தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடு டுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி என்றென்று ...(திருப்புகழ்/1124)
அதுவரையிலும் உறங்கிக் கிடந்த பூதகணங்கள் திடுக்கிட்டு எழுந்தன.
இந்த வேளையில் என்ன சப்தம் என்று - அங்குமிங்கும் விழித்து நோக்கினால் -
மலை வரைந்த திருக்கொடியினை ஏந்தியவாறு பெரும் படை ஒன்று திருக்கயிலை மாமலையினை நெருங்கிக் கொண்டிருந்தது.
யார் இது!.. இந்த வையகத்தில் இத்தனை நெஞ்சழுத்தம் உடையவரும் உளரோ!.. - எனத் திகைப்பு. இன்னும் உற்று நோக்கினால் - அந்தப் பெரும் படைக்கு - ஒரு பெண்ணல்லவா தலைமை தாங்கி வருகின்றாள்..
அந்தப் பூதங்கள் அறிந்திருக்கவில்லை!.. திருக்கயிலை மாமலையினை உடையவனை ஒரு பங்காக உடையவள் அவள் - என்று!..
எக்காளம், கரடிகை, டமருகம், முழவு, மத்தளம், தவில், தம்பட்டம், பம்பை, பறை, திமிலை - எனும் வாத்தியங்கள் - பெருஞ்சத்தத்துடன் இடியோசையும் விஞ்சியதாய் அதிர்ந்து முழங்கின.
அவ்வளவுதான்!.. பூதகணங்களும் ஆர்ப்பரித்து எழுந்தன. அவர்களை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுக்க முயற்சித்தன. ஆனால் -
போர்ப்பறையுடன் புன்னகைத்த அந்த கன்னிகையின் ஒற்றைச் சரத்தில் - கயிலை மாமலையின் கணங்கள் செயலற்றுப் போயின..
இனி என்ன செய்வது!.. அதிகார நந்தி அதிர்ந்து நின்றார்.
அப்புறம் தான் விளங்கியது அவருக்கு!.. அறிந்ததை எடுத்துச் சொல்லலாம் என்றால் - நின்று கேட்பதற்கு நேரம் இன்றி - பூத கணங்கள் அனைத்தும் தலை மறைவாகியிருந்தன.
அப்புறம் அவருக்கு மட்டும் என்ன வேலை அங்கே!..
அவரும் - ''..சிவ.. சிவ!..'' என்றபடி திருமாமணி மண்டபத்தினை நோக்கி விரைந்தார்.
''..தாயே!.. கயற்கண்ணி.. வெற்றி நமதே!..'' - பணிவாகச் சொன்னார் சுமதி!..
இவர் மலையத் துவஜ பாண்டியனின் அறிவார்ந்த அமைச்சர்.
மன்னருக்குப் பின், அவர் பெறாமல் பெற்றெடுத்த மரகதவல்லிக்கும் அவரே அமைச்சர். நல்லவர். வல்லவர். அனைத்தும் அறிந்தவர்.
வாள் கொண்டு வடநாட்டினை வென்றது பெரிதல்ல!.. அதன் பின் எட்டுத் திசைகளையும் வென்றது பெரிதல்ல!..
சத்திய லோகத்தில் நான்முகன் பணிந்து நின்றதும் பெரிதல்ல!.. வைகுந்த வாசன் எதிர் வந்து, வருக .. தங்காய்!.. என வரவேற்றதும் பெரிதல்ல!..
செந்தமிழ்ப் பாண்டியனின் மலையத் துவஜம் - மாமலையாகிய கயிலையில் பட்டொளி வீசிப் பறக்கின்றதே!.. அதைக் காணக் காண அவரது கண்கள் பணித்தன.
மாமதுரையில் அன்றைக்கு - ஆயிரமாவது யாகம் செய்யும் போது - நேரில் வந்த தேவேந்திரன் - விமானம் ஒன்றைப் பரிசளித்து விட்டு சொன்னான்.
''..மலையத்துவஜ பாண்டியனே!.. அஸ்வமேத யாகம் செய்வதை விடுத்து, புத்திர பாக்யம் வேண்டி யாகம் நிகழ்த்து!.. உன் எண்ணம் ஈடேறும்!..''
அதன் பின் அல்லவா அந்த யாக குண்டத்தில் வலஞ்சுழித்து எழுந்த அக்னியின் உள்ளிருந்து வண்ணத் தாமரையாக வடிவழகி இவள் தோன்றினாள்.
திருக்கரத்தில் செண்டுடனும் மூன்று திருத்தனங்களுடனும் தோன்றிய தொல் புகழாளுக்கு தடாதகை எனத் திருப்பெயர் சூட்டி, தோளிலும் மார்பிலும் தாங்கி சீராட்டிப் பாராட்டி வளர்த்தனரே - பாண்டியனும் காஞ்சனமாலையும்!..
பன்னிரண்டு வயதில் மகுடம் தாங்கினாள் ராஜமாதங்கி. ம்ம்.. என்ன செய்வது.. இந்த முத்தழகியின் வீரத் திருவிளையாடல்களைக் காணக் கொடுத்து வைக்காமல், மலையத்துவஜன் - வான்நாடு ஏகினார்.
அதன் பின் - தந்தையின் சிம்மாசனத்தை - தனயை அலங்கரித்தனள்!..
செந்தமிழ்ச்செல்வி - தன் திருக்கரத்தில் செங்கோல் தாங்கி ஆட்சி செய்தற்கு என்ன தவம் செய்ததோ - பாண்டியப் பேரரசு!..
மணப் பருவத்தை அடைந்த மங்கை நல்லாள் - நால்வகைப் படைகளுடன் திக்விஜயம் என்றாள்.
ஆர்த்தன தடாரி பேரி ஆர்த்தன முருடு மொந்தை
ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை
ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை
ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்!..
பணிந்தவர்க்கு நலங்களைச் செய்தாள்!.. துணிந்தவர் தம் - தலைகளைக் கொய்தாள்!..
திரும்பிய பக்கம் எல்லாம் வெற்றி என்றாள். திசைகள் எட்டையும் வென்றாள்.
இதோ - இறுதியாய் கயிலையில் வந்து நின்றாள்!..
சற்றே பழைய நினைவுகளில் ஆழ்ந்த அமைச்சர் - மனம் தெளிந்தார்.
''..தாயே.. மேலே செல்லலாம்.. வாருங்கள்!..''
''..அமைச்சர் பெருமானே!.. இந்த இடம் எனக்குப் பழக்கப்பட்ட இடம் போல இருக்கின்றதே!..''
''..இருக்கலாம் தாயே!.. அண்டங்கள் அனைத்தும் உனது ஆட்சி தானே!.. இது இன்று நேற்று வந்த சொந்தமா?. . கால காலங்களைக் கடந்து உடன் வரும் பந்தம் அல்லவா!..''
போர்க்கோலம் பூண்டிருந்த அந்தப் பூங்கொடியாள் புன்னகையுடன் தனது விமானத்திலிருந்து மெல்ல இறங்கினாள். பூம்பாதங்களைப் பதித்து நடந்தாள்.
அப்போது - அங்கே பூமாரியும் பொன்மாரியும் பெய்தது.
அவளது விழிகள் வியப்பினால் விரிந்தன. நாம் போர்க்கோலம் கொண்டு தானே வந்தோம்!.. இது வரைக்கும் அனைத்து வெற்றிகளும் சரமழை பெய்து சந்தித்தவை தானே!.. இதென்ன புதுமை!.. பூமழையும் பொன்மழையும் பெய்து நம்மை வரவேற்பது!..
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - பெருமையுடன் வருக!..
நின் திருவடித் தாமரைகள் தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெறுக!..
''யார் பாடுவது!?..'' மீண்டும் கேட்டாள் கயற்கண்ணி. ''..நான் இந்த இடத்தில் முன்பே பழகி இருக்கின்றேனே!..''
''..அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாளே!.. அனைத்தும் அறிந்தவள் நீ!.. ஏதும் அறியாதது போல ஏனிந்த நாடகம்!.. அங்கயற்கண்ணி!.. அதோ.. அங்கே பாரம்மா!..''
மீனாள் - தன் விழி கொண்டு நோக்கினாள்..
திருமாமணி மண்டபத்தில், மஹா மந்த்ர பீடத்தில் - ஐயன்!..
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன். நிலவுலாவிய நீர்மலி வேணியன்.
ஐயனுடன், அதிகார நந்தியும் - வெற்றிகரமாகத் தோற்று ஓடிவந்த பூதப் படைகளும்!..
''..விடக்கூடாது!.. வென்றே ஆக வேண்டும்!..''
இடக்கரத்திலிருந்த வில்லில் சரத்தைத் தொடுத்து - நாண் ஏற்றிய வண்ணம் விழி கொண்டு நோக்கினாள்.
கூர் நோக்கில் - அலகில் சோதியன்!.. அம்பலத்து ஆடுவான்!..
உன் பங்கு நான்!.. என் பங்கு நீ!.. - என்றனையே.. மறந்தனையா தேவி!..
விழிகளால் - கேள்விக் கணை விடுத்தான்.. வேந்தர்க்கு வேந்தன்!..
வில்லான் பங்கில் இருந்த வாள்நுதலாள் - வெட்கினாள்!..
தழுவக் குழைந்த நாதனைக் கண்ட மாத்திரத்தில் - எங்கிருந்தது வந்ததோ இந்த நாணம்!.. அந்த அளவில் -
அதுவரைக்கும் திகழ்ந்திருந்த - மூன்று திருத்தனங்களில் ஒன்று மறைந்தது.
முன்பு ஒரு சமயம் - ''..நீயின்றி நானில்லை!..'' - என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது!..
நாயகனைக் கண்டதும் நாணித் தலை குனிந்தாள்!...
மதுரையிலிருந்து புறப்பட்ட பின், முதன்முறையாக கயற்கண்ணியின் திருக் கரங்களிலிருந்து வில்லும் அம்பும் நழுவி விழுந்தன.
அன்பின் விழிகள் அளவளாவிக் கொண்டன..
''..என்னைப் பிரிந்து இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள் - ஸ்வாமி!..''
உன்னைப் பிரிந்து எப்போது இருந்தேன்!.. என்றைக்கு நீ மலையத்துவஜன் மகளாகச் சென்றனையோ - அன்றைக்கே நானும் உன்னுடன் வந்து விட்டேனே!.. நீதான் உள்ளக்கிழியில் உரு எழுதி, உற்று நோக்கி, உணர்ந்து கொள்ளவில்லை!..''
''..சரி.. இனி என்ன செய்வதாக உத்தேசம்!..''
''..உத்தேசமா!.. இனி உன் தேசமே - என் தேசம்!.. ஊருக்கும் உலகுக்கும் அறிவித்திடுக. மரகதவல்லிக்கு மணக்கோலம் என்று!..''
''..நாள் எதென்று கேட்டால் நானென்ன சொல்லட்டும்!?..''
''..நன்னாள் - உத்திரம் கூடிய சோமவாரம்!..''
''..அழைப்பில் கூற வேண்டும். மாப்பிள்ளையின் தோற்றமும் பேரும் ஊரும்!.. என்னென்று சொல்ல!?..''
- என்றவாறு, கயற்கண்களால் ஐயனை அளந்தாள்.
மீனாளை வணங்கியவாறு - நந்தியம்பெருமான் கூறினார்.
அன்னையே!.. ஐயனை உள்குவார் உள்ளத்தில் -
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்!..
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் தன்மையர். இருப்பினும் -
திருக்கயிலாய மாமலையார்!.. தில்லைச் சிற்றம்பலத்தார்!.. காரோணத்தார்!.. காளத்தியார்!.. அண்ணாமலையார்!.. ஐயாற்றுள்ளார்!.. ஒற்றியூரார்!. மறைக் காட்டார்!.. மாகாளத்தார்!.. ஆரூரார்!.. பேரூரார்!.. அழுந்தூருள்ளார்!.. அஞ்சைக் களத்துள்ளார்!.. தஞ்சைத் தளிக்குளத்தார்!..
கேட்கக் கேட்க தித்தித்தது - தேன்மொழியாளின் உள்ளம்!..
எனினும் - தாங்கி வரும் பேர் எதுவோ?.. அன்னையின் மனதில் சிறு ஐயம்!..
