நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 20, 2014

ஆயிரம் ஆயிரம்

ஆயிரம்!..

எண்ணளவில் ஆயிரத்துக்கு மேல் கோடி  - அதற்கு மேல் அற்புதம், கும்பம், பத்மம், சங்கம் - என வளர்ந்து வெள்ளம் என விரிந்து பிரம கற்பம் என நிறைவடைந்து நின்றாலும்,

ஆயிரம்  (சஹஸ்ரம்)  என்பதன் பெருமை  - பெருமையேதான்!..

ஆலயங்களில் நிகழ்த்தப்படும் சிறப்பு வழிபாடுகள் ஆயிரத்தின் அடிப்படையில் தான்!..

தெற்கே - தாமிரபரணிக்கரையில்,  ஆறுமுகமங்கலம் எனும் கிராமத்தில் - ஒரு மன்னன் ஆயிரத்தெட்டு அந்தணர்களுடன் மகா யாகம் செய்திட முனைந்த போது,  அங்கே கூடியோர் - ஆயிரத்து ஏழு பேர் மட்டுமே!..

ஆயிரத்தெண் விநாயகர் - உற்சவர்
மன்னனின் கவலையைப் போக்கிட - தானே வேதியராக வந்து யாகத்தினை சிறப்பாக நடத்தி - தன் முகம் காட்டி  அமர்ந்தவர்  - கரிமுக கணபதி!..

தமிழகத்தில் அபூர்வமாக சித்திரைத் தேரோட்டம் நிகழும்  திருக்கோயில் என ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் இன்றும் விளங்குகின்றார்.

கரும்பு ஆயிரங்கொண்ட விநாயகர் - என குடந்தையில் திகழ்கின்றார்.

சேலார்வயற் பொழில் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகன்.. - என்று வருந்துபவர் அருணகிரிநாதர்.

திருவேரகம் எனப்படும் சுவாமி மலையில் - வியாழக்கிழமை தோறும் - பேராயிரங்கள் உடைய தங்கப் பூமாலை சூடி அருள்கின்றான்  - சுவாமிநாதப் பெருமான்!..

திருப்பதியில்  - ஏழுமலையப்பனுக்கு சஹஸ்ர கலசாபிஷேகம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கும் சஹஸ்ர கலசாபிஷேகம் விசேஷமானது.

கார்த்திகை சோம வாரங்களில் - சிவபெருமானுக்கு ஆயிரத்தெட்டு (சஹஸ்ர) சங்காபிஷேகம் சிறப்பாக நிகழ்வுறும்.

அதிலும் சிறப்பாக சில ஆலயங்களில் அமைந்துள்ள சஹஸ்ர லிங்கத்திற்கு - ஒரு முறை அபிஷேகம் செய்து வழிபட்டால் - ஆயிரம் லிங்கங்களை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு!.. 

மோகத்தால் மூளை கெட்டு - அகலிகையைத் தீண்டி அவமானத்துக்கு ஆளான - இந்திரன் வழிபட்ட திருத்தலம் - கண்ணாயிரம் உடையார் திருக்கோயில்.


ஆயிரங்கண்ணுடையாள் - நினைத்தாலே இனிக்கும் திருப்பெயர். 

திருமலைராயன் பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பேழையில் இருந்து எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுபவள் ஆயிரங்காளி எனப்படுகின்றாள். 

மூன்று நாட்கள் மட்டும் பூஜிக்கப்படும் அவளுக்கு நிவேதனங்கள் அனைத்தும் ஆயிரத்தின் கணக்கில் தான்!..

ஈசன் ஸ்ரீசரபேஸ்வரராகத் திருக்கோலம் கொண்ட போது அவருடைய சிறகினில் இருந்து ஆயிரம் திருமுகங்களுடன்  ஸ்ரீப்ரத்யங்கிரா தோன்றினாள்.

மேலும் - அம்பாளின் அருள் பெற்று உய்வதற்கு - ஸ்ரீ சஹஸ்ர சண்டி யாகம்!..

மகாமுனிவராகிய அகத்தியருக்கு - ஸ்ரீ ஹயக்ரீவர் - அருளி வழிகாட்டியது - ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்!..

ஆயிரம் - அதற்கு மேலும் இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் அம்பிகை என்கின்றது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம். 

அதே போல வெகு சிறப்புடையது - ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்!.. 

நமோ ஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே  
ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே 
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே 
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:  
ஸஹஸ்ர கோடி யுகதாரிண ஓம் நம இதி!.. 

- என்பது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலசுருதி.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் -

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!.. (ஆறாம் திருமொழி)

என் கைத்தலம் பற்றிட - ஆயிரம் யானைகளுடன் - மைத்துனன் நம்பி மதுசூதனன் வருகின்றான்!.. - என, கனாக் காண்கின்றாள் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.

கோதையைப் பாராட்டி சீராட்டி வளர்த்த பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் - தன்னோராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் - கண்ணன்!.. -  (3/1/1) என்று கசிகின்றார்.


ஆயிரம் தோள்பரப்பி முடிஆயிரம் மின்னிலங்க
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலஆயிரமும்
ஆயிரம் பூம்பொழிலும்உடை மாலிருஞ்சோலையதே!.. (358)

- என்று, கள்ளழகர் உறையும் மாலிருஞ்சோலையைக் கண்ணாரக் கண்டு பெருமைப்படுபவர் - பெரியாழ்வார் (4/மூன்றாம்திருமொழி).

பேராயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின்றாளால்
நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டால் கொல்லோ!..

- கண்ணபுரத்துக் கருமணியைக் காணும் போது - பேராயிரமுடைய பேராளன் என்றே - திருமங்கை ஆழ்வார் (8/1/6) உருகுகின்றார்.

ஓராயிர மாய்உல கேழளிக்கும்
பேராயிரங் கொண்டதோர் பீடுடையன்
காராயின காளநன் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரானிவனே!..

- என்று நம்மாழ்வார் (9/3/1) போற்றுகின்றார்.

தேவாரத் திருமுறைகளில் -

பரவு வாரையும் உடையார் பழித்து இகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார் வெண்தலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே!. (2/94)

- எனப் புகழ்கின்றார் - திருஞானசம்பந்தப்பெருமான்.

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே!.. (4/4)

- என்று இறைவனின் திருத்தோற்றத்தை வர்ணிக்கும் அப்பர் சுவாமிகள்,


வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோகனார்!.. (6/45)

- என்று ஈசன் ஆயிரந் தோள்களுடன் நடமாடுவதைக் காட்டுகின்றார்.

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் 
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே!.. (6/54)

- என உருகும் வேளையில், 

நிலை தளர ஆயிரமா முகத்தினோடு  
பாய்ந்தொருத்தி படர் சடைமேற் பயிலக் கண்டு 
பட அரவும் பனிமதியும் வைத்த செல்வர்..(6/93) 

- பகீரதனின் பொருட்டு வானிலிருந்து ஆயிரம் முகங்களோடு - பூமியை நோக்கிப் பாய்ந்தனள் கங்கை - என்பதையும் திருநாவுக்கரசர் பதிகத்தில் குறித்தருள்கின்றார்.

திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்.. (7/66) 

- என்று திருமால் தினமும் ஆயிரம் மலர் கொண்டு ஈசனை வழிபட்டதைக் கூறுகின்றார் - சுந்தரர்

ஆரா அமுதே அருளே போற்றி..
பேராயிரம் உடைய பெம்மான் போற்றி!.. 

- என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் போற்றுகின்றார்.


மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி - மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞா எனும் சக்கரங்களைக் கடந்து சென்று சேரும் இடம் - சஹஸ்ர தளபத்மம் எனவும் சஹஸ்ராரம் எனவும் வழங்கப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை

ஆயிரம் பிறை கண்டவர் - என்பது சதாபிஷேகம் காணும் பெரியோர்களுக்கு வழங்கப் பெறும் சிறப்பு மொழி. 

எண்பது வருடங்களும் எட்டு மாதங்களும் நிறையப் பெற்றவரே ஆயிரம் பிறை கண்டவர். பிறை எனக் குறிக்கப்படுவது முழு நிலவு.  

எனில், ஆயிரம் பிறை என்பதற்கான கணக்கு :-

சாதாரணமாக வருடத்தில் பன்னிரண்டு சந்திர தரிசனம். (80 x 12 = 960). 
ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் கூடுதலாக இரு பௌர்ணமிகள் நிகழும். இதன்படி 80 வருடங்களில் 16 x 2 = 32 கூடுதல். மேலும் - 8 மாதங்களுக்கு எட்டு பௌர்ணமிகள். 

ஆககூடுதல் - ஆயிரம் சந்திர தரிசனம். 

நாம் நம் கண்களால் ஆயிரம் முழு நிலவைப் பார்த்திருக்க இயலாது. 
எனினும் சந்திரன் நம்மைப் பார்த்திருக்கின்றான் என்பதே உண்மை!.. 

மகாகவி பாரதியாரும் -  சுதந்திர வேட்கையில்,

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?.. - என்று உருகுகின்றார்.

ஆயிரம் உண்டு இங்கு சாதி - எனில் 
அந்நியர் வந்து புகல் என்ன நீதி?.. - எனக் கொதிக்கின்றார். 

இப்படியெல்லாம் ஆயிரம் பெருமைகளைக் கொண்ட ஆயிரம் - தமிழ்த் திரைப் படங்களிலும் - தனிப்புகழ் கொண்ட பாடல்களில் கலந்து நின்றது. 

இருப்பினும் - 

இன்று நம் கைகளில் புழங்கிக் கொண்டிருக்கும் ஆயிரம் ரூபாய் எப்படி!?.. 

கள்ள நோட்டுகளும் உலாவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் - ஓரளவுக்கு உற்று நோக்கியும் தடவிப் பார்த்தும்  கண்டறிந்து கொள்ளலாம்.

ரூபாய்த் தாளின் முன்புறமும் பின்புறமும் -  

ஊடுருவிப் பார்க்கக் கூடிய சித்திரங்கள், நீரோட்ட அச்சு, பச்சை நீலம் என இருவிதமாகப் புலப்படும்  எழுத்துக்கள், ஒளிரும் எழுத்துக்கள், பாதுகாப்பு நூல், இண்டாக்ளியோ எனும் தடித்த அச்சு, மறைந்திருக்கும் எழுத்துக்கள், 


பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்கக் கூடிய எழுத்துக்கள், தொட்டு உணரக் கூடிய தடித்த குறியீடு, ரூபாய் அச்சடிக்கப்பட்ட வருடம், முன்னும் பின்னும் பொருந்தும் ஒளிச் சித்திரம் 

- என பதினோரு பாதுகாப்பு அம்சங்களுடன்,  புதிய 1000, 500 - ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்!..
http://www.paisaboltahai.rbi.org.in/index.htm?page=home

* * *
கள்ளநோட்டு எனத் தெரிந்த பிறகு அதை மாற்றுதற்கு முயற்சிக்க வேண்டாம்.

தெரிந்தோ தெரியாமலோ நம்மிடம் கள்ள நோட்டு வந்து சேர்ந்து விட்டால் - அதை வைத்திருப்பது மிகவும் ஆபத்து. கள்ள நோட்டு கையில் இருந்தாலே கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில், 

எங்கிருந்து வந்தது?. கொடுத்தவர் யார்?. - 
என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல் - 
நம்மைக் காப்பாற்றிக் கொள்வது நம் பொறுப்பு!..
வாழ்க வையகம்!.. வாழ்க வளமுடன்!..
* * *

15 கருத்துகள்:

  1. ஆயிரம் ஆயிரமாய் ததும்பும் தகவல்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. இறைவனை போற்றும் பேராயிர பாடல் பகிர்வு அருமை.
    ஆயிரம் ரூபாய்பற்றி சொன்ன விஷயம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாய்.
    நன்றி பகிர்வுக்கு.
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  3. சிறப்பான தொகுப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. இதோ உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு - ஆயிரம் பற்றிய விஷயங்களை அழகாய் தொகுத்தமைக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் அன்பினுக்கு நன்றி..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

      நீக்கு
  5. ஆயிரமாயிரமாய் ஆயிரம் பற்றிய செய்திகளை ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  6. ஆயிரமாயிரமாய் அள்ளித்தந்தீர் அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் முதல் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு
  7. அன்பின் ஏஞ்சல் வருக.. வருக..
    தங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  8. எனக்கென்னவோ ஒரு சில அரசியல்வாதிகள் மூன்றெழுத்துக்களை அடுக்கிப் புகழ் பாடுவர், அதுவே நினைவுக்கு வந்தது. ஆயிரம் என்னும் எண்ணிக்கைபாமரனும் கணக்கிட எளிதானது. ஆயிரம் வைத்தே ஒரு அலசலே ( ஆன்மீக.?) நடத்திவிட்டீர். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி ஐயா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..