நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 12, 2022

மங்கல மார்கழி 28

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.. 231
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்
செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்..28
*
-: ஆழ்வார் திருமொழி :-


நோற்றேன் பல்பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான் 
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1035
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-

: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திருக்கச்சி ஏகம்பம்


இறைவன்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ காமாக்ஷியம்மை

தீர்த்தம் - கம்பை
தலவிருட்சம் - மா மரம்

பஞ்ச பூதத் திருத்தலங்களுள்
மண்ணின் பகுப்பு..
எண்ணிறந்த பெருமைகளை உடைய திருத்தலம்..

அம்பிகையாகிய பராசக்தி தவமியற்றிய தலங்களுள் முதன்மையானது..

ஈசனின் ஆணைப்படி
நாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாமல் செய்தனள் அம்பிகை..

கம்பையாற்றில் மணலால் லிங்கம் இயற்றி வழிபாடு செய்து வருங்கால் ஈசன் எம்பெருமான் அம்பிகையைச் சோதிக்க  விரும்பி கம்பையாற்றில்
பெரு வெள்ளத்தினை ஏற்படுத்தினன்..

அது கண்டு அஞ்சிய அம்பிகை  - தான் அமைத்த லிங்கத்தினை வெள்ளத்தினின்று காப்பதற்காக ஆரத் தழுவிக் கொண்டனள்..
 

அம்பிகையின்
மணிவளைத் தடமும் திருமுலைத் தடமும் மணல் இலிங்கத்தினில் பதிய ஈசன் வெளிப்பட்டு அம்பிகைக்கு அருள் புரிந்து நின்றனன்..

திரு ஒற்றியூரில் பரவை நாச்சியாருக்கு அளித்த சூளுரையை மீறியதால் சுந்தரர் பார்வை இழந்தார்..

தட்டுத் தடுமாறி காஞ்சி மூதூருக்கு வந்து சேர்ந்த சுந்தரருக்கு  அம்பிகை இடக் கண்ணில் பார்வை கொடுத்தருளினாள்..

கம்பையின் பெருமானைக் காண்பதற்குக் கண் பெற்றதைத் திருப்பதிகம் முழுதும் பாடினார் சுந்தரர்..


எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனைவழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.. 7/61
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

மேற்கண்ட திருப்பாடலினுள் தலவரலாற்றினைச்  சொல்கின்றார் ஸ்வாமிகள்.. 

இத்திருப்பதிகத்தினை நாளும் பாராயணம் செய்வதால் கண் நோய்கள் அகலுகின்றன என்பது நம்பிக்கை..
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. சிறப்பான தலம் குறித்த தகவல்களோடு பதிவு சிறப்பு. அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திருப்பாவை பாசுரமும்,பதிவின் பாடல்களும் அருமை. திருமங்கையாழ்வார் அருளிய திருமொழியை பாடியதும் கண்களில் நீர் பெருகியது. நாராயணனை தரிசிக்கும் போது இன்னும் எனக்கு எத்தனைப் பிறவியோ என்ற எண்ணத்தில் மனதெல்லாம் கவலை படர்ந்தெழுந்தது.

    ஐயன் ஏகாம்பரேஸ்வரரையும், அன்னை காமாக்ஷியம்மையும் தரிசித்து கொண்டேன். கோவில் வரலாறு செய்திகள் அருமை. தெய்வீக படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி முதற்பத்தின் பாடல்கள் அனைத்துமே உள்ளத்தை உருக்குபவை.. அதனாலேயே மார்கழியின் நிறைவாக அந்தப் பாடல்களைப் பதிவு செய்துள்ளேன்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. அவ்வப்போது வந்து வாசிக்கிறேன். மனதிற்கு நிறைவைத்தருகின்ற அடிகள். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் எனக்கு மகிழ்ச்சி.. என்றென்றும் நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..