நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 13, 2014

கள்ளழகர் புறப்பட்டார்

அழகர் வருகிறார்!.. அழகர் வருகிறார்!.. - என எங்கெங்கும் ஆனந்த பரபரப்பு!..
 

வலம்செய்து வைகல் வலங்கழியாதே
வலம்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே!..
- நம்மாழ்வார்.

மாயவன், தூயவன் - தாயவன் நமக்கு!.. என்று,  அவனை வணங்கியபின் அவனைப் பிரிய மனம் இன்றி, அங்கேயே தங்கி சேவை செய்து - 

அன்பர்கள்  தினமும் வலஞ்செய்து  வணங்கும் திருக்கோயில் -  வானவரும் வலம் வந்து போற்றுவதாகிய -  திருமாலிருஞ்சோலை!..

அந்தத் திருக்கோயிலை வலஞ்செய்து வணங்குவதையே வழக்கம் எனக் கொள்க!.. 

- என்று,   நம்மாழ்வார் - வழிகாட்டும் பெருமையை உடையது - திருமாலிருஞ் சோலை எனப்படும் அழகர்மலை.

வானவர்களும் வலஞ்செய்து வணங்கும் திருக்கோயிலை உடைய பெருமான்  - நம் பொருட்டு வீதி வலம் வருகின்றான் எனில் - 

அவன் புகழைக் கேளாத செவிகளும் அவன் அழகைப் பாராத கண்களும் அவன் திருப்பெயரைப் பேசாத நாவும் எதற்கு!?..


அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா சித்திரை பதினெட்டாம் நாள் (மே/ 1) கொடியேற்றத்துடன் தொடங்கியது  


சித்திரைத் திருவிழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த - மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேரோட்டத்தில், கள்ளழகர், கருப்பஸ்வாமி - என திருவேடம் அணிந்தவர்கள் பக்திப் பரவசத்துடன் வலம் வந்தனர்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேரோட்டத்துடன் - திருவிழாக்கள்  நிறைவடைந்த நிலையில்,

அழகர்கோயிலில் இருந்து - ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள் - கள்ளழகர் எனத் திருக்கோலம் கொண்டு புறப்பட்டார்.

அழகர்கோயிலில் நடக்கும் திருவிழாக்களுள் முக்கியமானது சித்திரைத் திருவிழா.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அழகர் - வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இத்திருவிழா, அழகர்கோவிலில் மே/10 அன்று தொடங்கியது.


இரு தினங்களாக  பல்லக்கில் எழுந்தருளி  திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் -

வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக - மே/12 திங்கட்கிழமை மாலை ஐந்து மணியளவில் -

சங்கு சக்கரம் சுழன்ற திருக்கரங்களில் - வளைத்தடியும் சாட்டைக் கம்பும் ஏந்தி,  திருமுடியில் கொண்டையும் உருமாலும் துலங்க, திருச்செவிகளில் கடுக்கண்கள் இலங்க - கண்டாங்கிப் பட்டு உடுத்தி -

கள்ளழகராக உருமாறி மதுரை நோக்கிப் புறப்பட்டார்.


அழகர்கோயிலில் - பதினெட்டாம்படி ஸ்ரீகருப்பஸ்வாமியிடம் விடை பெற்றுக் கொண்டு ,

தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில், தோளுக்கினியனாக - மாநகர் மதுரையை நோக்கிப் புறப்பட்டார்.


திங்கள்கிழமை மாலை  6.45 மணியளவில் திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர்  - இரவு முழுதும் பயணித்து -

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், சுந்தர ராஜன்பட்டி, மறவர் மண்டபம் - வழியாக   பற்பல திருக்கண்களில் (சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி) எழுந்தருளியவாறு இன்று காலை மூன்று மாவடி வந்தருளினார்.

காலை ஆறு மணியளவில் மூன்றுமாவடியில், மதுரை மக்கள் சார்பில் எதிர் சேவை நடைபெற்றது.

பின்னர், வழிநெடுக - திருக்கண்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

அழகருக்கு  வண்ணமயமாக வாணவேடிக்கையுடன்  வரவேற்பு. மாலையில்  தல்லாகுளத்தில் எதிர்சேவை.

தல்லாகுளம்  திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளும் கள்ளழகர் இரவில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் எழுந்தருள்கிறார்.

அங்கு திருமஞ்சனத்திற்குப் பின் சிறப்புப்பட்டாடை சார்த்தப்பட்டு,  ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது.

பக்தர்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தியபடி ஆயிரம் பொன் சப்பரத்தில் தங்கக் குதிரையுடன் எழுந்தருளி, கோரிப்பாளையம் வழியாக,

பக்தர்களின் ஆரவாரத்துடன் - வைகை நோக்கிப் புறப்படுகின்றார்.


சித்ரா பௌர்ணமியாகிய (மே 14) புதன்கிழமை காலை ஆறு மணி அளவில் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

அதன்பின் காலை ஏழரை மணியளவில் அங்கிருந்து புறப்படும் அழகருக்கு, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு வண்டியூர் சென்றடைகிறார். வண்டியூரில் சேஷ வாகனத்திலும், பின் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மறுநாள், தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

அழகர் - 2012
மதுரையில் கள்ளழகர் எழுந்தருளும் வாகனங்கள் முன்னதாகவே மதுரைக்கு வந்து சேர்ந்து விட்டன.

பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவதற்காக,  பதினேழு கி.மீ.,  பயணம் மேற்கொள்கின்றார் - கள்ளழகர். 

வரும் வழி நெடுக - கள்ளழகர் எழுந்தருள்வதற்காக,  பக்தர்கள் அன்புடன் அமைத்திருக்கும் திருக்கண்கள் - 407 என்று செய்தித் தாள்கள் கூறுகின்றன.

துர்வாச முனிவரால் தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் நல்கும் பொருட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியார் சூடிக் கொடுத்த திருமாலையை  அணிந்து கொள்ளும் பொருட்டும் ஸ்ரீசுந்தர ராஜ பெருமாள் -  கள்ளழகராக மதுரையின் வைகைக் கரைக்கு வருகிறார் என்பது அழகர் கோயில் ஸ்தலபுராணம்.


மதுரை விழாக்கோலம் பூண்டு கள்ளழகரை வரவேற்க காத்திருக்கிறது.

ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் அழகர் எழுந்தருளும் மண்டபங்கள் வண்ண மயமான அலங்காரங்களுடன் ஜொலிக்கின்றன.

கூடல் மாநகரில் - வருடந்தோறும் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கூடும் மகத்தான திருவிழாவான சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி!..

அழகரை வரவேற்கவும், அழகர் ஆற்றில் இறங்குவதைத் தரிசித்து 
இன்புறவும் மதுரை காத்துக் கொண்டிருக்கிறது. 

மதுரையோடு சேர்ந்து நம் மனமும் காத்துக் கிடக்கின்றது!..
மதுரை மல்லி போல கண்களும் பூத்துக் கிடக்கின்றது!..
* * *

10 கருத்துகள்:

  1. ஆனந்த அலைகளுடன் அழகர் பற்றிய
    அற்புத பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காண சுந்தரராஜ பெருமாள் வருவதாகவும் அவர் வரும் முன்னே திருமணம் முடிந்து விட்டதால் கோபித்துக் கொண்டு வைகையாறு வரை வந்தவர் திரும்பிச் செல்வதாகவும் ஒரு கதை கேட்ட நினைவு. விளக்க முடியுமா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இதைப்பற்றி நானும் சில தினங்களாகத் தகவல்களைத் தேடினேன். திருவிளையாடற்புராணத்தில் அப்படி ஏதும் இல்லை.
      மேலதிக விவரங்களை நாளைய பதிவில் வழங்குகின்றேன்.
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. பக்திமணம் கமழும் அருமையான பகிர்வு ! இறைவனின் வருகையைக்
    கண்டு மனம் இன்புற்று வாழக் கொடுத்து வைக்க வேண்டும் ஐயா .

    பதிலளிநீக்கு
  5. ஒரு முறையாவது சித்திரைத் திருவிழா மதுரையில் காண வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எப்போது முடியும் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேறும்....
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. அழகரை எதிர்பார்த்து கிடக்கும் அன்பர்கள். விரிவான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..