நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், மே 08, 2014

வஞ்சிக்கொடியே வருக

ஐந்து வயது வரை - ஒரு குழந்தை வாய் திறந்து மழலை பேசாதிருந்தால் யார் தான் கவலைப்படமாட்டார்கள்?..

அப்படித்தான் கவலைப்பட்டனர் -  ஸ்ரீவைகுண்டத்தில் - சண்முக சிகாமணிக் கவிராயரும் அவர் தம் அன்பு மனைவி சிவகாமசுந்தரி அம்மையாரும்!..


''..எங்களின் காலமும் இப்படியே கரைந்து விடுமோ?.. இந்த ஊனெடுத்த நாள் முதல் நின் புகழினை அன்றி வேறொன்றும் யாம் பேசி அறியாதது உண்மையாயின்  - முருகனே!.. செந்தில் முதல்வனே!.. மாயோன் மருகனே!.. இதோ.. இந்தப் பிள்ளையுடன் உன் சந்நிதிக்கே வருகின்றோம்.. அங்கு உனக்கு எது விருப்பமோ.. அதைச் செய்!..''

''..ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பிள்ளை வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாதவரை,  நிலம் பெயர்ந்தாலும் - நின்ற நிலை பெயர மாட்டோம்!.. ''

- என்று உறுதியுடன் மொழிந்த கவிராயர் - தன் மகனைத் தோளில் சுமந்து கொண்டார். அருங்குணவதியாகிய  - அவர் மனைவியும், பின் தொடர்ந்தார். 

கவிராயர்  -  திருச்செந்தூரை நோக்கிப் புறப்பட்டார். சிலநாட்கள் பயணம்.

பொழுது விடியும் நேரம். அதோ.. திருச்செந்தூர்!..


உதய மார்த்தாண்ட பூஜையின் மணியோசை செவிகளில் தேனாகப் பாய்ந்தது. ஆவல் மீதூற - கண்களில் பரவசக் கண்ணீர் வழிந்தோட ஓட்டமும் நடையுமாக கடற்கரையை நெருங்கியவர்களை - அலைகடல் ஆனந்தத்துடன் வரவேற்றது. 

கடலின் உவர்ப்போடு கண்ணீரின் உவர்ப்பும் சேர்ந்து கொண்டது.

கரையேறியவர்கள்  - நாழிக் கிணற்றில் நீராடி, - ''..முருகா!.. முத்துக்குமரா!..'' - என்று அரற்றியவாறு திருக்கோயிலினுள் அடியெடுத்து வைத்தனர். 

திருச்செந்தில் நாதனைக் கண்ணாரக் கண்டு வணங்கினர்.  

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - என்றபடிக்கு ஐயனின் சந்நிதியில் சண்முகக் கவிராயரால் எதும் பேச முடியவில்லை. திருமூலத்தானத்தை வலஞ்செய்து வணங்கி - கொடி மரத்தடியில் தண்டனிட்டு எழுந்தார். 

பன்னீர் இலையில் பிரசாதிக்கப்பட்ட திருநீற்றினை அன்பு மகனின் நெற்றியில் இட்டார். தானும் தரித்துக் கொண்டார். 

''..இனி இதுவே என் வீடு. என் மகனுக்கு ஒரு வழி காட்டுவது உன் பாடு!..'' - என்றபடி திருச்சுற்றில் ஓரமாக அமர்ந்து விட்டார். நாளும் நியமம் தவறாது செந்தில் நாதனை வணங்குவதும் அவன் திருப்புகழினை ஓதுவதுமாக இருந்தார். 

நாற்பத்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. அன்று சாயரட்சை தரிசனம் செய்ய வேண்டி -  மனைவியும் உடன்வர, மகனுடன் திருக்கோயிலினுள் நுழைந்தார். 

சந்நிதி திரையிடப்பட்டிருந்தது. 

திடும் என பேரிகையும் மங்கல வாத்தியங்களும் ஆலய மணிகளும் முழங்க திரை விலகியது. அலங்கார அடுக்கு தீபத்தின் ஒளியில் ஞானப்பிரகாசமாகத் திகழ்ந்தான் முருகன்.


''..வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!..'' - எங்கும் ஜய கோஷம்.

மிக அருகில்  - தனது செவிக்கருகில் கேட்பது போல இருந்தது கவிராயருக்கு.  சட்டென மனைவியை நோக்கினார். அந்த அம்மையாருக்கும் அப்படியே உணர்வு. அவர் - தன் கணவரின் முகத்தினை நோக்கினார். 

என்ன விந்தை!.. 

அவர்கள் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - முருகனின் நாமங்களைக் கூறிக் கொண்டிருந்தது. பெற்றவர் - ஆனந்தக் கண்ணீருடன் வீறிட்டனர். கூடியிருந்த பக்தர்களும் வியப்புற்று நோக்கினர். 

தோளில் இருந்த மகனல்லவோ - தூய தமிழில்  - மழலை மொழியில் -

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய்.. 

- எனத் தொடங்கி, மழைச்சாரல் என கவிச்சாரல் பொழிந்து கொண்டிருந்தான்.. 

முருகனின் வரலாற்றினை முழுதுமாக உரைத்து,

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்!..

- என்று நிறைவு செய்தபோது - ஆனந்த வெள்ளம் அங்கே அலைபுரண்டு கொண்டிருந்தது.