பாம்பசைத்து உடுத்த வெம்புலித்தோலும், கொற்றவாள் மழுவும், மத்தமும் எருக்கும் திகழும் கற்றை வேணியும், சுடலைப் பொடியும் பூசிய - என் உள்ளங் கவர் கள்வன் - எவ்விதத் திருக்கோலம் கொண்டு வருவார்!?..
அனைத்தும் உணர்ந்த ஐயன் புன்னகைத்தார்.
''..சுந்தரன் - சோமசுந்தரன் எனக் கொள்க!..''
''களுக்'' - என சிரிப்பொலி.
''..யாரது!..'' - மீனாள் கேட்டாள்.
''..அது ஒன்றுமில்லை. ஆரண நூபுரம் சிலம்பும் ஒலி!..'' - ஐயன் புன்னகைத்தார்.
அந்த சிரிப்பொலி - அம்பிகையின் தண்டைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் - மன்மதனுடையது என்று இருவருக்குமே தெரியும்!..
அந்த அளவில் - புதுப் பூங்குவளைக் கண்ணியின் போர்க்கோலம் அகன்றது.
பூத கணங்கள் ஆரவாரித்தன. பெரும் சங்குகள் முழங்கின.
பிறகென்ன!.. திருமணம் தான்!.... தேவர்களும் முனிவர்களும் திரண்டார்கள்.
மாமதுரையே மணக்கோலம் பூண்டது. திருமண மண்டபத்தில் -
செம்பொற்சோதியான சிவபெருமானுக்கு அருகில் மரகதக்கொடி போல கயற்கண்ணி அமர்ந்திருந்ததை காணக் காண - கண் தித்தித்தது.
மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தை நந்தியம் பெருமான் சிவகணங்களுடன் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். கணபதியும் கந்தனும் கலைவாணியின் கரங்களைப் பற்றியவாறு அம்மையப்பன் திருமண வைபவத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
மங்கலச் சடங்குகளை பிரமதேவன் முன்னிருந்து நடத்தினார். மஹாலட்சுமி தோழியாய் கரம் பற்றி கயற்கண்ணியை அழைத்து வர, திருமால் உடனிருந்து கன்யாதானம் செய்து கொடுக்க -
சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டியருளினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்று இன்புற்றனர்.
அன்னை அவள் எந்நேரமும் விழிப்பாகவே இருந்து தம் மக்களின் குறைகளை தீர்த்த வண்ணமாக இருக்கின்றாள். அதனால் தான் அவள் - கயற்கண்ணி!..
அவரவர் மனக்குறைகளை அவரவர்க்கேற்றபடி அவள் தீர்த்து வைப்பதால் தான், அவள் - அங்கயற்கண்ணி!..
வேண்டும்
வரம் எல்லாவற்றையும் தந்தருளும் அன்னை மீனாட்சி நம் அருகில் இருக்கின்றாள்
என்பதால் தான்,
நம் மனம் கொஞ்சமேனும் நிம்மதியுடன் தூங்குகின்றது!..
நம் மனம் கொஞ்சமேனும் நிம்மதியுடன் தூங்குகின்றது!..
உலகம் எங்கும் கோடானுகோடி இல்லங்களில் - அவள் பெயரைச் சொல்லிய வண்ணம் தீபங்கள் பிரகாசிக்கின்றன.
இரவும்
பகலும் கண் இமையாத மீனைப் போல தேவியும் விழித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவள் விழித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதை உணர்ந்த உள்ளங்கள் தான் - தவறு
செய்து தண்டனைக் குழிக்குள் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றன.
வாழ்க்கை பிழையாத வண்ணம் நாம் பிழைத்துக் கொண்டால் போதும்.
''குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழும் திருநெடுந்தோளுடன், வேரியம் பாணமும் வெண்ணகையுமாக!..''
- அன்னை நமக்குக் காட்சி தந்தருள்வாள்!..
வாழ்க்கை பிழையாத வண்ணம் நாம் பிழைத்துக் கொண்டால் போதும்.
''குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழும் திருநெடுந்தோளுடன், வேரியம் பாணமும் வெண்ணகையுமாக!..''
- அன்னை நமக்குக் காட்சி தந்தருள்வாள்!..
எட்டாம் திருநாள் |
திருவிழாவின் எட்டாம் நாளாகிய நேற்று, மீனாட்சி பட்டாபிஷேகம் சிறப்புற நடை பெற்றது. இன்று ஒன்பதாம் நாள் - திக்விஜயம்.
நாளை (10/5) காலை (10.30 - 10.54) கடக லக்னத்தில், மீனாட்சி - சுந்தரேசர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நிகழ இருக்கிறது.
11/5 அன்று அம்மனும், சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையும் அலங்காரத் தேர்களில் மாசி வீதிகளில் பவனி வருகிறார்கள்.
மறுநாள் - அருள்மிகு கள்ளழகர் - மதுரையை நோக்கிப் புறப்படுகின்றார்.
நம் பொருட்டு, நம் சந்ததியினர் நலமாக வாழும் பொருட்டு - அம்மையும் அப்பனும் திருமணக் கோலங்கொள்கின்றனர்.
இயன்றவர்கள் மதுரைக்குச் சென்று - நேரில் தரிசித்து இன்புறலாம்...
எல்லைகளைக் கடந்து வாழும் நிலையில் இருப்போர் - அம்மையையும் அப்பனையும் இதயக்கமலம் எனும் தேரில் இருத்தி, ஐம்புலன்கள் எனும் பிரகாரங்களில் வலம் வரச் செய்து நலம் பெறலாம்!...
நாளை (10/5) காலை (10.30 - 10.54) கடக லக்னத்தில், மீனாட்சி - சுந்தரேசர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நிகழ இருக்கிறது.
11/5 அன்று அம்மனும், சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையும் அலங்காரத் தேர்களில் மாசி வீதிகளில் பவனி வருகிறார்கள்.
மறுநாள் - அருள்மிகு கள்ளழகர் - மதுரையை நோக்கிப் புறப்படுகின்றார்.
இயன்றவர்கள் மதுரைக்குச் சென்று - நேரில் தரிசித்து இன்புறலாம்...
எல்லைகளைக் கடந்து வாழும் நிலையில் இருப்போர் - அம்மையையும் அப்பனையும் இதயக்கமலம் எனும் தேரில் இருத்தி, ஐம்புலன்கள் எனும் பிரகாரங்களில் வலம் வரச் செய்து நலம் பெறலாம்!...
மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!..
* * *
விளக்கமான சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
ஐயா வணக்கம் . அருமையாகக் கதை சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.தொலைக் காட்சியில் ஒளி பரப் பானால் காண வேண்டும்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சி..
அருமையான பதிவு...... திருக்கல்யாணத்தில் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மிகவும் சிறப்பான பதிவு ஐயா நன்றி
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
செம்பொற்சோதியான சிவபெருமானுக்கு அருகில் மரகதக்கொடி போல கயற்கண்ணி அமர்ந்திருந்ததை காணக் காண - கண் தித்தித்தது.
பதிலளிநீக்குதித்திக்கும் திருக்கல்யாணத்தை கருத்தில் நிகழ்த்திக்காட்டிய அற்புதமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்களும்..வாழ்த்துகளும்..
அன்புடையீர்..
நீக்குதாங்கள் வருகை தந்து பாராட்டி - வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..
மீனாக்ஷி திருக்கல்யாணக் கதை மிக அருமையாக பக்திமணம் கமழ சொல்லியிருக்கிறீர்கள் . டிவியில் நேரடி ஒளிபரப்பில் திருக்கல்யாணத்தைப் பார்க்க வேண்டும். மீனாக்ஷி அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார்.....
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஅனைவருக்கும் அன்னை அருள் மழை பொழியட்டும்.
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
தாங்கள் கூடியபடி இதயக்கமலத்தில் நிறுத்திவிட்டோம். அவ்வாறான புண்ணியம் கிடைக்க உதவிய தங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஅனைவருடைய அன்பு நிறைந்த ஆதரவுதான் முதற்காரணம்.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
அருமை... படிக்க தெவிட்டாதது ❤️
பதிலளிநீக்கு