நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 11, 2024

முத்தம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 26
புதன்கிழமை

அன்றைய
எங்கள் பிளாக்  தளத்தில் 
களேபரம்.. 

உன்னை
முத்தமிட்டால்
உப்பு
கரிக்கிறதே..
உன்
டூத்பேஸ்ட்டில்
நிச்சயம்
உப்பு இருக்கிறது...

என்ற, ஸ்ரீராம் அவர்களது 
கவிதையைத் தொடர்ந்து -

அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்...
அதனால் தான்
அதில் உப்பின் சுவை...

- என்று எழுதியிருந்தேன்...

அதனைத் தொடர்ந்தே கீழுள்ள முத்தத்தின் சத்தம் எனும் கவிதை..

எப்படியோ கைக்குள் சிக்கியது.. மீண்டும் ரசித்து மகிழும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

பதிவின் நாள் - ஜூலை 13, 2018.
ஃஃ


முத்தத்தின்
சத்தம்

கத்தியில்லா யுத்தம் என்று
நித்தம் பாடுவார்..
சத்தமில்லா முத்தம் என்று
சத்தம் போடுவார்..

அடடா.. என்ன இது 
உளறல்!. - எனில் -
ஐயிரண்டு திங்களிலே
அன்பின் முத்தம்...
அருமலராய் கரந்தனிலே
ஆசை முத்தம்..

தொட்டிலிலே தூமலராய்
உயிரின் முத்தம்...
மட்டில்லா மகிழ்வுடனே
மகவின் முத்தம்...

பூவிதழாள் புன்னகைக்கப்
புதிதாய் முத்தம்...
முத்தம் இது முத்தம் என
நெஞ்சுக்குள் சத்தம்...

தாயவளின் காலடியில்
அன்பின் முத்தம்..
தந்தையவன் கையினிலே
அறிவின் முத்தம்...
தங்கையவள் நெற்றியிலே
பண்பின் முத்தம்...
தோழனவன் தோளினிலே
நட்பின் முத்தம்...

முகில் வடித்த முத்தம்
அது வளமை ஆனது..
முந்தி வந்து முளைத்த
விதை செழுமை ஆனது..
அதில் அடர்த்த முத்தம்
அது பசுமை ஆனது...
மூங்கில் தந்த முத்தம்
முதல் வாழ்க்கை ஆனது..


கத்துங் கடல் எறிந்ததையும் 
முத்தம் என்றார்...
கரி அதனின் கொம்புகளில்
முத்தம் கண்டார்...
செஞ்சாலிக் கதிர் எல்லாம்
முத்தம் என்றார்...
செந்நெறியின் தமிழதுவும்
முத்தம் என்றார்...

சித்தன் அவன் சிவன் மகனை
முத்தன் என்றார்...
முத்து முத்துக் குமரா 
நீ தரவேணும் 
முத்தம் என்றார்...

இளந் தமிழும் பாடியது
முத்தப் பருவம்...
இளைஞர் அவர் தேடுவதும்
பருவத்து முத்தம்...

கிழவருக்கும் 
முத்தம் எனில்
கொள்ளை 
இன்பம் தான்..

பிள்ளை வழிப் 
பிள்ளை எனில்
இன்பம்
கொள்ளை தான்!..

முத்தம் ஒன்று தந்ததாலே
பருவம் வந்ததா...
பருவம் வந்து நின்றதாலே
முத்தம் தந்ததா!..

கவியரசன்
மீண்டும் இங்கே
வரவேண்டும்..
கனித் தமிழில்
கருத்தொன்றைத்
தரவேண்டும்!..

கண்ணுக்குள் ஒரு முத்தம்
காதல் என்றது..
காதுக்குள் மறு முத்தம்
கவிதை என்றது..
கையினிலே ஒரு முத்தம்
கலைகள் என்றது..
உயிருக்குள் ஒரு முத்தம்
உலகம் ஆனது..

சேயிழையாள் முத்தம்
செவ்விதழாள் முத்தம்
மாறில்லாத முத்தம்..
நிகர்வேறில்லாத முத்தம்...


கடலேறிச் சென்றாலும்
காற்றேறி நின்றாலும்
கண்ணிமையில் நிற்கிறது
கன்னி மயில் முத்தம்...

கனியிதழில் நித்தம்
கற்கண்டாய் முத்தம்
இனிக்காதோ சித்தம்
இனியெதற்குச் சத்தம்!..

இன்னும் பல முத்தம்
இயம்பிடவே சித்தம்!...
ஆனாலும் வலைத் தளத்தில்
எழுந்திடுமே சத்தம்!..
ஃஃ

முருகா முருகா
முருகா முருக 
***

6 கருத்துகள்:

  1. தங்களின் முத்தங்களின் அணிவகுப்பைக் கண்டேன், ரசித்தேன்.  நான் ஜூலை ஆறாம் தேதி முத்த தினத்துக்காக எழுதிய கவிதைகள் அவை!  என் முத்தங்களின் அணிவகுப்புக்கு முகநூலில் அனுஷ் படம் இணைத்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் அணிவகுத்திருப்பது ஆரோக்ய முத்தம், அன்பின் முத்தம்! 

    நான் எழுதி இருந்தது காதலின் முத்தம். கவர்ச்சியின் முத்தம்!!

    பதிலளிநீக்கு
  3. முத்தம் என்பதை நாங்கள் சொல்லும் மித்தம், நல்ல தமிழில் வீட்டின் மைற்றம் என்று நினைத்துப் படிக்க வந்தேன். காலையிலேயா?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முத்தங்களின் விளக்கம் பற்றி கூறிய பதிவு அருமை. சத்தமில்லா முத்தத்தோடு, சந்தம் நிறைந்த முத்தக்கவிதை நன்றாக உள்ளது. தாங்கள் எழுதிய கவிதையை ரசித்துப் படித்தேன்.. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. நிறைந்த பாடல்களால் அணிவகுத்து விட்டீர்கள்.

    "இன்னும் பல முத்தம்
    இயம்பிடவே சித்தம்!...
    ஆனாலும் வலைத் தளத்தில்
    எழுந்திடுமே சத்தம்!.." ரசனையாக முடித்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..