தந்தையில் தோளில் இருந்து இறங்கி  முருகனை நோக்கிக் கரங்குவித்து வணங்கிய குழந்தை - குமரனின் தனிப்பெருங்கருணையால் குமரகுருபரன் என புகழப்பட்டது. குழந்தை மொழிந்தது கந்தர் கலிவெண்பா எனப்பட்டது.

இந்த அற்புதத்தினை அறிந்து, குமரகுருபரனைச் சந்தித்து மகிழ எண்ணம் கொண்டார் - மாமதுரையின் மன்னரான திருமலை நாயக்கர். அதே சமயம் - குமரகுருபரர் மனதிலும் மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியைத் தரிசிக்க ஆவல் பிறந்தது. இதை மன்னரின் கனவில் உரைத்த அன்னை, குமரகுருபரரை சிறப்பாக வரவேற்கப் பணித்தாள்.


அவ்வண்ணமே, குமரகுருபரரை -  பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு வரவேற்று அன்னையின் சந்நிதிக்கு அழைத்துச்சென்றனர். சந்நிதில் அன்னையைக் கண்ணாரக் கண்டு வணங்கிய குமரகுருபரர் - அன்னையைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடினார். 

அதைக் கேட்டு அகமகிழ்ந்த - அரசரும் மற்றவரும் அதனை விளக்கம் செய்தருள வேண்டினர். குமரகுருபரரும் இசைந்தார். நவரத்ன பீடத்தில் அவரை இருத்தி - தக்க மரியாதை செய்தனர்.


முதற்பொருளான விநாயகப்பெருமானைத் துதித்து காப்பு பாடிய குமரகுருபரர் -  செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை - என வரிசையாகப் பாடி - அதன் பொருள் விரித்துக் கூறி வருங்கால் - ஆங்கொரு பெண்மகவு வெளிப்பட்டாள். 

பச்சை வண்ண சிற்றாடை இடையுடுத்திவளாக  அங்குமிங்கும் சற்றே நடந்தவள் - உரிமையுடன் மன்னரின் மடியினில் அமர்ந்து கொண்டாள்..

அப்போது, குமரகுருபரர் சொற்பொருள் கூறி, விளக்கிக் கொண்டிருந்த செய்யுள் வருகைப் பருவத்தின் ஒன்பதாவது பாடல்.  அங்கிருந்த அனைவரும் அமுதத் தமிழில் மனம் மயங்கியிருந்த வேளையில், 

அந்தச் சின்னஞ்சிறு பெண் எழுந்தாள். அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே - மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றினாள். 

அதை குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்தாள். 

பின் மெல்ல நடந்து - திருமூலத்தானத்தினுள் சென்று மறைந்தாள். 

அதன் பின்தான் குழந்தையாய் வந்தவள் மீனாட்சி என அனைவருக்கும் புரிந்தது.

குமரகுருபரருக்கு மணிமாலை அணிவித்து அன்னை மகிழ்ந்தனளே -  அந்தப் பாடல் இதோ!..

தொடுக்கும் கடவுள் பழம்பாடல் 
தொடையின் பயனே நறைபழுத்த 
துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் 
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து 

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு 
ஏற்றும் விளக்கே வளர்சிமய 
இமயப் பொருப்பில் விளையாடும் 
இளமென்பிடியே எறிதரங்கம் 

உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு 
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் 
உயிர் ஓவியமே மதுகரம் வாய் 

மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள 
வஞ்சிக் கொடியே வருகவே 
மலயத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!.. 

ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்


ஏழாம் நாள்
ஏழாம் நாள்
இளமென் பிடியாய் வருகின்றாள்!.. 
இளவஞ்சிக் கொடியாய் வருகின்றாள்!..
அன்னை வருகின்றாள்!.. அங்கயற்கண்ணி வருகின்றாள்!..
அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் ஐயனுடன் வருகின்றாள்!..

இதயக் கோயிலில் விளக்கேற்றி வைத்து 
இருகரம் நீட்டி அவளை வரவேற்போம்!..

* * *

14 கருத்துகள்:

 1. ஆனந்த வெள்ளம் அலைபுரண்டு கொண்டாடும்
  அன்னை மீனாட்சியும் தனயன் திருச்செந்தூர் முருகனும்
  அருள்பாலிக்கும் அற்புதப் பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக மகிழ்ந்தேன்..

   நீக்கு
 2. பாடலும் படங்களும் மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. படங்களும் பகிர்வும் மிக மிக அருமை ! வாழ்த்துக்கள் ஐயா
  இறை தரிசனம் கோடி புண்ணியம் அனைவருக்கும் அன்னை
  மீனாட்சியம்மனின் அருள் என்றென்றும் கிட்டிட வேண்டும் .
  மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.. நன்றி..

   நீக்கு
 4. படங்களும் தகவல்களும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன. தொடரட்டும் சிறப்பு பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 5. இதயக் கோயிலில் விளக்கேற்றி
  இருகரம் கூப்பு வரவேற்போம்
  மிக்க நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 6. அருமைப்படங்களும் அழகு விளக்கமும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. Even in those days the meaning had to be explained. then what about us who know next to nothing in tamil. Enjoyed reading/ There is some problem with my tamil software.

  பதிலளிநீக்கு