நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 14, 2014

வைகைக்கு வந்த வள்ளல்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வாக -

இன்று காலை பக்தர்கள் பரவசம் மேலிட்டு ''..கோவிந்தா!.. கோவிந்தா!..'' - என விண்ணதிர முழங்க - 

அருள்மிகு கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கினார். 

தமிழகம் முழுவதிலும்  இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அழகரைக் கண்டு வணங்கினர்.


மதுரையில் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமை பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

மே மாதம் முதல் நாளில் மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினசரி சுவாமி , அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிகளில் பவனி வந்து அருள் பாலித்தனர். 

மே/10 மீனாட்சி திருக்கல்யாணம்,  மே/11 திருத்தேரோட்டம் என தொடர்ந்து, மறுநாள் (மே/12) உற்வச சாந்தியுடன் விழா நிறைவடைந்தது.

இதையடுத்து மே/12 திங்கட்கிழமை மாலை  ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் - அழகர் மலையிலிருந்து கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் கைத்தடி மற்றும் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் கோலத்தில் தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார்.


மே/13 அதிகாலை மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடந்தது. பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிய அழகர்,  மாலையில் அவுட்போஸ்ட் அருகே அம்பலகாரர் மண்டகப்படி அடைந்தார்.

தொடர்ந்து பல திருக்கண்களில் காட்சியளித்து,  நேற்று இரவு பத்து மணி அளவில் தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வந்தருளினார். 


திருமஞ்சனத்திற்குப் பின்  நள்ளிரவு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வெட்டிவேர் சப்பரத்தில் காட்சியளித்தார்.  


தல்லாகுளம் ஸ்ரீகருப்பஸ்வாமி கோயிலுக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். 

அப்போது தாரை, தப்பட்டை, மேளதாளம் முழங்கின. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆடியும், பாடியும் அழகரை வரவேற்று தரிசித்தனர். 

அழகர் போலவும் கருப்பர் போலவும் அனுமன் போலவும் எண்ணற்ற பக்தர்கள் திருவேடம் தரித்திருந்தனர். பரவச நிலையில் ஆடியும் பாடியும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்.


அதிகாலை மூன்று மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். 

வழி நெடுகிலும் அழகரை தரிசித்த உற்சாகம், பக்தர்களிடம் கரைபுரண்டு ஓடியது.

கோரிப்பாளையம், மூங்கில் கடை வீதி பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி அழகர் இன்று அதிகாலை ஆற்றங்கரை அருகேயுள்ள  திருக்கண் வந்து சேர்ந்தார்.

முன்னதாக அழகரை வரவேற்பதற்காக வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த தெற்குமாசி வீதி ஸ்ரீவீரராகவப்பெருமாள் வைகையின் ஆற்றுப் பந்தலில் எழுந்தருளி காத்திருந்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் - முன்னிரவிலேயே கூடியிருந்தனர். 

அதிகாலையிலேயே வைகை ஆற்றிலும் கரைகளிலும்  நின்றபடி  அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர்.

வைகை ஆறு மட்டுமின்றி - எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் தலைகளே தெரிந்தன.


வைகை கரைக்கு வந்த அழகர் சிறிது நேரம் அங்கேயே பக்தர்களுக்கு காட்சியளித்தார். அழகர் ஆற்றில் இறங்கப் போகிறார் என்பதை உணர்த்தும் வகையில் வெடி வெடிக்கப்பட்டது.



அழகர் - பச்சைப் பட்டு உடுத்திய திருக்கோலத்தில் காலை 6.10 மணி அளவில்  வைகை ஆற்றுக்குள் இறங்கினார்.

இதற்குத் தானே - இத்தனை நாள் காத்துக் கிடந்தது!..

அழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கிய வேளையில் -  உணர்ச்சிப் பெருக்கோடு பக்தர்கள் ''..கோவிந்தா!.. கோவிந்தா!..'' - என முழங்கிய கோஷம் வைகுந்தத்தை எட்டியது. 

கைகளைத் தலைக்குமேல் குவித்து கண்ணீர் மல்க  வணங்கி நின்றனர்.

சர்க்கரை நிரம்பிய சொம்பில் சூடம் ஏற்றி ஆராதித்து அழகரை வணங்கினர். 

ஆற்றுக்குள் பந்தலில் இருந்து வீரராகவப் பெருமாள் வெளியே வந்து அழகரை வரவேற்றார். 

பின்னர் - அழகருக்கு சிறப்புப் பூஜைகளுடன் தீபாதாரனை நிகழ்ந்தது.  

பிறகு, ஆற்றுக்குள் இருந்த பந்தலை மூன்று முறை வலம் வந்த அழகரை - பக்தர்கள் மனம் குளிர தரிசித்தனர். 

வைகை ஆற்றிலிருந்து  வைகைக் கரை வழியாக கிழக்கு நோக்கிப் புறப்பட்ட அழகர் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தருள்கின்றார். 

அழகர் வேடம் அணிந்து அழகருக்கு பின்னாலேயே பலஆயிரம் பேர் சென்றனர்.



அங்கு நடக்கும் தீர்த்தவாரியில் பல்லாயிரம் பேர் ஒரே நேரத்தில் அழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அங்கப் பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். 

மதியம் அங்கிருந்து புறப்படும் சுற்றியுள்ள பகுதிகளில் உலா வருவார். 

