நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 24
திங்கட்கிழமை
நான்காவது சோமவாரம்
வெந்தநீறு அருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம்
அருமறை ஆறங்கந்
திங்களுக்கு அருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம்
நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
ஒருசமயம்
சித்தத்தை ஒடுக்கி சிவ பெருமானிடம் வைத்திருந்த வானுகோபர் மகா கோபர் என்ற முனிவர்கள் இருவரது மனதிலும் இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற சிந்தனை மூண்டெழுந்தது..
அதன் விளைவாக
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் பிறந்தது..
அந்த வாதத்தை தீர்த்து வைக்க வேண்டும் என சிவபெருமானை இருவரும் வேண்டினர்..
அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவபெருமான்- தில்லையம்பலத்தின் அர்த்த ஜாம பூஜைக்குப் பின் உங்களது இருப்பிடத்திற்கே வந்து விசாரிக்கின்றேன்.. என, வாக்களித்தார்..
(இருப்பிடத்திற்கே வந்து வழக்கு விசாரிப்பு.. ஆகா!.)
அதன்படி கார்த்திகையின்
திங்கட்கிழமையன்று இத்தலத்தில் வெண் நிறமாகத் திகழ்ந்த ஆல மரத்தின் கீழ் எழுந்தருளினார்..
இதனாலேயே இத்தலம்
தென் தில்லை எனப்படுகின்றது..
தங்களுக்கு - முன் தோன்றிய இறைவனின் முன்பாக
இல்லறமே சிறந்தது என்று வானுகோபரும் துறவருமே சிறந்தது என்று மகா கோபரும் வாதிட்டனர்..
(முதல் பட்டி மன்றம் இது தானோ..)
இருவருடைய வாதங்களையும் கேட்ட இறைவன் இல்லறம் துறவறம் இரண்டுமே சிறந்தவை தான் என்றும் எவற்றிலும் உயர்வு தாழ்வு இல்லை என்றும் மத்தியஸ்தம் செய்து வைத்ததால் இங்கு இறைவன் மத்யஸ்தபுரீஸ்வரர் என்றும்
முனிவர்கள் இருவருக்கும் பொதுவாக இருந்து உண்மையை உணர்த்தியதால் பொது ஆவுடையார் என்றும் போற்றப்படுகின்றார்..
ஸ்வாமியின் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட (வேற வழி!? ) முனிவர்கள் ராசி ஆனதில் ஈசனுக்கு மகிழ்ச்சி..
வழக்கம் போல ஆனந்த நடனமும் ஆடியிருக்கின்றார்..
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் முக்கிய இடம் வகிக்கின்ற கோயில்
பொது ஆவுடையார் கோயில்..
கோயில் என்றதும் கோபுரம் கொடிமரம் ஏனைய
சந்நிதிகள் என்றெல்லாம்
நினைவுக்கு வருவது இயல்பு..
அப்படி எவையும் இங்கே இல்லை..
வெள்ளால மரத்தின் கீழ் கிழக்கு முகமாக எழுந்துள்ள - வேர் தான் சுயம்பு லிங்கமாகத் திகழ்கின்றது..
வெள்ளால மரத்தின் நிழற் கீழ் எழுந்தருளி தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருள் பாலித்து வருகின்றார் எம்பெருமான்..
இக்கோயிலில் அம்பிகைக்குக் கூட சந்நிதி இல்லை.. சுயம்பு லிங்கத்திற்கு முன்பாக நந்தீசர் மட்டுமே..
வெள்ளால மரத்தின் கீழ் எழுந்துள்ள - வேருக்குத்தான் திருவாசி, திரு நீற்றுப் பட்டம் சாற்றி அபிஷேக அலங்கார ஆராதனைகள் எல்லாம்..
தென் தில்லை
தென் சிதம்பரம் மத்யஸ்த புரி என்றெல்லாம் போற்றப்படுகின்ற
இக்கோயில் பரக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ளது..
பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி சாலை வழியில் 12 கிமீ தூரத்தில்
தாமரங்கோட்டை எனும் கிராமத்தை அடுத்து பரக்கலக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பாட்டுவநாச்சி எனும் காட்டாற்றின் கரை வழியாக நடந்து சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.
