நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 28, 2018

மாம்பழச் சாமியார் 1

சுவாமி!...

குழந்தாய்!..

சிவப்பழமாகிய தாங்களும் இளங்கன்றாகிய அடியேனும் வெகு நேரமாக நடந்து நெடுந் தொலைவினைக் கடந்திருக்கின்றோம்..

ஆமாம்!..

சூரியன் வேறு உச்சியில் நிற்கின்றான்...
வயது முதிர்ந்த தங்களுக்கு நோகாவிட்டாலும் -
எனது கால்கள் மிகவும் நோகின்றன.. 
அத்துடன் பசி என்பது எல்லாருக்கும் பொது.. ஆகையால்...

ஆகையால்!...

அதோ தெரிகின்றதே.. அந்த மாஞ்சோலையில் சற்று நேரம் தங்கி இளைப்பாறிச் செல்வதற்குத் தாங்கள் சித்தம் கொள்ளவேண்டும்!...


ஆகட்டும்.. அப்படியே ஆகட்டும்!...

அதன்படி அந்த மாஞ்சோலைக்குள் சுவாமியும் சீடனும் நுழைந்தவுடன்..

வரவேணும்... வரவேணும்!...
- என்றபடி இளம் வயதுடைய தம்பதியர் ஆவலுடன் ஓடி வந்து வரவேற்றனர்...

அங்கேயிருந்த வைக்கோற்போரில் இருந்து வைக்கோலை உருவி
நிழல் கவிந்திருந்த மாமரத்தினடியில் மெத்தை போல் பரப்பி -

அதன் மீது பழைய வேட்டியை விரித்து வயதான ஸ்வாமி அமர்வதற்கு உதவினர்....

மங்கலம் உண்டாகட்டும்!... - ஸ்வாமிகள் மனமார வாழ்த்தினார்..

சாமி... எங்கேயிருந்து வர்றீங்க?...

வடக்கே திருக்கயிலாய மலையில் இருந்து வருகின்றோம்...

ஈஸ்வரா... ஈஸ்வரா... இந்தா புள்ளே.. சாமியை விழுந்து கும்புட்டுக்க!...

மறுபடியும் -

மங்கலம் உண்டாகட்டும்!... - ஸ்வாமிஜி வாழ்த்தினார்..

ஏ... புள்ளே... அந்த பனை ஓலை விசிறிய எடுத்து வந்து வீசு!..

சாமீ... ரொம்ப களைப்பா இருக்கீங்க.. 
நாங்க கொண்டு வந்த கட்டுச் சோறு இருக்கு... 
ஒரு வாய் சாப்புடுறீங்களா?..

என்ன மச்சான் நீ... போய் அந்த வாழையில இருந்து நுனி எலை நறுக்கிட்டு வா... ஓடு... சீக்கிரம்!...

சாமீ.. கோவிச்சுக்கப்படாது.. எங்க கையால நீங்க சாப்புடுவீங்களா?...

மகளே... எல்லாவற்றையும் துறந்த எமக்கு மீண்டும் பற்றையும் பாசத்தையும் ஏற்படுத்துகின்றன உன்னுடைய பேச்சும் உபசரிப்பும்!...

ஏ.. புள்ளே.. என்னா இது.. சாமிகிட்ட நொய்..நொய்..ன்னு கிட்டு...
இந்தா இருக்கு எலை.... சாமிகள் கை கழுவ தண்ணி கொடு..
சோத்துல கை போடாம அகப்பையால எடுத்து வை...

தாயே!.. நீ உன்னோட கையாலயே சோற்றை எடுத்து வையம்மா!...

எங்க அப்பாரும் இப்படித்தான் வாயாரக் கூப்புடுவாங்க!..
மச்சான்... அந்த குடாப்புக்குள்ள மாங்கா பழுக்க வெச்சிருக்கேன்..
நல்லதா நாலு எடுத்து நறுக்கி வை!...


பெருந்துறவியின் கண்களும்
இளந்துறவியின் கண்களும் ஏக காலத்தில் கலங்கின...

அந்தக் காலத்தில் ஈசன் எம்பெருமானையும்
இப்படித்தான் மெய்யடியார்கள் உபசரித்தார்களாம்!...

