நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 16, 2014

சப்தஸ்தான பெருவிழா

சிவகண வாத்தியங்கள் முழங்க  - மணமாலையும் மங்கலமுமாக, மாட வீதிகளில் வலம் வந்தனர்  தம்பதியர்.

அந்த இளம் தம்பதியர்க்கு - மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

மணமக்கள்: - நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை தேவி.

திருமணம் நிகழ்ந்த தலம் - திருமழபாடி.

திருமண விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.


திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மனம் நிறையும்படி  அன்னமும் சொர்ணமும் வழங்கி அருள்பாலிக்கப்பட்டது. 

அனைத்தையும் கண் கொட்டாமல்  - பார்த்துக் களித்துக் கொண்டிருந்தனர் - செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரும் - அறம்வளர்த்த நாயகியும்!..
 
திருமணத்திற்காக - ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்தவர்கள் அனைவரும்  மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.


சித்ரா பௌர்ணமியை  அடுத்த விசாக நட்சத்திரத்தன்று - தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்.

அனைவருக்கும் பரம திருப்தி!..

அந்த அளவில், நாட்கள் உருண்டோடின. சித்திரையும் வந்தது.

திருஐயாற்றில் - சீர்மிகு சப்தஸ்தானப் பெருவிழாவிற்கான கொடியேற்றமும் நிகழ்ந்தது.

அஸ்திர தேவர் ரிஷபக் கொடியுடன் வீதி வலம் வந்த பின்னர் - அம்மையும் அப்பனும் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளியிருக்க -  சித்திரை 20 சனிக் கிழமை  (மே/3) அன்று மிக விமரிசையாக திருக்கொடியேற்றமும், மகா தீபாராதனையும் நிகழ்ந்தது.

திருஐயாற்றில் சித்திரைத் திருவிழா பதின்மூன்று நாட்கள் நடைபெறும். திருவிழாவின் இரண்டாம் நாள் தொட்டு தினமும் - அம்மையும் அப்பனும் காலையில் பல்லக்கில் வீதி உலா எழுந்தருளினர்.


இரண்டாம் திருநாள் இரவில் -  ஆதிசேஷ வாகனம்,  மூன்றாம் திருநாள் பூத வாகனம், நான்காம் திருநாள் - கயிலாயம் மற்றும் காமதேனு வாகனம்  - என எழுந்தருளினர்.

ஐந்தாம் திருநாள் (மே/7) அன்று ஆறு ஊர் பல்லக்குகளும் ஐயாற்றில் எழுந்தருளின. பஞ்சமூர்த்திகளும் - வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருக்க சந்நிதியில் மாகேசுவர பூஜை. இரவில் சதுர்முக சப்பரத்தில் வீதி உலா.

ஆறாம் திருநாள் (மே/8)  இரவில் - யானை வாகனமும் அன்னவாகனமும்.

ஏழாம் திருநாள் (மே/9) இரவில் - கோரதம். எட்டாம் திருநாள் (மே/10) இரவில் குதிரை வாகனம் - என சிறப்புடன் நிகழ்ந்தது.

ஒன்பதாம் திருநாள் (மே/11) திருத்தேரோட்டம். பல்லாயிரக் கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து - பெரு மகிழ்ச்சி கொண்டனர்.

பத்தாம் திருநாள் (மே/12) - ஸ்ரீ நடராஜ மூர்த்தி சிவகாமசுந்தரியுடன் மஞ்சள் நீராடி, திருவீதி எழுந்தருள - அன்று இரவு  துவஜஅவரோகணம் நிகழ்ந்தது.

பதினோராம் திருநாள் (மே/13) காலையில் படியளக்கும் பரமன் - பிக்ஷாடனராக திருவீதி வலம் வந்தருளினார். இரவில் - ஐயனும் அம்பிகையும் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர்.


பன்னிரண்டாம் திருநாளாகிய சித்திரை 31 (மே/14) அன்று - சப்த ஸ்தானம்.

சோழ மண்டலத்தின் மகத்தான திருவிழா.

ஸ்ரீஅறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில்  சப்த ஸ்தானத் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதுவே - இத்திருவிழாவின் சிகரம்!..
சித்திரை மாத முழு நிலவினை அடுத்த விசாகம்.

அன்றைக்கு - திருமழபாடியில் அனைவருக்கும் அருளியபடி -

நந்தியம்பெருமானும் சுயசாம்பிகை தேவியும்
நந்திகேசன்  சுயசாம்பிகை இருவரையும்  தம்முடன் அழைத்துக் கொண்டு ஏனைய ஆறு திருத்தலங்களுக்கும்  - ஐயாறப்பனும் அறம் வளர்த்த நாயகியும் -  எழுந்தருளும் திருநாள். அதன்படி -

அம்மையப்பன் பெரிய பல்லக்கிலும் (கண்ணாடி பல்லக்கு), புதுமணத் தம்பதியான நந்தியம் பெருமான் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் திருஐயாற்றிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டனர்.

அதிகாலை கிழக்குக் கோபுர வாசலில் கோபுர தரிசனம் நிகழ்ந்தது.


