நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 03, 2024

வடை பஜ்ஜி


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
கார்த்திகை 18
செவ்வாய்க்கிழமை


அன்றைக்கு -
இந்த ஊர்ப் பேருந்து நிலையத்தில் 
பேருந்திற்காக  காத்திருந்த போது அங்கிருக்கின்ற சிற்றுண்டிக் கடைகளில் மக்களின் பரபரப்பு...

" எனக்கு ரெண்டு வடை.. "

" எனக்கு மூனு போண்டா.. "

" வடைக்கு சட்னி இருக்கா?..  இல்லையா!.. "

காணாததைக் கண்ட மாதிரி மக்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தனர்..

கடைக்காரன்
வெள்ளை நிறத்தில் அழுக்குப் பிடித்த வாளியில் இருந்து குரூட் ஆயில் மாதிரியான ஒன்றை இருப்புச் சட்டியில் ஊற்றியதைக் கவனித்து விட்டு வெளியில் வந்து சாவகாசமாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வடை பஜ்ஜியை விட சுவையாக இருந்தன..

பதிவின் படங்களில் காணப்படும் வடை பஜ்ஜி போண்டா வகையறாக்களைப் பற்றி எவ்வித சந்தேகமும் வேண்டாம்..


உணவு விற்பனை செய்கின்ற பெரிய கடைகளில் 
காலை நேரத்தில்  வழுக்கு பிடித்த பெரிய வாணலியில் பனை எண்ணெயை (Palm oil) ஊற்றி முதலில்  ராசியான உளுந்த வடை..


பின்னர் அதே எண்ணெயில் பருப்பு வடை  பஜ்ஜி, போண்டா, சமோசா - என, இன்ன பிற வகையறாக்கள்..


இதெல்லாம் அடுத்தடுத்ததாக தயாரிக்கப்பட்டு பொது மக்களிடம் விற்கப்படுபவை என்பதை நினைவில் கொள்ளவும்.. 

வேறு சில கடைகளில் இதே என்ணெயில் அவித்த முட்டையைக் கடலை மாவு விழுதில் புரட்டி பொரித்து எடுக்கின்றனர்..

இப்படியானவர்களின் பார்வையில் முட்டை என்பது சைவ உணவு.. 
( இந்த காரணத்தால் தான்  - வெளியில் சாப்பிடுவதில் மிகக் கவனமாக இருக்கின்றேன்  நான் )

மேலும் சில கடைகளில் 
இதே எண்ணெயில் உருளைக் கிழங்கை  (சிப்ஸ் ) சீவித் தள்ளி பொரித்து அள்ளுகின்ற வைபவமும் உண்டு..

இத்தனைக்கும்  ஒரு சில கடைகளில் மட்டுமே எண்ணெய்யை அவ்வப்போது மாற்றுகின்றனர்.. 

பெரும்பாலான இடங்களில்
எண்ணெய் குறையக் குறைய கொதிக்கின்ற எண்ணெயுடன்  வேறு பழைய எண்ணெயைக் கலந்து கொள்வதே வழக்கம்..

ஒரு முறை கொதிநிலைக்கு வந்த எண்ணெயை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்துவது உடலுக்குக் கேடு என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்... ஆனால் இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவது இல்லை..

இத்தோடு இந்த எண்ணெய் மகாத்மியம் முடிகின்றதா...  -  என்றால்,

இதற்குமேல் தான் ஆரம்பிக்கின்றது...

அடுத்த நாள் உருகிய களிம்பு மாதிரி காட்சி தருகின்ற - இந்த எண்ணெயைப் பலரும் காசு கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்..

எதற்காம்??..

வேறெதுக்கு!..
சாலையின் ஓரங்களை அலங்கரிக்கின்ற அதி விரைவு வறுவல் பொரியல் 
 கடைகளின் நித்திய பயன்பாட்டிற்குத்தான்..

விலையும் மலிவு.. பயனும் அதிகம்!!..

இப்படி இந்தக் களிம்பு எண்ணெய்யைக் கொண்டு வந்து - மெழுகு பதத்திற்கு வரும் வரை பாடாய்ப்படுத்தி - அதனோடு  புதிய எண்ணெயைக்  கலந்ததும் புலால் உணவுகளின் வழி ஆதாயம்  தொடங்குகின்றது..

தின்பவர்க்கோ ஆரோக்கியம்  குறைகின்றது..

அன்றைய மொத்த வருமானத்திற்கும் இந்த அழுக்கு எண்ணெய் தான் அடிப்படை..

மொளகாத் தூள் பட்டை கிராம்பு ஏலக்காய்  மசாலாவை அள்ளிப்  போட்டு களிம்பு எண்ணெயைக் கலந்து அடித்தால் திங்கிறவங்களுக்கு தலையும்  புரியாது.. காலும் புரியாது... ஏனென்றால் புலால் வகை உணவுகளின்  மகத்துவம் அப்படி!..