நாங்க எங்க சாமி அதெல்லாம் கண்டோம்!...
உங்க மாதிரி பெரியவங்க இந்தப் பக்கம் வர்றப்போ
ஏதோ எங்களால ஆனது.. வயிறார உபசாரம் செய்வோம்!...

- வெள்ளந்தியாகச் சொன்னார்கள் தம்பதியர் இருவரும்...

மகனே.. பெரிய பெரிய மகான்களுக்குக் கிடைத்த பாக்கியம்
இன்று எனக்கும் கிடைத்திருக்கின்றது...

குனிந்த தலை நிமிராமல் தயிர் சோற்றையும் மாம்பழத் துண்டுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளந்துறவி வியப்புடன் ஸ்வாமிகளை நோக்கினார்...

அந்தத் தம்பதியரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

ஸ்வாமிகள் தொடர்ந்தார்...

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்.. பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம் என்பார்கள்... அந்த மாதிரி சாட்சாத் அம்பாளும் பரமேஸ்வரனும் நேரில் வந்து பரிமாறி பசி தீர்த்த மாதிரி இருக்கின்றது!...

சாமீ...  அப்படியெல்லாம் பெரிய வார்த்தை எதுக்குங்க...
நாங்க ஏழை பாழைங்க.. ஏதோ எங்களால ஆனது...

இந்த மாஞ்சோலை உங்களுடையதா?...

ஆமாங்க சாமி.. இந்த மாந்தோப்பும் சுத்தியிருக்கிற வயக்காடும் 
எங்க அப்பன் பாட்டன் எங்களுக்காக கொடுத்த சொத்து...
கொடுக்கறப்பவே சொன்னாங்க.. தர்மஞ் செய்யடா.. மகனே!.. - ன்னு...

வெள்ளாமையில முதல் பங்கு தர்ம காரியங்களுக்கு..
மறு பங்கு அரசாங்க வரி.. அதோட வர்ற வருஷ சாகுபடி செலவுக்கு..
மூனாவது பங்கு ஆடு மாடு கோழிகளுக்கு.. வீட்டு செலவுக்கு!..

ஆகா.. நிறைந்த குணம்.. நிம்மதியான மனம்...
உங்களை மாதிரி உயர்ந்தவர்கள் தான் நாட்டுக்குத் தேவை...
உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்!...

சாமீ... கேட்டா கொடுப்பீங்களா?..

நிச்சயம்!..

அப்படீ..ன்னா.. நீங்க இங்கேயே தங்கிடுங்க!...

இங்கேயேவா!.. - அதிர்ந்தார் ஸ்வாமிகள்..

எங்க அப்பன் பாட்டன் மாதிரி.. இருக்கீங்க...
வயசான காலத்துல.. ஏன்.. அங்கே இங்கே..ன்னு அலைஞ்சிக்கிட்டு!..
உங்களுக்கு வேணுங்கிறதெல்லாம் செஞ்சு தர்றோம்...
எங்க கூடவே இருந்து எங்க புள்ள குட்டிகளுக்கு நல்லவழி காட்டணும்!..

அதற்குள்ளாக விஷயம் கேள்விப்பட்ட ஊர் ஜனங்கள் ஒன்று திரண்டு ஓடி வந்து ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்திற்காக வரிசை கட்டி நின்றனர்...

சாமிகள் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறப்போ தொந்தரவு செய்யக் கூடாது...
இனிமே நம்ம ஊர்ல தான் சாமிகள் தங்கப் போறாங்க!...

ஓ.. - என்று ஆர்ப்பரித்தது ஜனத் திரள்...

சாமிக்கு என்ன பேர்?.. - கூட்டத்துள் கிசுகிசுப்பு எழுந்தது...

பெரியவங்க கிட்ட போய் ஒங்க பேரு என்னா...ன்னு கேக்கிறது தப்பு...
அதனால நாமளே சாமிகளுக்கு பேர் வெச்சிடுவோம்!...

என்னா...ன்னு பேரு வெக்கப் போறே!...

சாமிகளோட முகத்தைப் பாரு.. 
மாம்பழத்தைச் சாப்பிடுறப்போ எவ்வளவு சந்தோஷம் தெரியுது... 
மாம்பழம் அவங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கு...
அதனால...

அதனால?...

இன்னையில இருந்து அவங்க பேரு மாம்பழச் சாமியார்!...

மாம்பழச் சாமியார் வாழ்க!... - மீண்டும் ஜனத்திரளிடையே ஆரவாரம்...