அவர்கள் முதலில் விஜயம் செய்த திருத்தலம் - திருப்பழனம். 

திருப்பழனத்தின் எல்லையில் - ஆபத்சகாயேஸ்வரரும் பெரியநாயகியும் பெருமகிழ்வுடன் வரவேற்றனர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அம்மையப்பனையும் மணமக்களையும் எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்தனர்.

சந்திரனின் பொருட்டு ஈசன்  - வாழை மடுவில் தோன்றியருளிய திருத்தலம்.

சற்று இளைப்பாறிய பின்,  ஐயாற்றிலிருந்து வந்த இரண்டு பல்லக்குகளுடன் - திருப்பழனத்தின்  பல்லக்கும் சேர்ந்து கொள்ள -

அவர்கள் சென்றடைந்த திருத்தலம் - திருச்சோற்றுத்துறை.

சோற்றுத்துறையில் - தொலையாச்செல்வரும், அம்பிகை அன்னபூரணியும் புன்னகையுடன்  எதிர் கொண்டு அழைத்தனர்.

பஞ்சம் உற்றகாலத்தில் ஏழை ஒருவனுக்கு அட்சய பாத்திரம் அருளப் பெற்ற திருத்தலம்.


அந்த நேரம் மதியம் என்பதால் சோற்றுத்துறை எனும் பெயருக்கேற்ப சப்த ஸ்தான விழாவில் வலம்வரும் அடியார்களுக்கும் அன்பர்களுக்கும்,  இத்திருத் தலத்தில் மகிழ்வுடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

அங்கிருந்து மூன்று பல்லக்குகளும் புறப்படும் போது -  திருச்சோற்றுத் துறையின் பல்லக்கும் சேர்ந்து கொள்கின்றது.

காவிரியையும் குடமுருட்டியையும் கடந்தாகிவிட்டது. கடும் வெயில். ஆற்று மணல் தகிக்கின்றது. ஆங்காங்கே - ஓலைகளையும் வைக்கோலையும் பரப்பி வைத்திருக்கின்றனர்.

நான்கு பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருவேதிகுடி.

திருவேதிகுடியில் - வேதபுரீஸ்வரரும் மங்கையர்க்கரசியும் இன்முகம் காட்டி வரவேற்றனர்.

கல்யாண வரம் அருளும் திருத்தலம் இது. 

கூடி இருக்கும் மக்கள் அனைவரும் புதுமணத் தம்பதிகளான நந்திகேசனையும் சுயசாம்பிகையையும்  சேவித்துக் கொள்கின்றனர்.


அங்கிருந்து நான்கு பல்லக்குகளும் புறப்படும்போது -  திருவேதிகுடியின் பல்லக்கும் சேர்ந்து கொள்கின்றது.
 
ஐந்து பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருக்கண்டியூர்.

திருக்கண்டியூரில் - வீரட்டானேஸ்வரரும் மங்கலநாயகியும் முறுவலுடன் எதிர் வந்து அழைத்தனர்.

நான்முகனின் சிரம் அறுபட்டது  - இத்திருத்தலத்தில்.

மாலை நேரம் . வந்திருப்பவர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்படுகின்றது.

புறப்படும் வேளையில், புதுமணத் தம்பதிகளுக்கு விசேஷமாக கட்டுசோறு - உடன் அனுப்பப்படுகின்றது.


அங்கிருந்து ஐந்து பல்லக்குகளும் புறப்படும் வேளையில் -  திருக்கண்டியூரின் பல்லக்கும் சேர்ந்து கொள்கின்றது.

ஆறு பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருப்பூந்துருத்தி.

திருப்பூந்துருத்தியில் - புஷ்பவனேஸ்வரரும் சௌந்தரநாயகியும் அன்புடன் வரவேற்கின்றனர்.

அப்பர் சுவாமிகள் திருமடம் அமைத்து தொண்டு செய்த திருத்தலம் - இது.

முன்னிரவு நேரம். அங்கிருந்து ஆறு பல்லக்குகளும் புறப்படும் வேளையில் -  திருப்பூந்துருத்தியின் பல்லக்கும் உடன் வருகின்றது.

ஏழு பல்லக்குகளும் சென்றடைந்த திருத்தலம் - திருநெய்த்தானம்.


தில்லைஸ்தானம் எனப்படும் இத்திருத்தலத்தில் -  ஐயன் நெய்யாடியப்பரும் பாலாம்பிகையும் வாஞ்சையுடன் வரவேற்றனர்.

காமதேனு - தனது பாலின் நெய் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் நிகழ்த்திய திருத்தலம்.

மாலை மரியாதைகளுக்குப் பின் -  ஏழு பல்லக்குகளும் காவிரி ஆற்றை நோக்கிப் புறப்பட்டபோது,  திருநெய்த்தானத்தின் பல்லக்கும் சேர்ந்து கொள்ள -

எட்டு பல்லக்குகளும் காவிரியில் முகாமிட்டபோது - இரவைப் பகலாக்கும்படி எங்கும் ஒளி வெள்ளம்.

