நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 02, 2014

பரமன் அருளிய படிக்காசு

ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ( கி.பி.574 - 655 ) சைவம் வளர்த்த சான்றோர்களாகிய திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் திருஞானசம்பந்தப் பெருமானும் ஊர் ஊராகச் சென்று,


ஆங்கே வீற்றிருக்கும் இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடிப் பரவினர். 

தம்மைத் தொடரும் மக்களுக்கு உண்மையை உணர்த்தி நல்வழியைக் காட்டினார்கள். 

தென்னாடு முழுதும் அப்பெருமக்கள் தனித்தனியாக திருவடி பதித்து -  இறை பணி புரிந்திருந்தாலும்,


வயதில் மூத்தவரான அப்பர் சுவாமிகளும் பால வயதினராகிய ஞானசம்பந்தப் பெருமானும் சேர்ந்து வணங்கியதாக  குறிப்பிடப்பெறும் திருத்தலங்கள் - 

சீர்காழி, திருப்புகலூர், திருக்கடவூர், ஆக்கூர், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் , திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பூந்துருத்தி - என்பவை. 

இவற்றுள் திருமடம் அமைத்து சிலகாலம் இருவரும் தங்கியிருந்ததாக அறியப்படுபவை - திருப்பூந்துருத்தி மற்றும் திருவீழிமிழலை ஆகிய திருத் தலங்கள். 

திருமடங்கள் அமைத்து தங்கியிருந்த காலத்தில் பெருமக்கள் இருவரும் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் பலவாகும். 

''துறவிக்கு வேந்தன் துரும்பு!'' - என்பர். 

அதனால் தானே - தன்னிடம் அதிகாரம் காட்டி சிறை செய்ய முயன்ற பல்லவ மன்னனின் படையாட்களின் முன் - ''..நாமார்க்கும் குடியல்லோம்!.. நமனை அஞ்சோம்!..'' - என்று அப்பர் பெருமான் அறிவித்தார். 

இருப்பினும்  சமுதாயப் பணி என்று வரும் பொழுது இறையருளைத் துணை கொண்டு - அரியனவற்றை நிகழ்த்தி - மக்களின் துயர் தீர்ப்பதின் முனைப்பாக இருந்திருக்கின்றனர்.

திருவீழிமிழலை
 திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும் பல தலங்களை வணங்கியவாறு - திருவீழிமிழலை எனும் திருத்தலத்திற்கு எழுந்தருளினர். 

முன்பொரு சமயம்  - சிவபெருமான் சக்கரம் கொண்டு சலந்தரன் எனும் அசுரனை அழித்தருளினார். அந்த திவ்ய சக்கரத்தினைப் பெறவேண்டி - மஹாவிஷ்ணு சிவபூஜை செய்த திருத்தலம்  - திருவீழிமிழலை. 

அப்படி சிவபூஜை செய்யும் போது ஒரு நாள், ஆயிரம் தாமரை மலர்களுக்கு ஒருமலர் குறைவதை அறிந்த மஹாவிஷ்ணு தனது கண்ணையே தாமரை மலராகச் சமர்ப்பணம் செய்தார்.


அதுகண்டு பெரிதும் மகிழ்ந்த சிவபெருமான் - தன்னிடம் இருந்த சக்கரத்தை - மஹாவிஷ்ணுவிடம் அளித்தார் என்பது ஐதீகம்.

இத்திருத்தலத்தில் இறைவனின் திருப்பெயர் - ஸ்ரீவீழிநாத ஸ்வாமி
அம்பிகையின் திருப்பெயர் - ஸ்ரீசுந்தரகுஜாம்பிகை.
தலவிருட்சம் - வீழிச்செடி. தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்.

திருவீழிமிழலையில் திருமடம் அமைத்து - அப்பர் சுவாமிகளும் சம்பந்தப் பெருமானும் தங்கியிருந்த காலத்தில் - கோள்களின் நிலை மாற்றத்தினால் பருவமழை தவறியது. விவசாயம் பாழ்பட்டு வறட்சி மேலோங்கியது.

மழை தவறியதால் நீர்நிலைகள் வறண்டன.  நீரின்றி கால்நடைகளும் பறவையினங்களும் பரிதவித்தன. 

வான் பொய்ப்பினும் தான் பொய்யாத - காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான அரசலாறு - ஆற்றுப்பெருக்கு அற்று, அடிசுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கால் ஊருக்கு நீர் ஊட்டியது. 

சூழ்நிலை கண்டு துன்புற்று மனம் வருந்திய  தூயோர் இருவரும் - ''..துயர் தீர்க்கவேண்டும் இறைவா!..'' - என்றவாறு துயில் கொண்ட வேளையில், 

தொழுத கை துன்பம் துடைக்கும் தொல்புகழோனாகிய இறைவன் - அவர் தம் கனவில் தோன்றி - ''..நாளை முதல் பஞ்சம் தீரும் நாள் வரைக்கும் - நாளும் ஒரு பொற்காசு அருளப்படும் . அது கொண்டு ஆவன செய்து கொள்க!..'' - என்று அருள் புரிந்தனன்.

ஞானசம்பந்தருக்கு அருளிய பீடம்
ஒருசேர விழித்தெழுந்த இருவரும் - விடிந்தது பொழுது என்று அதிகாலையில் நியமங்களை நிறைவேற்றியவாறு ஆலயம் சென்று வலம் செய்த போது  கிழக்கு பீடத்தில் ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஒரு காசும் மேற்கு பீடத்தில் அப்பர் சுவாமிகளுக்கு ஒரு காசும் அருளப்பெற்றது. 

திருநாவுக்கரசருக்கு அருளிய பீடம்
அருளமுதாகிய இறைவனின் கருணையை வியந்து போற்றியவாறே - அந்த காசுகளை தத்தமது அடியார்களிடம் கொடுத்து - அது கொண்டு அனைத்து உயிர்களுக்கும் ஆவன செய்யுமாறு பணித்தனர். 

அடியவர்களுக்கும் மக்களுக்கும் நல்ல முறையில் அன்னம் பாலிக்கப்பட்டது. 

வறண்டு கிடந்த அரசலாற்றில் ஏற்றத் துறைகள் அமைக்கப்பட்டன. குளங்கள் தூர் வாரப் பெற்றன. சுரந்து பெருகிய நீரால் - தொட்டிகள் நிரம்பி வழிந்தன. 

கால்நடைகளும் ஏனைய சிற்றுயிர்களும் வறட்சியின் கொடுமையிலிருந்து தப்பிப் பிழைத்தன.

இறையருளால் அனைத்தும் நல்லபடியாக நடந்து கொண்டிருந்த வேளையில், அப்பர் பெருமானின் திருமடத்தில் சரியான நேரத்திற்கு அன்னம் பாலிக்கப் படுவதையும் , தமது திருமடத்தில் கால தாமதம் ஆவதையும் ஞானசம்பந்தப் பெருமான் கவனித்தார். 

''..ஏன் இப்படி!..'' - என அடியார்களை வினவினார்.  அதற்கு அவர்கள்,

''..நாவுக்கரசர் பெறும் காசு மாற்று குறையாததாக உள்ளது. எனவே அதை மாற்றுவது எளிதாகின்றது. தங்களுக்கு வழங்கப்படும் காசு மாற்று குறைவாக உள்ளதால் - அதை மாற்றுவதற்குத் தாமதம் ஆகின்றது!..'' - என்று கூறினர். 

இதன் உட்பொருளைக் குறித்து பெருமான் சிந்தித்தபோது - திருநாவுக்கரசர் - இறைபணியுடன் - மக்கள் பணியாக உழவாரத் தொண்டும் செய்து வருவதால்  அவருக்கு வாசி இல்லாத - மாற்று குறையாத காசு வழங்கப்படுவதை - உணர்ந்தார். 