இரவு - வண்டியூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளும் -  அழகர் அங்கேயே தங்குவார்.


நாளை (மே/15) ஒன்பது மணிக்கு -  தேனூர் மண்டபத்திற்கு சேஷ வாகனத்தில் அழகர் எழுந்தருள்கிறார். மதியம் கருட வாகனத்தில் எழுந்தருளி- வைகையில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருள்கின்றார்.

இரவில் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்கின்றது. 

மே/16 காலை மோகினி அவதாரத்தில் வீதி உலாவரும் அழகர் மதியம் 12 மணிக்கு ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இரவு 11 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில்  எழுந்தருள்கிறார். 

மே/17 அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கு முடிந்ததும் பக்தர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அழகர் மலைக்கு புறப்படுகின்றார்.

மீண்டும் -

அழகரின் வருகை எப்போது!. மனம் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளும்..
அழகரின் திருமுக தரிசனத்தால் - அல்லல்களை அப்புறமாய்த் தள்ளும்!..


மதிப்புக்குரிய ஐயா GMB. அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விவரங்கள்!..

மதுரை  என்றால் நினைவுக்கு வருவன -

சித்திரைத் திருவிழாவில் ஸ்ரீ மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும்.. சித்ரா  பௌர்ணமி அன்று - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும்!.. 

மீனாட்சியின் திருக்கல்யாண வைபவமும் கள்ளழகருக்கான உற்சவமும் சித்திரை மாதத்தில் ஒரே சமயத்தில் கொண்டாடப்படுகின்றன. 

இப்படி, சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்டவர், மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர்!..

மதுரையில் தன் சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்காக கள்ளழகர் - அழகர் மலையிலிருந்து புறப்பட்டு வருவதாகவும் அப்படி வருபவர் சில இடங்களில் தங்கி இளைப்பாறி விட்டு, 

வைகை நதியைக் கடந்து மதுரை நகருக்குள் வருவதற்குள் மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் முடிந்து விட்டதாகவும் அந்த விவரம் அறிந்த  கள்ளழகர், மீண்டும் தனது மலைக்கே திரும்பி விட்டதாகவும்   -

சொல்லப்படும் கதை - திருமலை நாயக்கர் காலத்துக்குப் பிறகு விளைந்தது.

மேலதிக விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்!..


அழகரை தரிசிக்க தமிழகம் முழுவதில் இருந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிறப்பு பஸ்கள், ரயில், கார், வேன்களில் விடிய, விடிய மதுரைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

கோடை விடுமுறை என்பதாலும் இன்று சிறப்பு விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் - குழந்தைகள், பெண்கள் என - குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர்.

பச்சைப் பட்டு உடுத்தியதால் மகிழ்ச்சி!..

அழகர் ஆற்றில் இறங்கும் போது உடுத்தியிருக்கும் பட்டின் நிறத்திற்கேற்ப  தானிய வளம் கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. 

இவ்வருடம் அழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கியதால் விவசாயம் சிறப்பாக இருக்கும். நல்ல மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாடு செழிக்க வேணும் நல்ல மழை பெய்ய வேணும்
கூட இருக்க வேணும் குடும்பம் தழைக்க வேணும்
வைகை பெருகி வந்து வாசல் நனைக்க வேணும்
ஐயா அருள வேணும் அழகரே காக்க வேணும்!..
* * *

15 கருத்துகள்:

  1. சிறப்பான படங்கள்...

    பட்டின் நிறத்திற்கேற்ப அனைத்து வளங்களும் பெருகட்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. நாடு செழிக்கட்டும்
    நல்லமழை பொழியட்டும்
    தங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வினை
    பசுமையாக காட்சியாக்கியதற்கு பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. சித்திரைத் திருவிழா பற்றிய பல தகவல்களை உங்கள் பதிவுகள் மூலம் படித்தேன். அடுத்த வருடமாவது சித்திரைத் திருவிழாவினை நேரில் காணும் வாய்ப்பினை மதுரை மீனாட்சி வழங்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் விருப்பம் போல அன்னை மீனாட்சி நல்லருள் பொழிவாள்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. பதிவு ம்படங்களும் மகிழ்வித்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. அழகர் கோவிலில் தரிசித்ததுண்டு . அவர் பவனி வரும்போது காண இதுவரைக்கொடுத்து வைக்கவில்லை.நேரடி ஒளிபரப்பும் நண்பர் ஒருவரை அழைத்துவர ரயிலடி செல்ல வேண்டி இருந்ததால் காண முடியவில்லை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களுக்காக - அழகர் பற்றிய பழைய கதை ஒன்றின் சிறு விளக்கத்தை- இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
      அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் தகவல்களைத் தருகின்றேன்.
      தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  7. நாளை முதலாவது நல்லகாலம் பொறக்கட்டும் ஐயா.
    அன்புடன்.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நண்பருக்கு நல்வரவு..
      அனைவரது வேண்டுதல்களும் பலிக்கட்டும்!
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அழகர் திருவிழாவை நேரில் கண்டது போல் உள்ளது. அழகர் பாடல் அருமை. பசுமை எங்கும் செழித்து நாடு நலம் பெறட்டும்.
    மக்கள் மகிழட்டும்.
    வாழ்த்துக்கள்.
    வாழக் வையகம்! வாழ்க வளமுடன்!
    !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க வையகம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..