இப்படியான உணவுகளைக் குடும்பத்துடன் தின்று தீர்த்து -  திளைக்கின்றவர்கள் ஏராளம்...
ஏராளம்.

கெட்ட கொழுப்பு உட லில் சேர்வதற்கு இதுவே அடிப்படை.. 

நாம் நினைத்துக் கொண்டு இருப்போம்... கடைக்காரன் ரொம்பவும் நல்லவன்... சட்னி சாம்பார் எல்லாம் நாம கேக்காமலேயே தர்றான்!.. - என்று...

ரோட்டுக் கடை சமாச்சாரம் என்பது இன்றைய நாட்களில் யோசித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.. 

இதே போல ரோட்டோரத்தில் இரண்டும் கூடிய உணவகம் என்பது வேறொரு பயங்கரம்..

பணம் பண்ணுகின்ற விஷயத்தில் ஈவு இரக்கம் என்று எதுவும் இல்லை...

உணவு ஏவாரத்தில்
எல்லாருமே இப்படித் தான் - என்று சொல்வதற்கும் வழி இல்லை.. 

பெரும்பாலான உணவு ஏவாரிகள் இப்படித்தான்..

நமது ஊரில் உணவின் மீதான  விழிப்புணர்வு என்பது  அறவே இல்லை..

முன்னும் பின்னும்
எவ்வித விவரக் குறிப்புகளும் இன்றி சிறுதீனிப் பொட்டலங்கள் பேருந்து நிலையங்களில் பரவலாக விற்கப்படுவதே இதற்கு சாட்சி..

மேலும்,
இதை யாரும் கண்டு கொள்வதும்  இல்லை.. கருத்தில் கொள்வதும்  இல்லை..

இந்நிலையில் நாம் என்ன செய்வது?..

முற்றாக அவற்றில் இருந்து  ஒதுங்குவது..

அல்லது,

விழித்துக் கொண்டோர் எல்லாம்
பிழைத்துக் கொண்டார்...

-  என்ற பாடலை நினைத்துக் கொண்டே வடையை வாங்கித்  தின்பது!..
ஃஃ
நமது நலம் நமது கையில்..

வடை பஜ்ஜி இன்ன பிற 
கோஷ்டிகளிடம்  இருந்து காப்பாத்துங்க முருகா..

முருகா முருகா
***

திங்கள், டிசம்பர் 02, 2024

சோம வாரம் 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
திங்கட்கிழமை

மூன்றாவது சோம வாரம்


இன்றைய தரிசனம்
திரு ஐயாறு

இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ தர்மசம்வர்த்தனி

தலவிருட்சம்
வில்வம்
தீர்த்தம் காவிரி

அம்மையப்பன் -
ஐயாறப்பர் எனவும் அறம் வளர்த்த நாயகி எனவும் வழங்கப்படுகின்ற இத்தலம் காசிக்கு நிகரானது..

திருநாவுக்கரசருக்கு கயிலாய மலையாய் 
திருக்காட்சி நல்கிய திருத்தலம்..

தெற்கு கோபுரத்தின் வாயிற்காவலர் யம தர்மராஜனை விரட்டியடித்ததால் சிவாம்சம் பெற்று ஸ்ரீ ஆட்கொண்டார் எனத் திகழ்கின்றார்.. அவர் முன்பாக  நந்தீசர் சேவை சாதிக்கின்றார்..

இவரது சந்நிதிக்கு முன்பாகத்தான்  கலய நாயனார் ஏற்படுத்திய குங்கிலியக் குண்டம் இருக்கின்றது..

குங்கிலியக் குண்டம்








சித்திரை விசாகத்தன்று ஸ்வாமியும் அம்பாளும் நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவி  தம்பதியருடன் -  திருப்பழனம், 
திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி , திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு எழுந்தருளும் சப்த ஸ்தானம் எனும் கோலாகலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து வருகின்றது..





















அன்னை பராசக்தி - அறம் வளர்த்த நாயகி என, இத்தலத்தில் முப்பத்திரண்டு அறங்களைச் செய்தனள் என்பது தலபுராணம்..



அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரது திருவாக்கிலும் இடம் பெற்ற திருத்தலம்..

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, டிசம்பர் 01, 2024

அன்னாபிஷேகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை16
ஞாயிற்றுக்கிழமை


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி...  6/55/1 
-: திருநாவுக்கரசர் :-


அன்னாபிஷேகம் செய்விக்கப்பட்டதைப் போல வெள்ளிப் பனிப் பொழிவில் திளைத்திருக்கின்ற திருக்கயிலாயம்..
ஃஃ

சோமவார தரிசனத்திற்கென நாட்களை ஒதுக்கியதில் அன்னாபிஷேகப் படங்களைப் பதிவிடுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது..

எந்தெந்தத் தலங்கள் என்பது தெரியவில்லை..

படங்கள் அனைத்தும் நண்பர்கள் அனுப்பியவை..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..







தஞ்சை ஸ்ரீ பெருவுடையார்

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 6/55/7
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***