நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 04, 2024

நினைவெல்லாம் 8


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 19
புதன்கிழமை

நினைவெல்லாம் தொடர்கின்றன


அமுதே தமிழே நீ வாழ்க
அழகே உந்தன் புகழ் வாழ்க..

1970  ல் எங்கள் வீட்டிற்கு மர்பி டிரான்சிஸ்டர் ரேடியோ வந்தது.. அப்போதைய நடைமுறைகளின்படி  அதனை அஞ்சலகத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றாக வேண்டும்..

அகில இந்திய வானொலியின்
திருச்சிராப்பள்ளி  நிலையத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் மங்கல இசையுடன் தேவாரத் திருப்பதிகங்களை ஒலிபரப்பு செய்வர்..

அவை பெரும்பாலும் திரு. தருமபுரம் P. சுவாமிநாதன் ஐயா அவர்கள் பாடியதாகத் தான் இருக்கும்..

அப்படிக் கேட்டு வளர்ந்தபோது மனதில் பதிந்த பாடல்கள் இவை:


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நம சிவாயவே..

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.. 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்  
  மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி    
  சனிபாம்பி ரண்டும் உடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.. 

மேலும் 
பித்துக்குளி முருகதாஸ்  அவர்களது பஜனைப் பாடல்களும் அடிக்கடி ஒலிபரப்பு செய்யப்படும்.. அப்படியான நிகழ்வுகளின் வழியே மனதில் பதிந்தவைகளில் சில..


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..


அலை பாயுதே கண்ணா என் மனம் மிக
அலை பாயுதே உன் ஆனந்த மோகன  
வேணு கானமதில் அலை பாயுதே..

ஸ்ரீமான் ஊத்துக்காடு வேங்கடசுப்பு ஐயர் அவர்தளது கீர்த்தனை அது..

மார்கழி அடுத்த சில தினங்களில் வர இருக்கின்ற நிலையில் வானொலி வழியே
மனதில் பதிந்த பாடல்கள்..


பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே..

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக்
குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்..

எப்போதாவது இரவில் - இலங்கை வானொலியின்
தமிழ் ஒலிபரப்பு கிடைக்கும். அப்படிக் கிடைத்த ஒலிபரப்பில் ஒருமுறை தேவார வகுப்பு நடந்து கொண்டிருந்தது..

அதன் வழி மனதில் பதிந்த திருப்பாடல் -


மாதர்ப் பிறைக்கண்ணி யானை 
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் 
அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா 
றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு 
வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்.  

1987 ல் ஏழு திருமுறைகளையும் தல வரிசைப்படி வாசிக்கின்ற நல் வாய்ப்பு கிட்டியது...

அப்போதெல்லாம் ஜெராக்ஸ் என்பது கடினமான ஒன்று... 

எனவே மூவர் பாடியருளிய சில திருப்பதிகங்களையும் திருப்பதிகங்களில் இருந்து திருப்பாடல்கள் சிலவற்றை இரண்டு குயர் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டேன்..

அப்படி எழுதும்போது சில திருப்பாடல்கள் தாமாகவே என் நெஞ்சில் பதிந்தன..

அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் வைக்கின்றேன்..


நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்கடன் அடியேனையுந் தாங்குதல் 
என்கடன் பணி செய்து கிடப்பதே..

விரித்தபல் கதிர்கொள் சூலம் 
  வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால
  பயிரவ னாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு 
  ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் 
  செந்நெறிச் செல்வ னாரே..
 
இப்போது கண் பரிசோதனை முடிந்த நிலையில்  சுந்தரர் அருளிச்செய்த  பதிகம் ஒன்றைக் கேட்பதற்கு ஆவல் பிறந்தது..   

அது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுக்கு இடக் கண்ணைப் பெற்றுத் தந்த திருப்பதிகமாகும்

ஐயா சம்பந்த குருக்கள் அவர்கள் பாடிச் செய்திருந்த பதிவு கிடைத்தது.. மனம் நெகிழ்ந்து திருப்பதிகத்தைக்  கேட்ட நிலையில் திருப்பதிகத்தின்  முதல் பாடல் மனதில் பதிந்தது.... 

அந்தப் பாடல் இதோ..


ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
  ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந் தான் பெரிதும் உடை யானைச்
  சிந்திப்பார் அவர் சிந்தையு ளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
  என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம் மானைக்
  காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 

நினைவெல்லாம் எனும் இச்சிறு தொடர் மார்கழிப் பதிவுகளைக் கடந்து தை மாதத்தில் தொடரும்..

இப்பதிவுகளில் ஊக்கம் அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
ஃஃ

அமுதே தமிழே நீ வாழ்க
அழகே உந்தன் புகழ் வாழ்க.. 

ஓம்  சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. வேயுறு தோளிபங்கன் மட்டும் கேட்ட நினைவு இருக்கிறது.  மேலும் பித்துக்குளி முருகதாஸ் பாடல்கள் கேட்டிருக்கிறேன்.  பித்துக்குளி முருகதாஸ் அவர்களுடன் அப்பாவுக்கு பழக்கம் உண்டு.  தஞ்சையில் அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு அப்பா சென்று பார்த்து வருவார்.  ஒருமுறை அவர் வீட்டுக்கும் வந்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.. தஞ்சையில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் தங்கியிருந்ததாக என் தந்தையும் சொல்வார்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி
      ஸ்ரீராம் ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பகிர்ந்த அனைத்தும் நல்ல பாடல்கள்.இப்போது தாங்கள் பகிர்ந்த பாடல்களை பாடி இறைவனை தரிசித்துக் கொண்டேன் இவற்றில் சிலவற்றை நானும் கேட்டு, பாடி இறைவனை தொழுதுள்ளேன். இறைவனின் நாமங்களை துதித்து பாடும் வாய்ப்பும், எந்நேரமும் அவனை சிந்தனை செய்யும் மனதையும் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்நிலை தங்களுக்கு வாய்த்திருப்பதற்கு இறைவனுக்கு பல கோடி நன்றிகள்.

    முதல் படம் கண்களையும் மனதையும் கவர்கிறது. 🙏.

    தங்கள் கண்களின் உபத்திரவங்கள் நீங்கி தங்கள் உடல்நலம் நல்லபடியாக வேண்டுமெனவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் "நினைவெல்லாம்" பகிர்வை தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  3. தங்களது பிரார்த்தனைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி
    நலம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. தருமபுரம் ஸ்வாமிநாதன் ஐயா பாடும் திருப்பதிகங்கள் கேட்டிருக்கிறேன்.

    ட்ரான்ஸிஸ்டர் என்றாலே எனக்கு என் தாத்தா நினைவுதான் வரும் அவர் காதில் அருகில் வைத்துக் கேட்பார். சில சமயம் அதற்கான ஸ்டாண்டில் வைத்துக் கேட்பார். ஆனால் பெரும்பாலும் காதருகில் வைத்துக் கேட்பார்.

    சின்ன வயதிலேயே பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பாடல்களும் கேட்டிருக்கிறேன். சிறிய வயதில் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் கணீர் குரல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிரான்சிஸ்டர் உலகம் தனியானது...

      தருமபுரம் சுவாமிநாதன் அவர்களது பாடல்களை இப்போதும் கேட்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..