நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கள்ளழகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளழகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 30, 2018

அழகர் தரிசனம் 2

27/4 அன்று மாலைப்பொழுதில்
அழகர் மலையிலிருந்து புறப்பட்ட
எம்பெருமான் - வழி நெடுகிலும் மக்களின்
அன்பினை ஏற்றுக் கொண்டவராக
மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை கண்டார்..

28/4 இரவு - தல்லாகுளம்
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் திருக்காட்சி நல்கினார்...

29/4 வைகறைப் பொழுதில்
ஆயிரம் பொன் சப்பரத்தில் சேவை..

இன்று அதிகாலையில்
பச்சைப் பட்டுடுத்திய கள்ளழகர்
ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொள்ள வைகையில் இறங்கினார்...


இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில்
எழுந்தருளும் எம்பெருமான்
இரவு வண்டியூரில் எதிர் சேவை கொள்கிறார்..








நாளை (1/5) பகல் 11 மணிக்கு
சேஷ வாகனத்தில் தேனூருக்கு எழுந்தருளல்..

மதியப் பொழுதில் கருட வாகனராக
மண்டூக மகரிஷிக்கு திருக்காட்சி...

இரவு முழுதும் தசாவதாரத் திருக்கோலம்...

2/5 காலை ஜகன்மோகினித் திருக்கோலம்...
இரவு பூம்பல்லக்கு....

மறுநாள் காலையில்
மக்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு
திருமாலிருஞ்சோலைக்குத் திரும்புகின்றார்..


கள்ளழகர் வருகிறார் - என்று,
தேரோடிய வைகைக் கரை
நீரோடித் திளைத்தது...

இனிவரும் நாளில்
கள்ளழகரின் பெருங்கருணையால்
சோணாட்டுக் காவிரியும்
நீரோடிச் செழிக்க வேணும்...

இன்றைய பதிவின்
மனதிற்கினிய காட்சிகளை
அழகிய நிழற்படங்களாக வழங்கிய
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
...


கள்ளழகர் திருவடிகள்
போற்றி.. போற்றி..
ஓம் ஹரி ஓம்..
ஃஃஃ

அழகர் தரிசனம் 1

நேற்று முன் தினம் (28/4) சனிக்கிழமை மாலை
அழகர் மலை எனும் திருமாலிருஞ்சோலையில்
பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பசாமியிடம்
விடை பெற்றுக் கொண்டு மதுரையை நோக்கிப்
புறப்பட்ட கள்ளழகர் பெருமானுக்கு மதுரையின் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...


இன்று அதிகாலையில்
கோலாகல கொண்டாட்டத்துடன் வைகையில்
இறங்கியருள்கிறார்...

அந்த நிகழ்வுகள் வெளியாகும் முன்பாக
நேற்றைய நிகழ்வுகளைத் தரிசிப்போம்..






வைபவங்களின் நிழற்படங்களை
வழங்கிய அன்பு நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...
...

அழகர் பெருமானே
ஆதரிக்க வேணும் ஐயா!...
ஃஃஃ

செவ்வாய், மே 16, 2017

அருள் மழையில் மக்கள்

சுந்தரராஜன்..

அது தான் அவனுடைய பெயர்... திருப்பெயர்!..

ஆனாலும்,
அந்தப் பெயர் கொண்டு அவனை அறிந்திருப்போர் வெகு சிலரே!..

அழகன்.. அழகர்!..

கள்ளழகர்!..

இப்படிச் சொன்னால் கருவில் இருக்கும்
உயிர் கூட - உவகை கொண்டு கை கூப்புகின்றது!...


அவன் ஒருவன் தானே -
வழி நடையாய் வாஞ்சையுடன் நடந்து வருபவன்!..
வாட்டம் தீர்ந்து வாழ்க!.. - என, வாழ்வு தருபவன்!..

ஏறத்தாழ 25 கி.மீ தொலைவு..

அழகர் மலைக்கும் மதுரைக்கும்!..

அங்கேயிருந்து இங்கே வந்து விட்டு திரும்பிச் செல்வதென்றால் 50 கி.மீ..

ஆனந்தக் கும்மாளத்துடன் அழகர் வருகின்ற அழகுதான் என்ன!..
மக்களிடம் விடைபெற்றுச் செல்கின்ற போது நடையில் தளர்வு தான் என்ன!..

மக்கள் வெள்ளத்தில் நீந்திக் களிப்பதற்கென ஓடி வரும் கள்ளழகர் -
தன்னைக் காணும் மக்களின் கவலைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கின்றார்...

மக்களுக்கு ஆசை - கள்ளழகர் இங்கேயே இருந்து விடக்கூடாதா!..

அழகனுக்கும் ஆசை தான் - இந்த மக்களுடனேயே இருந்து விடலாகாதா!..