அவ்வாறே, தமக்கும் மாற்று குறையாத காசு அருளவேண்டும் எனவும்  தடைபடாமல் அன்னம் பாலிக்க - அருள் பாலிக்க வேண்டும் எனவும் ஈசனிடம்  - வேண்டிக் கொண்டார்.

ஈசனும், ஞானசம்பந்தப் பெருமானுக்கு - வாசி இல்லாத - மாற்று குறையாத காசு வழங்கி அருள்பாலித்தார். 

தன்னலம் கருதாது ஊருக்கு உழைத்த அப்பர் சுவாமிகளின் மகத்தான பணி இறைவனால் அடையாளங் காட்டப்பட்ட தலம் - திருவீழிமிழலை.

இத்தலத்தில் - ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடம் வடக்கு வீதியின் கீழ் புறமும் , நாவுக்கரசர் தங்கியிருந்த திருமடம்  வடக்கு வீதியின் மேல் புறமும் உள்ளன. பெருமக்கள் இருவரின் அருந்தொண்டினால் - உயிர்க் குலங்கள் உவந்து மகிழ்ந்தன. 

கோடையும் வறட்சியும் மாறும் காலமும் வந்தது. கார்மேகங்கள் கூடி வந்து குளிர் மழையாய்ப் பொழிந்தன.


வறண்டு கிடந்த வாவிகளுக்குள் வதங்கிக் கிடந்த வண்ணத் தாமரைகள் புன்னகைப் பூக்களாய் மலர்ந்தன. திசை மாறித் திரிந்த பறவைகள்  - மழை பெய்யும் இசை கேட்டு - சிறகடித்து மகிழ்ந்த வண்ணம் குளத்து நீரில் முகம் பார்த்து மகிழ்ந்தன.

மண்ணும் மகிழ்ந்தது. மக்களும் மகிழ்ந்தனர். 

அது கண்டு மகிழ்ந்த நாவுக்கரசரும் சம்பந்தப் பெருமானும் அனைவரையும் வாழ்த்தியவாறு தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

மாற்றுக் குறையாத காசு வேண்டியும்
மக்களுக்கு உதவ வேண்டியும்
ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தினைப் பாடியவாறே 
நாமும் - அக்ஷய திருதியை நன்னாளில் 
அப்பெருமக்களின் திருவடிகளைத் தொடர்வோம்..

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே!.. 


இறைவ ராயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே!.


செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே!..


காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே
!..


பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே
!..


மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
!..

அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே
!..

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே
!..

பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே
!..

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே
!..  

சிவாய திருச்சிற்றம்பலம்!..
அட்க்ஷய திருதியை நல்வாழ்த்துக்கள்..     

14 கருத்துகள்:

  1. படிக்காசு வழங்கிய பரமன் படித்து வியந்தேன் ஐயா
    மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. வறுமை மறைய இன்றும் வாசி தீரவே காசு நல்குவீர் பாடினால் வீட்டில் வறுமை இல்லை என்று நம்பப்படுகிறது.
    அருமையாக மக்கள் தொண்டு செய்து மகேசன் அருள் பெற்ற அடியார் புகழ் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நிறைவான நன்றி..

      நீக்கு
  3. அட்ஷய திருதியை நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் நல்வாழ்த்துகளுடன் நன்றி..

      நீக்கு
  4. திருவீழிமிழலையின் சிறப்புகள் அனைத்திற்கும் நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. படித்துத் தெரிந்து கொள்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான வருகைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  6. சிறப்பான பதிவு. பல ஆன்மீகத் தகவல்களை தொகுத்து வழங்கும் உங்கள் பாணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. Nalla oru siva sinthanai. Iya kku nandri. Thiruvelimizhali patri therinthu konden.nalvar thiruvadi potri. Sivaya nama.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..