நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.. 184
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மா மலைவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1030
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம்
திருநாட்டியத்தான்குடி
இறைவன்
ஸ்ரீ ரத்னேஸ்வரர்
ஸ்ரீ மாணிக்கவண்ணர்
அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
தலவிருட்சம் - மாவிலங்கை
மார்கழி ஏழாம் நாள் (22/12) பதிவில் குறிப்பிடப்பட்ட திருத்தலம் திருப்புன்கூர்..
மார்கழி ஏழாம் நாளின் (22/12) பதிவில் குறிப்பிடப்பட்ட திருத்தலம் திருப்புன்கூர்..
இங்கு ஸ்ரீ நந்தனார் ஸ்வாமிகள் திருக்குளத் திருப்பணி செய்வதற்கு எண்ணியபோது
ஸ்ரீ விநாயகப் பெருமான் வந்து உதவி செய்தார்..
அதற்கான ஊதியமாக நந்தனார் கொடுத்த நெல்லை விநாயகப் பெருமான் - தந்தையிடம் கொடுக்க அவர் அதனைத் தலை மேல் வைத்துக் கொண்டார்..
தலையில் இருந்த கங்கையின் ஸ்பரிசத்தில் நெல் மணிகள் முளைத்து நாற்றாகி விட்டன - என்ற நிகழ்வினைச் சொல்லியிருந்தேன்..
அப்படி முளைத்தெழுந்த நாற்றுகளை ஈசனும் அம்பிகையும் நடவு செய்த இடம் தான் திருநாட்டியத்தான்குடி..
இவ்வூரில் தரிசனம் செய்வதற்காக ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வந்தபோது ஈசன் ஆலயத்தில் இல்லை..
திகைத்த சுந்தரர் அருகிருந்த விநாயகரைக் கேட்க அவர் ஈசானிய மூலையைக் காட்டுகின்றார்..
அங்கே வயல் சேற்றில் உழவன் உழத்தியாக
நாற்றுகளை நடவு செய்தபடி அப்பனும் அம்மையும் திருக்காட்சி நல்கினர் என்பது தலவரலாறு..
இப்போதும்
ஆடி மாத கேட்டை நட்சத்திரத்தை அனுசரித்து
நடவு வைபவம் நிகழ்கின்றது..
சிவ அபராதம் செய்பவர்களைத் தண்டித்தவராகிய கோட்புலி நாயனார் இவ்வூரினர்.. அவர் திரு ஆரூருக்குச் சென்று சுந்தரரைக் கண்டு வணங்கி தம்முடைய ஊருக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொள்கின்றார்..
அதன்படி திருநாட்டியத்தான் குடிக்கு வருகை தரும் சுந்தரரை வரவேற்று உபசரித்து மகிழும் கோட்புலியார் தனது மகள்கள் வனப்பகை, சிங்கடி எனும் இருவரையும் ஏற்று மணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகின்றார்.. அதை மறுத்த சுந்தரர் அவர்கள் இருவரையும் தமது மகள்களாகச் சொல்லி வாழ்த்துகின்றார்..
நாட்டியத்தான்குடி திருப்பதிகத்தின் பத்தாவது திருப் பாடலில்
" நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடியப்பன் திரு ஆரூரன் உரைத்த.. "
என்று சிறப்பிக்கின்றார்..
ஸ்ரீ சுந்தரர் தமது திருப்பதிகங்கள் ஏழில் சிங்கடியப்பன் என்றும் ஒன்பது திருப்பதிகங்களில் வனப்பகையப்பன் என்றும் தம்மைக் குறித்துக் கொள்கின்றார்..
ஸ்ரீ சுந்தரர் திருவடிகள் போற்றி..
ரிஷப வாகனத்தினோடு
கலசத்தில் தென்னம் பாளையும்
நாற்று முடிகளும்
பூரண கும்பமும்
இருப்பதைக் காணலாம்..
***
கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை
கல்லாதே பல கற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நானுனக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ..7/15
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 6
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
எல்லா பாசுரமுமே மனப்பாடம் (பாட்டி, தாத்தா சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்ததால்) என்றாலும் நேற்றைய பாசுரமும் இன்றைய பாசுரமும் என் மனதில் ஆழமாகப் பதிந்து போனவை. அது போல கோள் என்ன செய்யும் பதிகமும்
பதிலளிநீக்குகீதா
அன்பின் சகோதரி..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
இறைவன் அருளால் எல்லாமும்
நலமே... மகிழ்ச்சி.. நன்றி..
திருநாட்டியத்தாங்குடி பற்றி அறிந்தேன் அண்ணா
பதிலளிநீக்குமிக்க நன்றி
கீதா
அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதிருநாட்டியத்தான்குடியில் எங்கள் உறவுகள் இருந்தன. இப்போது இல்லை!
பதிலளிநீக்குநமச்சிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க..
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி... வாழ்க நலம்..
வாழ்க வையகம் தரிசித்தேன்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குசிவாய நம ஓம்..
நீக்குதிருநாட்டியத்தான்குடி சென்றுள்ளேன். அருமையான கோயில்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திருப்பாவை பாசுரமும், திருவாசக பாடல்களும் பாடிக் கொண்டேன். திருநாட்டியத்தான்குடி சிவ தரிசனம் மன மகிழ்வுறச் செய்தது.அவ்வூரைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டேன். தொடர்ந்து பல ஊர்களின் சிவ வரலாறு குறித்த தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான கோவில் குறித்த தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நலமே விளையட்டும்.
பதிலளிநீக்கு