வானத்தில், ''..தக தக..'' -  என சித்திரை மாத முழு நிலவு!..

ஆற்று மணலில் ஆயிரம் ஆயிரமாக மக்கள் கூடியிருக்க - வாணவேடிக்கை!..

முழுநிலவின் ஒளியில் பளபளக்கும் பல்லக்குகள். பின்னணியில் வண்ண ஒளிச் சிதறலாக வாண வேடிக்கை!.. கண்கொள்ளாக் காட்சி - அது!...

இதைப் போன்ற ஆனந்தம் வேறொன்று ஏது!.. - எனும்படி இருந்தது அப்போது.

நேற்று (மே/15) காலையில் - ஐயாற்றை நோக்கிப் புறப்பட்ட பல்லக்குகள் - மாலை ஐயாறப்பர் கோயில் எதிரில் உள்ள தேரடித் திடலை வந்தடைந்தன.


அங்கே பொம்மை ஊஞ்சலாடி வந்து பூமாலை இட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று - ஐயாறா.. ஐயாறா!.. - என  ஆனந்த முழக்கமிட்டனர்.

ஐயாறப்பர் ஆனந்த மிகுதியினால் பண்டரங்கக் கூத்து நிகழ்த்தினார்.

அதன் பின்னர், பல்லக்குகள் ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று, மாலை மரியாதைகள் தீபாராதனைகளை ஏற்றுக் கொண்டன.

சகல மரியாதைகளையும் ஏற்றுக் கொண்ட பல்லக்குகள் - தம்மைத் தொடர்ந்த மக்களுடன் - அவரவர் திருத்தலங்களை நோக்கிப் புறப்பட்டன.

ஐயாற்றின் வீதிகளில் அனைத்து பல்லக்குகளும் வலம் வந்த அழகு -   கண் கொள்ளாக் காட்சி.

தேவார திருவாசக பாராயணங்களும்  சிவகண வாத்தியங்களின் பேரொலியும் மக்களின் ஆரவாரமும் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.


சப்தஸ்தான திருத்தலங்களை அப்பர் பெருமான் திருப்பதிகங்களால் பாடிப் பரவசம் அடைந்திருக்கின்றார்.

அருணகிரிநாதரும் திருப்புகழில் இந்தத் திருத்தலங்களைப் பாடுகின்றார்.

சப்தஸ்தான நிகழ்வுகளின் புகைப்படங்களை வழங்கிய  திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கு - வணக்கமும் மனமார்ந்த நன்றிகளும் உரியன.

20 கி. மீ. தூரம் உள்ள இந்தப் பயணத்தில் வழி நடையாய் வரும் அன்பர்களுக்கு  அந்தந்த ஊர் மக்களும்  - தண்ணீரும், மோரும், பானகமும், சிற்றுண்டியும், பகல் உணவும் - இன்ன பிறவும் வழங்கி கனிவுடன் உபசரிப்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!.. 

ஓசை ஒலியெலாம்  ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம்  ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ!..
திருநாவுக்கரசர் (6/38)

சிவாய திருச்சிற்றம்பலம்
* * *

12 கருத்துகள்:

 1. சம்தஸ்தான திருவிழாவை நேரில் கண்ட உணர்வு ஐயா
  ஏழூரையும் இணைக்கும் சாலைகளைச் சரிசெய்து செப்பனிட்டு, சாலைகளே இல்லாத் இடத்தில், புன்செய் நிலங்களை விலைக்கு வாங்கி, சாலைகளாக்கிக் கொடுத்தவர் தமிழவேள் உமாமகேசுவரனார்தான் ஐயா.
  தஞ்சை வட்டக் கழகத் தலைவராக அமர்ந்து அவர் ஆற்றிய சீர்மிகு பணிகளுள் ஒன்று இந்த ஏழூர் திருவிழாத் தொண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தமிழவேள் அவர்களின் சீரிய பணி நெஞ்சை விட்டு அகலாதது.
   பயனுள்ல தகவலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. உங்களின் பகிர்வும் எங்களுக்கு பரம திருப்தி ஐயா... நன்றிகள் பல...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 3. கல்யாண வரம் அருளும் திருத்தலம்
  ஐயாறா ..ஐயாறா ..கோஷம் ஒலிக்க ..
  படங்களுடன் சிறப்பாக
  காட்சிப்படுதியதற்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான திருத்தலங்கள் பற்றிய தகவல்களும் அழகிய படங்களும் மனதை மகிழ்வித்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 5. மிக அருமையான பகிர்வு சார்! தொகுப்புரையும் சமஸ்தானத் திருவிழாவை நேரில் கண்டது போன்ற ஒரு உணர்வு! அண்டசராசர நாயகனாகிய அந்த நாதன் தாளினை இப்படியாவது வணங்கிட அருள் செய்ததற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 6. சப்தஸான திருவிழாவை நேரில் பார்த்த உணர்வு.
  அருமையான பகிர்வு.
  அழகிய படங்கள்.
  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
   வாழ்க வளமுடன்..

   நீக்கு