்லறமே நல்லறம்!..

- என்று அடையாளங்காட்டுகின்றார்..

சாதாரண குடியானவன் ஒருவன்
குறையிரந்து நிற்போர்க்கு குறு நொய் கொடுப்பதிலிருந்து
குடையுடைக் கொற்றவன்
கொலையிற் கொடியாரை கொடுவாளால் ஒறுப்பது வரை
அறங்கள் என்றே சொல்லப்பட்டிருக்கின்றது...

ஆயினும்
இல்லறத்தார்க்கு என்றுமுப்பத்திரண்டு
அறங்களை வகுத்திருக்கின்றனர் ஆன்றோர்..


அந்த முப்பத்திரண்டு அறங்களையும்
அம்பிகை வளர்த்தெடுத்தாள் என்று
பற்பல புண்ணியரும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்...

அறம் வளர்த்த நாயகி - திருஐயாறு 
அம்பிகையின் திருப்பெயர்களுள்
அறம் வளர்த்த நாயகி என்பதுவும் ஒன்று...

திருஐயாற்றிலும்
பட்டுக்கோட்டையை அடுத்துள்ள
தாமரங்கோட்டை எனும் தலத்திலும்
அம்பிகையின் திருப்பெயர் - அறம் வளர்த்த நாயகி..

ஒருசமயம் காஞ்சியின் வேகவதி நதிக்கரையில்
அம்பிகை மானுட வடிவந்தாங்கி சிவபூஜை நிகழ்த்தும்படி நேரிடுகின்றது..

அப்போது தான் மண்ணுலகின் தர்மங்களை
வாஞ்சையுடன் கரங்களில் வாங்கிக் கொள்கிறாள்..
தாய்மையுடன் அவற்றைத் தாங்கிக் கொள்கிறாள்...

ஐயன் நாளும் அளக்கும் இரண்டு நாழி நெல்லைக் கொண்டு
முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றுகிறாள்...

இதனால் தான் -
காஞ்சியில் கோயில் கொண்ட குமரனை  , 

உமையாள் சேர்ந்தருள் அறம் உறு
சீர் காஞ்சியில் உறைவோனே.. (338) 
- என்று அருணகிரி நாதர் கும்பிட்டு வணங்குகின்றார்..

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே!.. (57)
- என்று அந்தாதியில் பாடிப் பரவும் அபிராமபட்டர் -

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமும் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டறம் வளர்க்கின்றவள்!..


- என்று போற்றுவதும் சிந்திப்பதற்குரியன..

சரி.. முப்பத்திரண்டு அறங்கள் என்பன எவையெல்லாம்!?..

1. வறுமையில் வாடுபவர்கள் பசியாறும்படி அன்னமிடுதல்..
2. நன்னெறிகளைப் போதிப்பவர்களின் பசியாற்றுதல்..
3. அறு சமயத்தார்க்கும் உணவிடுதல்..
4. பசுவுக்கு உணவு கொடுத்தல்..
5. சிறையில் அடைபட்டிருப்போர்க்கு உணவு வழங்குதல்..
6. இரப்போர்க்கு ஈதல்..
7. வலிய அழைத்து உண்ணக் கொடுத்தல்..
8. சிறு குழந்தைகளுக்குப் பயிற்றுவித்தல், பசியாற்றுதல்..

9. எளியோர்க்கு மகப்பேறு பார்த்தல்..
10. ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்தல்..
11. தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்குப் பாலூட்டுதல்..
12. அனாதை சடலங்களுக்கு கிரியை செய்தல்..
13. பேரிடர்களில் தவிக்கும் மக்களுக்கு வாழ்வித்தல்..
14. வண்ணார்களுக்கு வாழ்வளித்தல்..
15. நாவிதர்களுக்கு நலம் விளைவித்தல்..
16. சுண்ணாம்பு அளித்தல்..


17. நோய்க்கு மருந்தளித்தல்..
18. கண்ணாடி வழங்குதல்..
19. தகவல் அறிவித்தல்..
20. கண்நோய்க்கு மருந்தளித்தல்..
21. தலைக்கு எண்ணெய் அளித்தல்..
22. வறுமையுற்ற கன்னியர் கல்யாணம் நடத்தி வைத்தல்..
23. சிகை நீக்க உதவுதல்..
24. பிறர் பேணும் அறங்காத்து நிற்றல்..

25. தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்..
26. திருமடங்கள் அமைத்தல்..
27. சாலைகள் அமைத்தல். பராமரித்தல்..
28. சோலைகள் அமைத்தல். பராமரித்தல்..
29. ஆ உரிஞ்சு கல் அமைத்தல் (விலங்குகள் உரசிக் கொள்ளும் தூண்)..
30. தம்பதியர் உறக்கத்திற்கு இடையூறு அகற்றல்..
31. கால்நடை மந்தையில் காளை சேர்த்தல்..
32. கொலைக் களத்தில் பொருள் கொடுத்து சிற்றுயிர்களைக் காத்தல்..

சரி.. இவற்றுள் திருமூலர் அருளிய -
யாவருக்கும் இன்னுரை - எனும் அறத்தினைக் காணோமே!?...

இந்த முப்பத்திரண்டனுள் ஒன்று - ஏதேனும் ஒன்று
நம்மிடம் நிலைபெற்றிருந்தாலே போதும்!..

இன்னுரையும் புன்னகையும் தானாக வந்து நம் முகத்தில் அமர்ந்து விடும்!...

இப்படி
இன்னுரையும் புன்னகையும்
வந்து அமரப் பெற்ற முகத்தினர் தான் விருந்தினைப் போற்றுபவர்கள்...

இவர்கள் அளிப்பதுவே நல்விருந்து...

இவர்களது உள்ளத்திலும் இல்லத்திலும் தான்
சத்திய சாட்சியாய் ஸ்ரீ மஹாலக்ஷ்மி உறைகின்றாள்..

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்... (084)

இப்படி மஹாலக்ஷ்மியை நமது அகத்துக்குள் அழைத்து வருவது
இன்னுரையும் புன்னகையும் என்றால்

இவ்விரண்டையும் நமக்கே நமக்காய் அளிப்பது - அறம்!..

இதற்காகத் தான்

அறஞ்செய விரும்பு!..
- என்று ரத்ன சுருக்கமாகச் சொல்லிச் சென்றார் ஔவையார்...


ஆடி மாதத்தின் செவ்வாய்க் கிழமைகளில்
நோன்பு நோற்று ஔவையாரை வழிபடுவது தென் தமிழகத்தின் பழக்கம்..

இதுவே தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு எனப்படுகின்றது..

இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதியே கிடையாது என்பது சிறப்பு...

அன்புக் காதலனாக இருந்தாலும் சரி..
ஆருயிர்க் கணவனாக இருந்தாலும் சரி..

செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு
அனுமதி கேட்டால் (செல்லமாக) அடி தான் கிடைக்கும்...

செல்லமான அடியும் நல்லறமான இல்லறத்துள் ஒன்று..

அதனால் தான்

அழகுப் பெண்களின் கையாலே
அடி விழுந்தாலும் சந்தோஷம்!...

- என்றார் கவியரசர்...

அறம் வாழ்க.. அகம் வாழ்க..
அகங்கொண்டு வளர்கின்ற அருள் வாழ்க..
ஃஃஃ

34 கருத்துகள்:

  1. ஓ... அறம் வளர்த்த நாயகி பற்றிச் சொல்லவே அறம் ஆராய்ச்சியா? படிக்கிறேன்.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு... மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம்நாட்டல், .............. அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறார் பாரதி. அறங்கள் பலவகைப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆனால் எத்தனையோ புண்ணியங்கள், தான தருமங்கள் செய்திருந்தாலும் அன்னதானம் போல வராது என்பதற்கு மேலுலகம் சென்ற கர்ணன் அன்னதான கூடத்துக்கு வழி காட்டிய சுட்டுவிரல் உதாரணம் ஒன்றும் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அடுத்தவர் மனம் நோகும் வகையில் ஏதும் பேசாமல், செய்யாமல் இருப்பதே பெரிய அறம். இப்போதைய காலத்தில் இதுவே பெரிது. உதவி செய்கிறோமோ இல்லையோ, உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால்போதும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      >>> உபத்திரவம் கொடுக்காமல் இருந்தாலே போதும்...<<<

      இதற்கு அப்புறமாக ஒரு கதை சொல்கிறேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை அண்ணா. தலைப்பே அருமையான தலைப்பு! இதோ வருகிறேன்...முழுவதும் வாசிக்க...

    அடுத்து ஆறுவது சினம் என்றும் எழுதலாமே துரை அண்ணா புராணக் கதைகள் சொல்லி...ஒரு வேளை அப்படித்தான் வரப் போகிறதோ இது தொடராக..!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      >>> இது தொடராக!?... <<<

      வந்தாலும் வரலாம்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. // அழகுப்பெண்ணின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம்...//

    சரிதான்... இது வேறயா இந்த வரிசையில்... ஆறாம் வளர்த்த நாயகி மன்னிக்கட்டும்! ஆனால் நித்தம் நித்தம் மாறுகிறதே அழகுப்பெண்களின் வரிசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட கூகுளே... ஆறாம் வளர்த்த நாயகி இல்லை... அறம் வளர்த்த நாயகி...

      அம்மா அது என் பிழை அல்ல...கூகுள் பிழை. எனவே என்னைப் பொறுத்தருள வேண்டும்.

      நீக்கு
    2. இப்படித்தான் கூகுள் சமயத்தில் குழப்பி விட்டுவிடும்!..

      நீக்கு
  7. அறம்பாடுவதில் வரும் அறம் வேறு!

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் ஐயா.

    அறம் வளர்த்த நாயகி - எவ்வளவு அழகான பெயர்.

    32 அறங்கள் - இங்கே சொன்னது சிறப்பு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நல்லறத்தைக் குறித்த அருமையான ஆராய்ச்சி. அருமையான தகவல்கள். இத்தனை அறங்களில் ஒன்றிரண்டாவது நாம் செய்யலாமே! அறம் வளர்த்த நாயகியின் தரிசனமும் அதே பெயரில் இன்னொரு ஊரிலும் அம்பிகை இருப்பதும் தெரிந்து கொண்டேன். இந்தக் காலங்களுக்குத் தேவையான பதிவு. அறம் என்றால் என்ன பொருள் என்பதே பலருக்கும் தெரியாது. ஸ்ரீராம் சொல்வது போல் பிறருக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே இந்தக் காலங்களில் பெரிய அறம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா...

      >>> பிறருக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே.. <<< இதற்கு அப்புறமாக வருகிறேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இந்தக் காலத்தில் "அறம்" என்பது பிறரின் தீமைக்காக அறம் பாடுவதைச் சொல்லுவதாகவே உள்ளது. நாற்றம் என்னும் சொல்லின் பொருள் மாறிவிட்டது போல் "அறம்" என்னும் சொல்லும் தீமையைக் குறிப்பதாகவே ஆகி விட்டது. காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா...

      மழை என்றாலே - இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்ற எண்ணத்தை ஊடகங்கள் விதைத்து வளர்த்து விடவில்லையா!...

      அது மாதிரிதான்...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அறம் வளர்த்த நாயகி பெருமையோடு ஆன்றோர் பார்வையில் அறங்கள் இன்னின்னவையென அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அறத்தின் விளக்கம் அறிந்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. அருமையாக அறன் பற்றி திருமூலர், ஔவையார் என்று அழகாகச் சொல்லியிருக்கீங்க அண்ணா...

    ரசித்தேன் பதிவை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. அறங்கள் 32ம் அருமை.

    அறனத்தின் விளக்கம் அருமை.

    அவற்றில் கடைபிடிக்க முடிந்தவைகளை கடை பிடிக்க வேண்டும்.

    சிறு வயதில் சிவகாசியில் இருந்த போது பக்கத்து வீட்டு ஆச்சி ஒள்வையார் போலவே இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்து அம்மக்கள், பெண்களும் விரதம் இருப்பார்கள், நானும் இன்னும் என் வயது ஒத்த சிறுமிகளும் விளையாடிக் கொண்டே இருப்போம், பூஜை சமயம் கூப்பிடுவார்கள், கதை சொல்வார்கள் கேட்க போவோம். பிள்ளையாருக்கு பிடித்ததை செய்வதால் பிள்ளையார் விரதம் என்ற பெயர் வந்ததோ!
    பக்தியாக , சிரத்தையாக ஒளவையார் அம்மன் விரதம் திருவெண்காட்டில் இருந்தேன்.

    வீட்டுக்கார அம்மாவின் சிறு வயது மகன் அழுது கூப்பாடு போடுவான் வெளியில் போய் விளையாட சொன்னால். அதற்குதான் சிவகாசியில் எல்லோரும் தூங்கிய பின் செய்வார் அந்த ஆச்சி. நள்ளிரவில் பூஜை முடிந்து எங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு போவார் என்னை.

    நினைவுகளை மீட்டியது பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      மேலதிகச் செய்திகளும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. அறத்தின் பட்டியலும் ...அறத்தின் சிறப்பும் என அறம் வளர்த்த நாயகி தரிசனத்தோடு கிடைத்தது ...

    மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. அறத்தின் விளக்கம் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..