இக்கோயில் பகலில் திறந்திருப்பதில்லை..
வருடத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் நள்ளிரவுக்கு முன்பாக கோயிலின் நடை திறக்கப்பட்டு ஆலமரத்தின் அடியில் சிவலிங்கமாக காட்சி தருகின்ற பொது ஆவுடையார் சுவாமியின் தரிசனம் கிடைக்கும்..
ஸ்வாமியை தரிசிப்பதற்காக
ஏராளமான பக்தர்கள் திங்கட்கிழமை இரவுப் பொழுதில் வந்து ஐயனின் அருள் பெற்றுச் செல்கிறனர்..
அதியற்புதமாக
வருடத்தின் தை முதல் நாள் பொங்கல் அன்று
மட்டும் உதயாதி நாழிகையில் இருந்து சூர்யாஸ்தமனம்
வரை பகலில் நடை திறந்திருக்கும்..
பரக்கலக் கோட்டைக்கு அருகிலுள்ள தாமரங்கோட்டை கிராமத்தில் தான் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வசித்திருக்கின்றோம்..
ஸ்ரீ பொது ஆவுடையார் கோயிலில் பலமுறை
நள்ளிரவு தரிச்னம் செய்திருக்கின்றேன்..
அதெல்லாம் ஒரு பொற்காலம்..
காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி
பொது ஆவுடையார் எல்லாருக்கும்
புண்ணியம் அருள்வாராக..
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே...
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
இந்தக் கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கோபுரம் இல்லாத கோவில் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. வட நாட்டு கோவில் போல ஒரு தோற்றம்.
பதிலளிநீக்குமத்யஸ்தம் செய்ய இறைவனே எழுந்தருளி... ஆஹா... இப்படி பல வீடுகளில் எழுந்தருளினால் பல தம்பதிகள் கோர்ட் வாசலையே மிதிக்க மாட்டார்கள்!
பதிலளிநீக்குகுருக்கள் வளப்பமான தெரிகிறார். பசையுள்ள கோவில் போல... அவர் பார்க்கும்போதே எப்படி காணொளி எடுக்க சாத்தியமாயிற்றோ...
பதிலளிநீக்கு"வெள்ளால மரத்தின் கீழ் கிழக்கு முகமாக எழுந்துள்ள - வேர் தான் சுயம்பு லிங்கமாகத் திகழ்கின்றது..
பதிலளிநீக்குவெள்ளால மரத்தின் நிழற் கீழ் எழுந்தருளி தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருள் பாலித்து வருகின்றார் எம்பெருமான்.."
அற்புதமான கோவில்.
தலவரலாறும் தெரிந்து கொண்டோம். "வழக்கம் போல ஆனந்த நடனமும் ஆடியிருக்கின்றார்"
ஆவுடையார் அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டுவோம்.
தலவரலாறும், படங்களும் அருமை.
பதிலளிநீக்குஆவுடையார் மூலவர் படம் மிக அருமை.
சுயம்பு லிங்கம் மிக அழகாய் இருக்கிறார், அலங்ககாரத்தில்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தெரியாத ஊர், அறியாத தகவல்கள். அழகான ஊரைப்பற்றியும், அந்த ஊரில் உறையும் சிவபெருமானின் சிறப்பை பற்றியும் தெரிந்து கொண்டேன்.
/வெள்ளால மரத்தின் கீழ் கிழக்கு முகமாக எழுந்துள்ள - வேர் தான் சுயம்பு லிங்கமாகத் திகழ்கின்றது..
வெள்ளால மரத்தின் நிழற் கீழ் எழுந்தருளி தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருள் பாலித்து வருகின்றார் எம்பெருமான்../
ஸ்தலபுராணத்தின் கதையும், சிவபெருமானின் நிலையான உருவம் தாங்கி நிற்கும் அந்த மரமும்.....! அறிந்த கொண்ட போதினில் மெய் சிலிர்த்துப் போயிற்று.
சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டுமென காணொளியில் எந்தையை கண்டு வணங்கி மனதாற பிரார்த்தித்துக் கொண்டேன். கார்த்திகை சோமவாரத்தில் இந்த கோவிலின் பதிவை படிக்கத் தந்தமைக்கு தங்களுக்கு எனது பணிவான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.