நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


திங்கள், மே 12, 2014

தேரில் வந்த தெய்வம்

மங்கலமிகு மாமதுரை சித்திரைத் திருவிழாவின் பத்தாம் திருநாளான சனிக் கிழமை அன்று  - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசித்து இன்புற்றனர்.

அதனை அடுத்து நேற்று (மே/11 ஞாயிறு) திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாணம் -  வடக்கு ஆடி வீதியின் சந்திப்பில் உள்ள கல்யாண மண்டபத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மங்கல மேடையில் நிகழ்ந்தது.


அதிகாலையில் கட்டளைதாரர் மண்டகப்படிகளில், ஸ்வாமியும் பிரியா விடையும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

பின், முத்துராமையர் மண்டபத்தில் மீனாட்சி கன்னி ஊஞ்சல் அடினாள்.

காலை 10.10-க்கு திருமணச் சடங்குகள், பூஜைகள் தொடங்கி மாங்கல்ய பூஜைக்குப் பிறகு,  மாலை மாற்றினர்.

திருமாங்கல்யதாரணத்துக்குப் பின் மல்லிகைப் பூ சுற்றிய திருமாங்கல்யம் சுவாமி சார்பில் காலை 10.49 மணிக்கு அருள்மிகு ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு சாற்றினர். பிரியாவிடைக்கும் மங்களநாண் சூட்டப்பட்டது.

பல்வகை உபசார தீபாராதனைகளுக்குப் பின் மகாதீபாராதனை நடந்தது.

பகல் 11.15 மணி அளவில் சுவாமி, அம்மன் மற்றும் சுப்ரமணியர், தெய்வானை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள -  பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து இன்புற்றனர்.

திருக்கல்யாண வைபவம் மங்கலகரமாக நிகழ்ந்த பின்னர் -

சித்திரைத் திருவிழாவின் பதினோராம் திருநாளான நேற்று  காலை திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

நேற்று தேரோட்டத்திற்காக, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும், அதிகாலை மூன்று மணிக்குள் முடிந்தன. அதிகாலை நான்கு மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹண பூஜை நடந்தது.

பின் - தேர்களை பாதுகாக்கும் ஸ்ரீதேரடி கருப்ப ஸ்வாமிக்கு, அதிகாலை 5.30 மணிக்கு பூஜை நடந்தது.

பின், சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர்.

தேரின் சக்கரங்களுக்கு - கூஷ்மாண்டம் எனப்படும் பூசணிக்காய் பலி கொடுத்த பின்னர்,

''..ஹர ஹர சங்கரா.. சிவ சிவ சங்கரா.. மீனாட்சி சுந்தரா..'' - என பக்தர்களின் ஆனந்த கோஷங்களுக்கு இடையே, சுவாமி தேர் காலை ஆறு மணிக்குப் புறப்பட்டது.

பத்து நிமிடங்களுக்கு பின், அம்மன் தேர் புறப்பட்டது.  

பதினோராம் திருநாள்

பெரிய தேரில் சொக்கநாதப் பெருமானும், பிரியாவிடையும் வலம் வந்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் வந்தாள்.

சித்திரைத் தேர்களில் எழுந்தருளிய அம்மையப்பனை - நான்கு மாசி வீதிகளிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து வணங்கி வழிபட்டனர்.

மாசி வீதிகளில் வலம் வந்த தேர்கள் - அடுத்தடுத்து நிலைக்கு வந்தன.
 
திருத்தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்து தேர் நிலையில் காலை 11 மணிக்கு நிலைப்படுத்தினர்.இரவு ஏழு மணி அளவில் ஒரே சப்தவர்ண சப்பரத்தில் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை - நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தருளினர்.

இப்போது பவனி வரும் சிறப்பு மிக்க இரண்டு தேர்களும் இரண்டும் ராணி மங்கம்மாளின் பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் (1706-1732)  உருவாக்கப்பட்டவை. இரண்டு தேர்களிலும் சிவபுராண, திருவிளையாடற் புராண சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
மதுரை சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் விழாக்கள் தீர்த்தவாரியுடன் நிறைவடையும் நிலையில் -


இன்று (மே/12) மாலை -

அழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி கள்ளழகர் புறப்படுகின்றார்.

சித்ரா பௌர்ணமி அன்று -
(மே/14) புதன் கிழமை, காலையில் 
தங்கக் குதிரையில் ஆரோகணித்து 

வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள 
திருக்கண்ணில் எழுந்தருள்வதற்காக

வந்தருளும் கள்ளழகரை வாண வேடிக்கையுடன் வரவேற்று மகிழ 

மதுரை மாநகரின் மக்கள் அன்புடன் காத்திருக்கின்றனர்.
 
மதுரை மாநகர் - மங்கலம் மிகுந்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. 

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!..
அங்கயற்கண்ணி.. அன்பு மீனாட்சி..
அண்டங்கள் அனைத்தும் அன்னையின் ஆட்சி!..

* * *

12 கருத்துகள்:

 1. திருத்தேரோட்டம் பற்றி சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 2. உள்ளத்திற்கு மகிழ்வு தந்து எண்ணத்தை உறுதிப்படுத்தும் தேர்த் திருவிழா இவற்றை எல்லாம் காணக் கண் கோடி வேண்டுமையா ! அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. தேர்த் திருவிழா நேரில் கண்ட உணர்ச்சி. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

   நீக்கு
 4. தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே நடைபெற்ற சித்திரைத்தேர் காட்சிகளைக் கண்டேன். சிறப்பான பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா..

   நீக்கு
 5. மங்கலகரமாக மதுரை திருக்கல்யாணத்தை தரிசிக்கச்செய்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. அன்புடையீர்..
  தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 7. தேரோட்டமும் ரொம்பவே அழகு..... எங்களையும் தேரோட்டத்திற்கு உங்கள் பதிவு மூலம் அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு