நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 15, 2024

ஸ்ரீ வாஞ்சியம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 30
ஞாயிற்றுக்கிழமை

எச்சன் நிணத் தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல் இறுத்திக் கொண்டார்
மெச்சன் வியத்திரன் தலையும் வேறாக் கொண்டார்
விறல் அங்கி கரங் கொண்டார் வேள்வி காத்த
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார்
உணர்விலாத் தக்கன் தன் வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே!..6/96
-: திருநாவுக்கரசர் :-


எம்பெருமானுக்கு அழைப்பு இல்லாத வேள்வியில் - தட்சன் வழங்கிய அவியினை உண்ணச் சென்ற தேவர்களை ஒறுத்து ஈசனின் தலைமைத்துவத்தை நிலை நிறுத்தினர் - ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியும் ஸ்ரீ பத்ர காளி அம்மனும்..

வீரபத்ர ஸ்வாமியை எதிர்த்து சூரியன் சண்டையிட்டதால் பார்வை பறி போனதோடு பற்களும் உடைபட்டன ..

தனது பிழைக்கு வருந்திய சூரியன் -  இங்குள்ள  குப்த கங்கைக் கரையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். 

சூரியனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் சூரியனுக்கு  - இழந்த ஒளியை வழங்கியதுடன் வேறு பல நலன்களையும் மீண்டும் அளித்தார். 

இதனால் -  இத்தலத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடுதல்  சிறப்பானது. 

 ஸ்ரீ வாஞ்சியம்.


இறைவன்
ஸ்ரீ வாஞ்சிநாதர், 
ஸ்ரீ வாஞ்சிலிங்கம்
அம்பிகை
ஸ்ரீ மங்களநாயகி, 
ஸ்ரீ மருவார்குழலி

தீர்த்தம்
குப்த கங்கை, 
பிரம்ம தீர்த்தம், 
தலவிருட்சம்
சந்தன மரம்.


 ஸ்ரீ எனும் மகாலக்ஷ்மியை விரும்பிய திருமால் - சிவபெருமானை தியானித்து தவம் இருந்த தலம். ஆதலால்  ஸ்ரீவாஞ்சியம்.

திருமாலும் திருமகளும் 
வணங்கிய திருத்தலம். 
சூரியனும் யமதர்மனும் பணிந்த திருத்தலம்.

திருமாலைப் பிரியாதிருக்க விரும்பிய திருமகள் சிவபூஜை செய்த தலம் என்றும் குறிக்கப்படுகின்றது..

ஸ்ரீமஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க வேண்டி சிவபூஜை செய்த போது அவர்கள் நீராடுவதற்கென கங்கை இங்கே பொங்கி எழுந்து பொலிந்தாள் என்பது ஐதீகம். 

திருமாலும் திருமகளும் நீராடியதனால் கங்கை மேலும் பவித்ரமாக இங்கு விளங்குவதாக ஐதீகம்...  


மேலும் - குப்த கங்கை திருக்குளத்தில் கார்த்திகை மாத நீராடல் கங்கையில் நீராடிய பலனைத் தரும் என்பது தலவரலாறு. 

மிகவும் பழைமை வாய்ந்த திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியம். 

ஸ்ரீவாஞ்சியத்தைச் சுற்றிலும் நன்னிலம், அம்பர் மாகாளம், திருமீயச்சூர், திருவீழிமிழலை, திருப்பாம்புரம் - என திருத்தலங்கள் பல விளங்குகின்றன.

நற்பேறு இருந்தாலன்றி ஸ்ரீவாஞ்சியத்தின் தரிசனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றார்கள். 

ஸ்ரீ வாஞ்சி நாதரையும் ஸ்ரீ மங்களாம்பிகையையும் அவர்களுக்குப் பணி செய்து மகிழ்ந்திருக்கும் ஸ்ரீ யம தர்மராஜனையும் ஒருசேர தரிசனம் செய்தவர்களுக்கு மரண பயம் இல்லை. யம வாதனை கிடையாது.

உயிர்களைப் பிரித்தெடுக்கும் தனது பணியால் மனம் நொந்து வருந்தினார் யமன்.

யமனின் தடுமாற்றத்தால் உலக இயக்கம் மாறுபட்டது.

பூதேவி நிலை குலைந்தாள். 

" எல்லா உயிர்களையும் ஈவு இரக்கமில்லாமல் எடுப்பதனால், பெரும் பழிச் சொல்லுக்கு ஆளாகின்றேனே!..  "

- என்று வருந்திய யம தர்மன் - தனது துயரம் தீர வேண்டி, தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய ஈசன் - 

" நீ ஏற்று நடத்தும் பணி ஆன்மாக்களை அறச் செயலில் ஆற்றுப்படுத்துதல் அன்றோ!..மற்ற தேவர்களைக் காட்டிலும் சிறந்தவன் நீ!.. உயர்ந்ததும் உன்னதமானதும்  உனது பணியே!.. தர்மங்களைப் பரிபாலிப்பவன் நீ அல்லவோ.. இனி நீ தர்மராஜன் என அழைக்கப்படுவாய்!. "

- எனத் திருவருள் பொழிந்ததுடன் யமதர்ம ராஜனை திருவாஞ்சியத்தின் க்ஷேத்ரபாலகன் எனவும் நியமித்தார் ஈச்ன்..

தனது பணியின் உன்னதத்தினை உணர்ந்த யம தர்மராஜனும் மன வாட்டம் தீர்ந்து அமைதியுற்றார்.

பின்னும் இறைவனை வேண்டி  - ஐயனையும் அம்பிகையையும் சுமந்து சேவை புரியும் வாய்ப்பினை  விரும்பிப்  பெற்றார் யமதர்மன். 

இறைவன் யமதர்மராஜனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்த  திருவிழா மாசி மாத பரணியில் நிகழ்கின்றது.

இத்தலத்தில் வந்து சேவித்தவர்க்கும் நினைத்தவர்க்கும் மரித்தவர்களுக்கும் மரண பயம் அவஸ்தை கிடையாது. 


திருக்கோயிலின் தீர்த்தமாகிய  - குப்த கங்கை எனும் திருக்குளம்  - கோயிலின் நுழைவாயிலின் வடபுறம் பரந்து காணப்படுகின்றது. 

இந்தத் திருக்குளத்தினுள் தான் கங்கை பூரணகலைகளுடன் சூட்சுமமாகக் கலந்திருக்கின்றாள் என்கின்றது தலபுராணம்.


திருக்குளத்தின் தென் புறமாக தெற்கு நோக்கிய சந்நிதியில் யமன்.
 நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக் காலைத் தொங்க விட்டு பாதக் குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். 

யமதர்மனின் அருகில் முனிவர் கோலத்தில் சித்ரகுப்தன். 

சிவானுக்ரகம் பெற்ற ஸ்ரீயமதர்ம ராஜனின் முன்பாக நந்தியம்பெருமான் திகழ்கின்றார்.

யமதர்மனுக்குச் செய்யும் அர்ச்சனைப் பிரசாதங்கள் திருநீறு உட்பட - எந்தப் பொருளையும் சந்நிதியைக் கடந்து எடுத்துச் செல்லக் கூடாது என்பது மரபு.   

மற்ற ஊர்களில் திருக்கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மரணம் நிகழ்ந்தால் - திருக்கோயில் அடைக்கப்படும். அந்த வழக்கம் இவ்வூரில் இல்லை.

இத்திருக்கோயிலில் நவக்ரஹங்கள் இல்லை. 
ஏனெனில் -

யம வாதனையே  இல்லை!.. என்றான பிறகு நமக்கு இங்கே என்ன வேலை என்று நவக்கிரக அதிபதிகள் - இறையன்பர்களை விட்டு விலகிப் போய் விட்டனர்..



திரு ஆரூர் மயிலாடுதுறை வழித் தடத்தில்
நன்னிலத்திற்கு அருகில் 10 கி.மீ தொலைவிலுள்ள திருவாஞ்சியத்திற்கு திருஆரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறு.

செய்த பிழை தீர சூரியன் தொழுது வணங்கி நலம் பெற்ற நன்னாள்.

