நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 06, 2022

மங்கல மார்கழி 22

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.. 169
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 22


அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


மானேய் கண்மடவார் மயக்கில்பட்டுமாநிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம்செய்தேன்
தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே..
1029
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் திருவலம்புரம்
( மேலப்பெரும்பள்ளம்)


இறைவன்
ஸ்ரீ வலம்புரநாதர்


அம்பிகை
வடுவகிர்கண்ணி

தீர்த்தம்
லக்ஷ்மி தீர்த்தம்,
பிரம்ம தீர்த்தம்
ஸ்வர்ண பங்கய தீர்த்தம்..
தலவிருட்சம் - பனை


ஒரு சமயம் ஈசனைக் குறித்து தவம் இயற்றுதற்கு
ஸ்ரீ ஹரி பரந்தாமன் விரும்பியபோது
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை இத்தலத்தில் அம்பிகைக்குத் தோழியாக விட்டுச் சென்றார்.. 

தவத்தின் பயனாக ஈசனிடம் இருந்து சக்கரத்தையும் கதையையும் பெற்ற பிறகு மீண்டும் இத்தலத்திற்கு வந்தபோது வலம்புரிச் சங்கு பத்மம் இவற்றை அம்பாள் வழங்கியதாக தல புராணம்..

ஸ்ரீ ஹேரண்ட முனிவர்

ஒரு முறை திருவலஞ்சுழிக்கு அருகில் ஆதிசேஷனால் ஏற்பட்ட பெருந்துவாரத்தினுள் காவிரி வீழ்ந்து மறைந்து போனாள்..

அவள் மீண்டு வருவதற்காக தம்மைத் தாமே பலியிட்டுக் கொண்டார்
ஸ்ரீஹேரண்ட முனிவர்..

காவிரியாள் மீண்டும் நிலத்துக்கு வந்தாள்.. தனக்காக தன்னுயிர் கொடுத்த முனிவரை 
நன்றியுடன் நினைத்தாள்..

தான் கடலுடன் கலப்பதற்கு முன்னால் கரையேற்றி விட்டாள்..

ஹேரண்ட முனிவர் கரையேறிய தலம் தான் திருவலம்புரம்..
திருக்கோயிலினுள்
ஹேரண்டமுனிவருக்கு சிலாரூபம் உள்ளது..

ஸ்வாமி சுயம்புலிங்கம்..
லிங்கத்தின் உச்சியில் துளைகள் உள்ளதால் குவளை சாத்தி அபிஷேகம்..


மூவரும் பாடியருளிய திருத்தலம்..

காவிரிப்பூம்பட்டினத்திற்கு முன்னதாக மேலப் பெரும்பள்ளம் எனும் ஊரில்
அமைந்துள்ளது இக்கோயில்..
மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் கடைமடையைக்
கடந்ததும் சிறிது தொலைவில் உள்ளது மேலப் பெரும்பள்ளம்..
*
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம்  அறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்தன திடம்வலம் புரமே.. 7/72
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 5


ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. ஹேரண்ட முனிவரின் கதை சுவாரஸ்யம்.  ஓம் நமச் சிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்புன் ஸ்ரீராம்..
    ஊர் நலம் உலக நலம் காப்பதற்காக தம்மைத் தாமே தியாகம் செய்து கொண்டதாக புராணத்தில் குறிப்பிடப்படுவர் ஸ்ரீ ததீசி முனிவர்.. அசுரன் ஒருவனை வெல்வதற்காக தனது முதுகெலும்பை தேவேந்திரனுக்குக் கொடுத்தவர்.. முதுகெலும்புகளின் உருவாக்கமே இந்திரனின் கையிலுள்ள வஜ்ராயுதம்...

    இதைப்பற்றிய குறள் தங்களுக்கு நினைவுக்கு வந்திருக்குமே!..

    இப்படி ஒரு உயர்ந்த தியாக நிகழ்வுதான் ஸ்ரீ ஹேரண்ட முனிவர் காவிரி வீழ்ந்த பள்ளத்தில் தானும் வீழ்ந்ததும்!..

    ஸ்ரீ ததீசி மகரிஷி போற்றி..
    ஸ்ரீ ஹேரண்டமகரிஷி போற்றி!..

    பதிலளிநீக்கு
  3. ஹேரண்ட முனிவர் கதை சிறப்பு. அம்மையின் பெயர் அழகு.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாசுரம் அருமை. ஸ்ரீஆண்டாள் அருளிய பாசுரத்தையும், மற்ற பாடல்களையும் பாடிக் கொண்டேன். படங்கள் அருமை. ஸ்ரீ ஹேரண்டமகரிஷி கதை அறியாதது. படித்து தெரிந்து கொண்டேன். திருவலம்புரம் கோவில், மூலவர் ஸ்ரீ வலம்புரி நாதர் பற்றிய விபரங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. மேற்சொன்ன ரிஷிகளின் கதைகள் தெரிந்தாலும் இந்த ஊரெல்லாம் போனதில்லை. அருமையான பாசுரமும்/பதிகமும். திருவலம்புரம் பற்றிக் கேள்வியும் படவில்லை. தரிசனங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. அம்மையின் பெயர் வித்தியாசமாய் அழகாக இருக்கிறது. ஹேரண்ட முனிவர் புராணம், தல புராணம் எல்லாம் அறிந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  7. திருவலம் பற்றிய தலபுராணம் மற்றும் ஸ்ரீஹேரண்ட முனிவர் பற்றிய புராணக்கதைகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    அப்பனையும் அம்மையையும் தரிசித்துக் கொண்டேன்!

    மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. அன்பின் துளசிதரன்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..