நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 11, 2018

மார்கழிக் கோலம் 27

தமிழமுதம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு...(396) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 27

இன்று மங்கலகரமான
கூடாரவல்லி..


யாம் பெறும் சம்மானம் நீ தானே!..

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..
*
     
தித்திக்கும் திருப்பாசுரம்


வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான் - பொருந்தும் 
சுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது...(2305)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம் 

திருத்தலம் 
திருமயிலை - மயிலாப்பூர் 


இறைவன் - ஸ்ரீ கபாலீஸ்வரன்   
அம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி 


தல விருட்சம் - புன்னை 
தீர்த்தம் -  கபாலி தீர்த்தம்


அன்னை மயிலாக உருமாறி
ஈசனை வழிபட்ட திருத்தலம்..

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பாக
 கடற்கரை ஓரமாக விளங்கியது திருக்கோயில்..

அன்னிய வெறியர்களால் திருக்கோயில்
தரை மட்டமாக்கப்பட்ட போது
நல்லோர் ஒன்று கூடி
மூல மூர்த்திகளைப் பாதுகாத்தார்கள்..

மயிலாப்பூர் திருக்குளம் - 1906
பின்னாளில்
கோயிலும் குளமுமாக
மயிலாப்பூரினுள் உருவாக்கப்பட்டது...

கிரேக்கத்தின்
வானியல் அறிஞரான
தாலமி (0068 - 0168)
தான் வரைந்த உலக வரைபடத்தில்
மயிலார்ப 
என்று மயிலாப்பூரைக்
குறித்திருப்பதாக தமிழறிஞர்கள்
கூறுகின்றனர்..


திருக்கோயிலில்
சிங்கார வேலவனின் சந்நிதி
சிறப்புடையது..

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக் காப்பு


மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்..(2/47)

திருமயிலையில்
கபாலியையும் கற்பகவல்லியையும்
தாம் தரிசித்ததைப் பற்றி
ஸ்ரீ திருநாவுக்கரசர் 
திருஒற்றியூரில் அருளிய
தேவாரம் 

வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம்
வருவாரை எதிர் கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடு வெண்தலை ஒன்றேந்தி வந்து
திருஒற்றியூர் புக்கார் தீயவாறே.. 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 17- 18

தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்!..
சூடுவேன் பூங்கொன்றை சூடிச்சிவன் திரள்தோள்
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்...

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை
வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய்...   

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

 1. கேஷவ் ஓவியம்தானே அது? அருமை. முழங்கை வரை ஒழுக, ஒழுக நெய் ஊற்றி பொங்கலிட்டு கூடாரவல்லியைக் கொண்டாடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்.. கண்ணன் கட்டுண்டிருக்கும் ஓவியம் கேசவ் ஜி அவர்களுடையது அல்ல..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. ஓ... ஓகே ஸார்... பார்த்தால் அப்படித் தோன்றியது. கபாலிகோவில் சென்று தரிசனம் செய்திருக்கிறேன். நான் மிக மிகக் குறைந்த கோவில்களுக்கே சென்றுள்ளதால் இப்படிப் பெருமைப்படும் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கிறது!

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ....

  நல்ல தரிசனம்...அவ்வப்போது சென்று வணங்கும் கபாலி அப்பன், கற்பகாம்பா ள் அம்மை...

  உங்கள் பதிவின் மூலம் அறிந்து...மயிலை கடற்கரையில் இருந்த கோயில் என்று...அந்தப்.பழைய படம் குள த்துடன் அமைக்கப்பட்ட படம் அழகு....

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நானும் கேசவன் அவரிகளின் படம் என்றே நினைத்தேன்...

  மிக அழகிய படம்....

  மயிலை தரிசனத்திற்கும் ....

  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா தரிசனத்திற்கும்... நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 4. பாடல்களை ரசித்தேன். மயிலை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலம் மறுபடியும்.

  பதிலளிநீக்கு
 5. ஜி இன்றைய தரிசனம் நன்று

  பதிலளிநீக்கு
 6. இன்று கூடாரை வெல்லும் சீர்கோவிந்தனை நினைத்து என்வீட்டிலும் நெய் மணக்க பாயசம் சென்னை செல்லும்போதெல்லாம் முடிந்தவரை கபாலீசுவரன் கோவிலுக்குச் செல்வது உண்டு

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஐயா!

  இனிய தரிசனத்தை இப்போதாவது கண்டேன்.
  மகிழ்ச்சி!

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு