நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து.. 221
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-
எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார்த் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.. 1032
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம் - திருமழபாடி
அம்பிகை
ஸ்ரீ சுந்தராம்பிகை
ஸ்ரீ அழகாம்பிகை
தீர்த்தம்
கொள்ளிடப் பேராறு
லக்ஷ்மி தீர்த்தம்
தலவிருட்சம் - பனை
நந்தியம்பெருமானுக்கு திருமணம் நடைபெற்ற தலம்..
" மழபாடியை மறந்தனையோ!.. " - என, ஈசன் அழைக்க - சுந்தரர் தரிசித்த தலம்..
கொள்ளிடப் பேராறு
கோயிலின் வாசலில் உத்தர வாகினியாகப்
பாய்கின்றது..
திருக்கயிலாய மாமலையில் அம்மையப்பனின் சேவையில் இருந்த நந்தியம்பெருமான்
மனதிலும் ஒரு ஆசை -
' நாமும் மண்ணுலகில் பிறந்து சிவபூஜை இயற்ற வேண்டும்! '.. - என்று..
அதன்படி சிலாத முனிவருக்கு வெள்ளிப் பேழையில் சூரியப்
பிரகாசத்துடன்
மூன்று கண்களும்
நான்கு கரங்களும்
கொண்டு
மகவாகக் கிடைத்தார்..
திகைப்படைந்த
முனிவருக்கு ஈசனின்
விளக்கம் கிடைத்தது..
முனிவரின் குடிலில்
ஜபேசன் எனப் பெயர் கொண்டு வளர்ந்தார்..
கல்வி ஞானம் பெற்று பனிரண்டாம் வயதில் கழுத்தளவு நீரில் நின்று எண்ணாயிரங்கோடி முறை பஞ்சாட்சரம் ஜபித்தார்..
ஜபேசனின் தவத்திற்கு
அம்மையப்பர் எழுந்தருளினர்..
நீருக்குள் நின்றிருந்த ஜபேசன் கரையேறினார்.. கழுத்துக்குக் கீழ் அவரது உடல் எலும்புக் கூடாக இருந்தது..
நீருக்குள் நின்றிருந்ததால்
உடலை மீன்கள் அரித்து எடுத்திருந்தன.. அது கண்டு மனம் இரங்கினாள் அம்பிகை..
அந்நிலையில் தாய்மை மேலிட்டு அம்பிகையின் திருத்தன பாரங்கள்
சுரந்து வழிந்தன..
தேவி தனது பாலமுதத்தினால் தவக் கொழுந்தினை நீராட்டி மகிழ்ந்தாள்..
ஜபேசனின் மேனி முன்னிலும் அழகாகப் பொலிந்தது.. அத்துடன் சந்திர, சூரிய, காவிரி, கங்கை தீர்த்தங்களாலும் நீராட்டப்பட்டார்..
" யாது வேண்டும் குழந்தாய்!.. " என்று அம்மையப்பன் வினவினர்..
" என்றென்றும் தங்களுக்குப் பணி செய்திருக்க வேண்டும்.. தங்களது திருமுக
தரிசனம் கண்டபடியே காத்திருக்கவேண்டும்!. "
ஜபேசனின் வேண்டுதல் அம்மையப்பனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது..
அந்த அளவில் ஜபேசனும் ஈசனின் மகனாகி நந்தீசன் எனப் பெயர் கொண்டார்..
தமது புத்திரனுக்கு மணம் முடித்திட விருப்பம் கொண்ட
அம்மையும் அப்பனும்
வியாக்ரபாத முனிவரின் திருக்குமாரத்தியாகிய சுயம்பிரகாஷினி தேவியை நந்தீசனுக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று கல்யாணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்..
" கயிலாயக் காவலன் " என்று பட்டம் பெற்ற நந்தீசன்
" அதிகார நந்தி " என,
முடி சூட்டப்பட்டார்..
அத்துடன்
" நந்திக் கல்யாணம் கண்டோர்க்கு முந்திக் கல்யாணம் " - என்றொரு சொல் வழக்கும்
கிடைத்தது.
இதில் ' முந்திக் கல்யாணம் ' - என்பது அனைத்து மங்கலங்களையும் குறிப்பதாகும்..
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல்மிளிர் கொன்றை
அணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே..7/24
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 8
கோலவரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திரு உத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
சுவாரஸ்யமான நந்தீசர் புராணம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..
தரிசித்தேன் நன்று வாழ்க வையகம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..
வாழ்க வளமுடன்..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குஇந்தக் கதையெல்லாம் படிச்சிருந்தாலும் தலங்களைத் தரிசிக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி... நன்றியக்கா..
நந்தீசன் கதை சுவாரசியம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலம்..