ஆனாலும் - இந்த இரண்டுக்கும் இடையில் எத்தனை எத்தனையோ விஷயங்கள்!...

கடந்த 8/5 அன்று திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர் -
10/5 அன்று அதிகாலையில் வைகையில் இறங்கினார்..

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஆனந்த மயமாகின.. -

வேண்டுவார் வேண்டுவதே வழங்கிய வண்ணம்
விருப்புற்றோர் தம்முடைய அன்பு மழையில் நனைந்தார்...

காலமும் நேரமும் செல்லச் செல்ல
கள்ளழகர் மலைக்குத் திரும்ப வேண்டிய நாளும் வந்தது..

கடந்த 13/5 அன்று அதிகாலை மதுரையிலிருந்து புறப்பட்ட அழகர் -
14/5 அன்று முற்பகல் 11.30 மணியளவில் பதினெட்டாம்படி கருப்பசாமி வாசலை அடைந்தார்..

அங்கே கோலாகலமாக வரவேற்பு வழங்கப்பட்டது..

பெண்கள் குலவையிட்ட வண்ணம் பதினெட்டு பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்...

நேற்று (15/5) காலை சம்பிரதாய பூஜைகளுடன் உற்சவ சாந்தி நிகழ்ந்தது...

இனி அழகர் எப்போது வருவார்?.. - என,
இப்போதே நாட்களை எண்ணத் தொடங்கி விட்டனர் மக்கள்...

கடந்த ஏப்ரல் மாதம் (28/4) மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருக்கொடியேற்றம் ஆனதிலிருந்து மக்கள் மனமெல்லாம் பரவசம்..

வீட்டுக்கு வீடு திருவிழாவின் உற்சாகம்...

எந்த ஒரு பேதமும் இல்லாமல் எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்..

நாம் நேரில் பார்க்கக் கூடவில்லையே தவிர -
அவற்றுக்கெல்லாம் கண்கண்ட சாட்சிகளாக இதோ இந்தப் படங்கள்!...





தேனூர் கிராமத்தின் வைகைக் கரையில் நடந்து கொண்டிருந்த திருவிழாவை மதுரை மாநகரில் நிகழும்படிக்கு மாற்றியமைத்தவர் -மன்னர் திருமலை நாயக்கர்..




அத்துடன் மாசியில் நிகழ்ந்த மீனாட்சி வைபவத்தை சித்திரைக்கு மாற்றி அதனுடன் அழகர் திருவிழாவினையும் இணைத்தவர் திருமலை நாயக்கர்..





அந்த வகையில் -
இப்படியொரு பெருவிழாவினை நமக்கு வழங்கிய 
மன்னர் திருமலை நாயக்கர் அவர்களுக்கு நன்றி கூறுதற்குக் 
கடமைப்பட்டிருக்கின்றது - தமிழ் கூறும் நல்லுலகு!..











அழகிய படங்களை வழங்கிய 
குணா அமுதன், ஸ்டாலின், அருண் மற்றும்
அனைத்து நண்பர்களுக்கும்
மீண்டும் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்..


மாநகரை ஆளுகின்ற மீனாளின் திருவிழா என்று சொல்வதா!..
மாமலையிலிருந்து வரும் மாலவனின் திருவிழா என்று சொல்வதா!..

மண்ணும் விண்ணும் புகழும்படிக்கு நடந்தது
மக்களின் திருவிழா என்பதே உண்மை!..

நாட்களை எண்ணி எண்ணி விரல்கள் தேய்ந்தாலும்
என்றும் தேயாதது இதயத்தில் கொண்ட அன்பு!..

இதோ - அடுத்த சித்திரைக்கு
வெகு சில நாட்களே!..

கள்ளழகர் திருவடிகள் போற்றி..
மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வியாழன், மே 11, 2017

அன்பு மழையில் அழகர்

வாத்யாரே.. திருவிழா இன்னும் எத்தனை நாள் நடக்கும்!..

கிட்டத்தட்ட திருவிழா நிறைவுக்கு வந்து விட்டது..


 நேற்று (10/5) அதிகாலை 6.30 மணியளவில் வைகையில் இறங்கினார் அழகர்...

கோவிந்தா.. கோவிந்தா!.. - ன்னு ஜனங்க கொண்டாடி நின்னாங்க!..

வைகையில் இறங்கிய அழகர் பெருமானை - வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைத்தார்..

வையாழி நடந்தது...
எதிர் மாலை சாற்று முறையானது...

அதற்குப் பிறகு அழகர் உச்சிப் பொழுதில் ராமராயர் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்..


அங்கும் கோலாகலமாக தீர்த்த மாலை வைபவம் நடந்தது..

அதற்குப் பிறகு இரவு பதினொரு மணியளவில்
வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருளினார்..

இன்று (11/5) காலை வண்டியூர் கோயிலிலிருந்து பகல் பதினொரு மணியளவில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்...

அங்கே கருட வாகனத்தில் ஆரோகணித்து
மண்டூக மகரிஷியின் சாபம் தீர்த்தருளினார்...

இன்றைக்கு பகல் மூன்று மணிக்கு மேல் அங்கப் பிரதட்சணம் நடைபெறுகின்றது...

அதற்குப் பிறகு இரவு பதினொரு மணியளவில் ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்...

அங்கே நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் தசாவதாரத் திருக்காட்சிகள் நிகழ்கின்றன...







நாளைக்கு பன்னிரண்டாம் தேதி
விடியற்காலையில் மோகினி அலங்காரத்தில் திருக்காட்சி..

மதியத்திற்குப் பிறகு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலமாக புறப்பாடாகி வைகை ஆற்றின் திருக்கண் மண்டபத்தில் விடியற்காலை எழுந்தருள்கிறார்..

அங்கேயிருந்து கோரிப்பாளையம் வழியா தல்லாகுளம் கருப்பசாமி கோயிலுக்கு அருகே சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்கின்றார்..

நாளை இரவு பூபல்லக்கில் அழகர் திருக்காட்சி அருள்கின்றார்..

நாளைக்கு மறுநாள் (13/05 ) அதிகாலை மூன்றரை மணிக்கு
அங்கிருந்து திருக்கோயிலுக்குப் புறப்படுகின்றார்..

பதின்மூன்றாம் தேதி இரவு அப்பன் திருப்பதி மண்டகப்படியில் திருக்காட்சி...

பதினான்காம் தேதி விடியற்காலையில் அழகர் மலையை அடைகின்றார்..

அங்கே பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு எதிரில் சிறப்பாக வரவேற்பு..

மறுநாள் உற்சவ சாந்தி.. மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் திருவிழா இனிதே நிறைவடைகின்றது...

போன வருஷம் அழகர் தங்கிச் சென்ற திருக்கண்கள் 430...
இந்த ஆண்டு திருக்கண்கள் 433...

ஜனக்கூட்டம் இன்னும் மதுரையில குறையவில்லை...

அழகர் மலைக்குப் போய்ச் சேர்ந்தாலும்
ஜனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்ச நாளாகும்..

அந்த அளவுக்கு இந்தத் திருவிழாவில மெய் மறந்து இருக்காங்க...



மறுபடியும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டது சந்தோஷம்..
மலர்.. எல்லாம் சரியா இருக்கா!..

எல்லாம் சரியா இருக்குங்க!..

புது மண்டபத்துக்குப் போய் வேணும்..ங்கற -
சாமான்கள் வாங்கிக்கிட்டு - நாமும் புறப்படுவோம்!...

ஓ... புறப்படலாம் வாத்யாரே!..
***


இந்த அளவில் மாமதுரையின் சித்திரைத் திருவிழா பற்றிய பதிவுகள் நிறைவு பெற்றாலும் - 

வண்ணமயமான படங்களுடன் - இன்னும் சில பதிவுகள் தொடரக்கூடும்...


கள்ளழகர் திருவடிகள் போற்றி.. போற்றி!..  
ஓம் நம சிவாய சிவாய நம 
***

புதன், மே 10, 2017

அழகரே வருக.. வருக..

வாத்யாரே!.. இவ்வளவு பெரிய கூட்டம்!.. 
பார்க்கிறப்பவே மனசு சந்தோஷமா இருக்கு!..

இவ்வளவு மக்களையும் பார்க்கிறதுக்காகவே அழகர் வர்றாரு!..

அழகர் எங்கேயிருந்து வர்றாரு?..

மதுரைக்கு வடக்கே திருமாலிருஞ்சோலை.. அப்படி..ன்னு மலை.. அதை பழமுதிர் சோலை..ன்னும் சொல்வாங்க..

அங்கே சுந்தரராஜப் பெருமாள்..ன்னு திருக்கோயில்.. ஆனாலும்,
சாமிக்கு அழகர் - கள்ளழகர் அப்படிங்கற பேர் தான் சிறப்பு..

அழகர் அங்கேயிருந்து தான் வர்றாரு...


சனிக்கிழமை (06/5)அன்றைக்கு அழகர் கோயில்...ல திருவிழா ஆரம்பம்..

முதல் இரண்டு நாளும் திருக்கோயில்..ல புறப்பாடு.. உற்சவம்..

திங்கட்கிழமை (08/05) சாயங்காலம் அஞ்சு மணிக்குக் கண்டாங்கிப் பட்டுடுத்தி நேரியல் கம்பு எடுத்துக்கிட்டு தங்கப் பல்லக்கில எழுந்தருளினார்..