நண்பர் கூறினார் - கடை ஞாயிறு அன்று ஸ்ரீ வாஞ்சிய தரிசனதிற்குச் செல்வதாக!..

அப்போது தான் நினைவுக்கு வந்தது பத்தாண்டுகளுக்கு முன் ஸ்ரீ வாஞ்சிய தரிசனம் செய்ததும் பதிவில் வைத்ததும்..

முந்தைய பதிவைக் காண்பதற்கு இங்கே இணைப்பு - 


இடப் பாதத்தினால் யமனை
அமிர்தகடேஸ்வரர்  உதைத்தருளிய புராணம் நமக்குத் தெரியும்.. அபிராமவல்லியின் பெயரைக் கேட்டாலே யமனுக்கு நடுக்கம்..

மாரியம்மன் ஸ்தோத்திரமும் இதையே இயம்புகின்றது..

கொடுங்கூற்று என் செய்யும்?.. என்ற தைரியம் அளிப்பதுடன்
திருப்புகழின் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தாலே போதும் என்கின்றார் அருணகிரிநாதர்..

கணேச மந்திரமும் இவ்வாறே!..

நந்தியம்பெருமான் தனது மூச்சுக் காற்றினால் யமனைக் கட்டிப் போட்டு  விட்டு திசை திரும்பி அமர்ந்திருப்பது திருவைகாவூரில்...

த்வார பாலகரன தண்டி யமனை விரட்டி விட்டு ஆட்கொண்டார் எனத் திகழ்கின்றார் திரு ஐயாற்றில்..

ஆக - 
சிவ குடும்பத்தின் மூர்த்திகளைப்  பணிந்து  வணங்குபவர்களுக்கு சுகவீனம் அப ம்ருத்யு பயம் - இவை ஏற்படாது என்கின்றனர் சான்றோர்.. 

அவ்வண்ணமே அகிலம் அனைத்திற்கும் ஆகட்டும்..

மனம், வாக்கு, காயம் எனும் திரிகரணங்களால் - ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானையும் மங்கல நாயகியையும் வணங்கி நலம் பெறுவோம்..


அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான் திகழுந்நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே.(5/67/7) 
-: திருநாவுக்கரசர் :-
** 
ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. மிகச்சிறப்பாசன பதிவு.  இங்கு சென்று தரிசிக்க வேண்டும் என்று நெடுநாட்களாக ஆசை.  எப்போது நிறைவேறுமோ

    பதிலளிநீக்கு
  2. இங்கு எங்களுக்கு முன்பு கட்டளை இருந்தது. எங்கள் கவனக்குறைவால் அதைத் தொடராமல் தொலைத்தோம்..

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீவாஞ்சியம் தல் பெருமைகளை மிக அழகாய் சொன்னீர்கள்.
    பகிர்ந்த திருபதிகங்களை பாடி இறைவனை தரிசனம் செய்து வணங்கி கொண்டேன். படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை வாஞ்சியம் தல வரலாறு, தல பெருமை அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். படங்கள் மிக அருமையாக உள்ளது. கோபுர தரிசனங்கள் மற்றும் இறைவன் தரிசனங்கள் பெற்றுக் கொண்டேன். இந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியம் விரைவில் வாய்த்திடவும் வேண்டிக் கொண்டேன். தங்கள் பதிவில் இக்கோவிலை கண்டது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

    /ஆக -
    சிவ குடும்பத்தின் மூர்த்திகளைப் பணிந்து வணங்குபவர்களுக்கு சுகவீனம் அப ம்ருத்யு பயம் - இவை ஏற்படாது என்கின்றனர் சான்றோர்..

    அவ்வண்ணமே அகிலம் அனைத்திற்கும் ஆகட்டும்../

    உண்மை. சிவனை தொழுது அனைவருக்கும் நல்லருள் கிடைக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    - கில்லர்ஜி தேவகோட்டையிலிருந்து

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீவாஞ்சியம் தரிசனம் பெற்றோம்.

    தலச் சிறப்புக்கள் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..