நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 08, 2024

வாழைப் பழம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 23
 ஞாயிற்றுக்கிழமை


வீட்டில் விழா என்றாலும் கோயிலில் திருவிழா என்றாலும் தோரண வாயில் என்று முன் நிற்பவை குலை ஈன்ற வாழை மரங்கள் .. 


அதிலும் பூவன் வாழைகளே சிறப்புடையவை..


வழிபாட்டிற்கு மட்டுமல்லாது மங்கலச் சடங்குகள் அனைத்திலும்  முன் நிற்பவை பூவன் பழங்களே..

வருடம் முழுதும் நமக்குக் கிடைப்பவை வாழைப்பழங்கள்..  அதிலும் பூவன் பழங்கள் குறிப்பிடத் தக்கவை..


காவிரிப் படுகையாகிய  சோழ தேசத்தின் மகத்தான  செல்வங்களுள் ஒன்று வாழை.. 

திருப்பைஞ்ஞீலி தலத்தில் வாழை தல விருட்சம்.. தஞ்சை கண்டியூருக்கு அருகிலுள்ள திருவேதிகுடியில் வாழை மடு நடுவே ஈசன் தோன்றியதாக தலபுராணம்..


வாழை இனங்களில் சிறப்பு பூவன்!..

பூவன் வாழைப்பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்பு, மெக்னீசியம், சோடியம்  சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன..

இரும்புச் சத்து பூவன் பழத்தில் நிறைந்துள்ளதால், அனீமியா எனும் ரத்த சோகை ஏற்படுவதில்லை..

மூளையில் இயற்கையாகவே செரடோனின் ஹார்மோன் சுரக்கவும், செரிமானம் சீராக இருக்கவும்  பூவன் பழங்கள்  உதவுகின்றன. 

செரடோனின் சுரப்பது ஆழ்ந்த தூக்கத்தில்... இதுவே மனிதனுக்கு மன அமைதியைத் தருவது.. 


இரவு உணவு உட்கொண்ட  ஒரு நாழிகைக்குப் பிறகு இரண்டு பூவன் பழங்களை உண்ண வேண்டும் என்று முன்னோர் வகுத்தது இதற்காகத் தான்..

பூவன் பழத்தினால், ரத்த அழுத்தம் குறைகின்றது.. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பயங்கரங்கள்  ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன..

வாழை இனங்கள் எல்லாவற்றிற்குமே மருத்துவ குணங்கள் எனினும் பூவன் பழத்தில் அதிகம்...

என்றாலும், சர்க்கரைக் குறைபாடு உடையவர்கள் மருத்துவரது அறிவுரை ஆலோசனையைப் பின்பற்றி இருப்பது நல்லது..

சர்க்கரை குறைபாடு உடையவர்கள், பூவன் பழத்தை மட்டுமல்லாது வாழைப் பழங்களையே உண்ணாமல் இருப்பது நல்லது என்கின்றது மருத்துவம்..
(மருத்துவக் குறிப்புகள் :  நன்றி விக்கி)


பூவன் பழங்களைத் தானமாகக் கொடுப்பதால் பித்ரு தோஷம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர்கின்றன..

நலம் வாழ்க

ஓம் சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. முன்பெல்லாம் பூவன் பழங்கள் மட்டுமே சாப்பிடுவோம்.  இப்போது கற்பூரவல்லி.  

    இங்கு பூவன் கம்மியாகவே கிடைக்கும்.  கிடைத்தாலும் தஞ்சை பக்கம்போல பெரிதாக இருக்காது.  சிறிது சிறிதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. வாழைப்பழம் எனத் தலைப்பிட்டு, பூவன் பழம் தவிர மற்றவற்றைப் பற்றி எழுதவில்லையே. ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், எலாச்சி, கோழிக்கோடு, செவ்வாழை.... எனப் பலவும் உண்டே

    பதிலளிநீக்கு
  3. வாழை பற்றி நல்ல பகிர்வு. பூவன் பழம் இதைத் தான் நாங்கள் கதலி என்கிறோம் .

    சக்கரை குறைபாடு உள்ளவர்கள் நன்றாக பழுக்காத வாழைப்பழத்தை உண்ணலாம் என இங்கு வைத்தியர்கள் சொல்கிறார்கள்.