ஏழு மணிக்கு காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமி..கிட்ட மதுரைக்குப் போய்ட்டு வர்றேன்!.. - அப்படின்னு சொல்லிட்டு புறப்பட்டார்...

வர்ற வழி நெடுக பற்பல திருக்கண்கள்.. 

திருக்கண்கள்..ன்னா என்னங்க வாத்யாரே!..

திருக்கண்கள்..ன்னா பல்லாக்கில வர்ற சாமிய கொஞ்ச நேரம் தங்க வைக்கிற மண்டகப்படி மண்டபங்கள்.. 

ராஜாக்கள் காலத்தில கட்டி வச்ச மண்டபங்களும் உண்டு.. அந்த ஊர்க்காரங்க தற்காலிகமா அமைக்கிற மண்டபங்களும் உண்டு..

எல்லா ஊர்களிலேயும் காத்துக் கிடந்த மக்களின் உற்சாகமான வரவேற்பு..  

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன் பட்டி, கடச்சனேந்தல் - இப்படி பல ஊர்கள்...ல  கோலாகல வரவேற்பு..

நேற்று (09/05) காலைல ஆறு மணிக்கு மதுரையின் எல்லை மூன்று மாவடி..ங்கற இடத்துக்கு வந்து சேர்ந்தார்... 

சிறப்பான வரவேற்பு.. அதைத் தாண்டி சர்வேயர் காலனி, புதூர், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட் போஸ்ட் ..ங்கற இடங்கள்...லயும் உற்சாகமான வரவேற்பு.. 

எல்லா இடத்திலயும் அழகர் மேல தண்ணி பீய்ச்சி அடிச்சி ஜனங்களுக்கு சந்தோஷம்...

நேற்று தல்லாகுளம் மண்டகப்படி எல்லாம் இருந்து விட்டு -
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தார்..

அங்கே நள்ளிரவுப் பொழுதில் திருமஞ்சனம் ஆகியதும் - 
பச்சைப் பட்டுடுத்தி ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டார்..

தங்கக் குதிரை வாகனத்தில் ஆரோகணித்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்..

இன்றைக்கு (10/5) அதிகாலை இரண்டு மணிக்கு 
தல்லாகுளம் ஸ்ரீ கருப்ப ஸ்வாமி திருக்கோயிலுக்கு வந்தருளினார்..  

அங்கே தங்கக் குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் -
கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் வந்து கொண்டிருக்கிறார்..

இன்னும் கொஞ்ச நேரத்தில அழகர் வைகையாற்றுக்கு வந்து விடுவார்..


அதோ.. அதோ.. தங்கக் குதிரை வாகனம்!.. 
பச்சைப் பட்டுடன் அழகர் வருகிறார்.. அழகர் வருகிறார்!..

வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்கின்றார்..

வானத்தை எட்டும்படிக்கு மக்கள் முழங்குகின்றனர்..

கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

விடியற்காலை 6.30 மணி..
கோலாகலமாக 
வைகை ஆற்றில் இறங்கினார் - அழகர்!...



கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

தங்க மழை பெய்ய வேணும்..
தண்ணிப் பஞ்சம் தீரவேணும்..
மண்ணு மனை குளிர வேணும்..
மக்கள் குறை தீரவேணும்!..


கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

கட்டுக் கடங்காத மக்கள் வெள்ளம்..
எங்கெங்கு நோக்கினும் மக்கள்.. மக்கள்..

வைகையில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நீரைப் பீய்ச்சியடித்து ஆனந்தமடைகின்றனர் - பக்தர்கள்..

கோவிந்தா.. கோவிந்தா!.. - என முழங்கியவாறு -
சர்க்கரைச் செம்பில் கற்பூரம் ஏற்றி - கண் குளிர வழிபட்டனர் மக்கள்..

மலர்.. அந்த சர்க்கரைச் செம்பு எடுத்து.. கற்பூரம் ஏற்று!..
எல்லோரும் நல்லபடியா வாழணும்..ன்னு வேண்டிக்குங்க!..


மலர் சர்க்கரைச் செம்பில் கற்பூரம் ஏற்றி அழகரை ஆராதித்தாள்..

நண்பர் சந்திரசேகர் (இது தான் வாத்யாரின் பெயர்) கண்களில் நீர் வழிந்தது..

பிரமிப்பில் ஆழ்ந்து கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தனர் கூட வந்த சிறுவர்கள்...

இன்று விடியற்காலையில் நிகழ்ந்த 
திருவிழாவின் காட்சிகள்
இன்றைய பதிவில் வெளியாகியுள்ளன..







கண்ணாரக்
கும்பிட்டுக் கொள்ளுங்கள்!...

பெருமாளே.. பெருமாளே!..
கோவிந்தா.. கோவிந்தா!..
***