    "பூவன் பழங்களைத் தானமாகக் கொடுப்பதால் பித்ரு தோஷம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர்கின்றன" நல்ல தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மாதேவி நாங்கள் நாகர்கோவிலில்/திருநெல்வேலிப் பக்கங்களில் கதலிப்பழம் என்போம். நாகர்கோவில் தமிழில் இலங்கைத் தமிழில் உள்ள சொற்கள் அதிகம். பேசும் தொனியும் கூட....உணவு முறைகள்....உட்பட (மலையாள நாட்டின் உணவுப் பழக்கம் உடை ...)

      கீதா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாழைப்பழங்களின் நன்மைகளை குறித்த பதிவு நல்ல தகவல்களுடன், நன்றாக உள்ளது. இங்கு எலங்கி என்ற வகையை மட்டுந்தான் வாங்குகிறோம். பூவன் என்றால் கதலி பழமா? நாட்டுப்பழம் சட்டென பழுத்து விடும். ஒரு நாளைக்கு பாதி அளவு பழத்தைதான் மருத்துவர் சாப்பிட சொல்லியிருக்கிறார். ஆனால், நான் தினமும் சாப்பிட இயலாமல் போவதால், இரண்டு நாளைக்கு ஒரு தடவை காலை பொழுதில் ஒரு பழம் மட்டும் எடுத்துக் கொள்கிறேன். வேறு எந்த பழங்களும் சாப்பிடுவதில்லை. என்ன சுகரோ? வாழ்க்கையே வெறுத்துப் போகிறது. நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, சுகர் என்றால் வாழ்க்கை வெறுக்கவே வேண்டாம். பழங்கள் சாப்பிடலாம், அளவாக ஆனால் அதற்கேற்ப உணவின் அளவையும் பார்த்துக் கொண்டால் போதுமானது. ஆனால் உங்கள் சர்க்கரை அளவுக்கேற்ப....நான் சொல்வது மூன்று மாத அளவு.....நடைப்பயிற்சியும் செய்தால் சர்க்கரை குறைபாடு இருந்தாலும் நன்றாகவே இருக்கலாம் அக்கா.

      ஆமாம் இங்கு எலங்கிதான் நிறைய. பூவன் ஏதாவது தமிழ்க்கடையில் கண்ணில் பட்டால் உண்டு இல்லை தெருவோரங்களில் தமிழ்ப்பாட்டிகள் வைத்திருந்தால் உண்டு.

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இயற்கை உபாதைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. ஆனால் வாழைப்பழம் கூட அரைதான் சாப்பிட வேண்டுமென மருத்துவர் கூறியதைதான் இங்கு குறிப்பிட்டேன். சுகருக்கு எந்த மருந்தும், மாத்திரைகளும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. (கண்டறிந்தவுடன் முதலில் ஒரு மாதம் சாப்பிட ஆரம்பித்ததும் வேறு பல தொந்தரவுகள் வந்தன. அதனால் அந்த மருந்துகளை தொடரவில்லை.) இப்போது கால் பாதங்கள் எவ்வளவு நடந்தாலும், தினமும் எப்போதும் மதர்ப்பாக இருப்பது குறையவில்லை என்பதால், வாழ்க்கை வெறுத்துப் போகிறது என குறிப்பிட்டேன். ஆனாலும் வாழ்ந்து தானே ஆகணும். இறைவன் விட்ட வழியில் நடப்போம் என நடக்கிறேன். தங்கள் அன்பான ஆறுதல்களுக்கு மீண்டும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. பூவன் பழம் நல்லது. மலச்சிக்கலுக்கும் நல்லது. மொந்தனும்.

    நேந்திரன் உடல் வலுவுக்கு, செவ்வாழையும்

    எல்லா வாழைப்பழங்களுக்கும் குணம் உண்டு.

    சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் காலையில் சாப்பிடலாம் ஆனால் உட்கொள்வதற்கு ஏற்ப மற்ற உணவை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும், காலை சாப்பிட்டால் நடை, வேலைகள் என்பதில் அது சரியாகிவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..