இதற்குள் ஸ்வாமிகள் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தார்..

இரு கைகளையும் உயர்த்தி ஆசி கூறியதுடன்
வந்திருந்த அனைவருக்கும் திருநீறு வழங்கினார்..

ஜனங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

சாமிகள்... இனிமேல் நம்ம ஊர்ல தான் தங்கப் போறாங்க!...
ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்..
உங்களோட கஷ்ட நஷ்டத்தையெல்லாம் அப்புறமா வந்து பேசிக்கலாம்...

இப்போ சாமிகள் தங்குறதுக்கு ஒரு குடிசை கட்ட வேணும்...
அதனால ஆளுக்கு ஒரு வேலைய கையில எடுங்க!...

அன்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது...

அவ்வளவு தான்...

சற்று நேரத்துக்குள்
மூங்கில் கழிகளும் தென்னங்கீற்றுகளும்
பாளைகளும் - மளமள.. என்று குவிந்தன...

அவற்றுடன் அந்த ஊர் மக்களின் அன்பும் சேர்ந்து கொள்ள
ஆங்கொரு குடில் அழகாக எழுந்து நின்றது...

ஸ்வாமிகள் படுப்பதற்கு தாழை நார் கட்டில்..
தரை விரிப்புக்கு பனை ஓலைப் பாய்..
மண்பானைகள்... கலயங்கள்...

கூடத்தில் குத்து விளக்கு.. தாழ்வாரத்தில் சர விளக்கு..
வாசற்படியினில் அகல் விளக்குகள்..

எல்லாவற்றையும் ஏறிட்டு நோக்கினார் ஸ்வாமிகள்...


இறைவா.. பற்றறுத்து வந்த என்னை மீண்டும் பாசத்தினால் கட்டுகின்றாயே...
இங்கே என்னென்ன திருவிளையாடல்களை நிகழ்த்தத் திருவுள்ளமோ!...

சூரியன் மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தான்...

சாமீ... ராப்பொழுதுக்கு பணியாரமும் கேழ்வரகு அடையும் 
தேங்காய்ப் பாலும் கொண்டு வர்றோம்... வேறென்ன வேணும்..ன்னு சொன்னீங்க...ன்னா!..

ஸ்வாமிகள் நிறைவாகப் புன்னகைத்தார்...

சரி.. நீங்க ஓய்வெடுங்க சாமீ!.....
நாங்கள்...லாம் நாளைக்கு வர்றோம்..

ஊர் ஜனங்கள் அப்போதைக்கு அங்கிருந்து புறப்பட்டனர்..
***

நாமும் நாளைக்கு அவர்களுடன் வருவோம்...

நலம் பெருகட்டும்..
***

12 கருத்துகள்:

  1. மாம்பழச் சாமியாரின் திருவிளையாடலை காண நானும் வருகிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  2. திருவிளையாடல்களைக் காணக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. சாமியாரின் திருவிளையாடல்களுக்குக் காத்திருக்கேன். பலகாரங்களுக்காகவும் தான். அதுவும் கேழ்வரகு அடை! ரொம்ப நாளாச்சு சாப்பிட்டு! அம்மா நினைவு வந்து விட்டது! :)

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கால சாமியார்களின்நினைவு வராமல் தடுக்க முடியவில்லை சாமியாரின் திருவிளையாடல்களைப் படிக்க ஆர்வம்

    பதிலளிநீக்கு
  5. ஆஹா!! மாம்பழச்சாமியார்!! எபியிலிருந்து மாங்காய் இங்கு வந்து கனியாகி மாம்பழத்தின் வரலாறு தொடர்கிறது போலும்!! அருமை!! என்ன நடை! ஏதோ நாங்களும் அங்கு சாமியாருக்கு உபச்சாரம் செய்து விருந்து படைத்து ஆசி வாங்கும் கூட்டத்தோடு கூட்டமாக இருப்பது போலத் தோன்றுகிறது.காட்சிகள் விரிந்து.

    கீதா: அக்கருத்துடன்... உணவு படைத்தலில் தயிர் சோறும் மாம்பழமும்! ரொம்பப் பிடிக்கும் துரை அண்ணா!படத்தைப் பார்த்ததும் உண்ண வேண்டும் போல் அதே போல் கேழ்வரகு அடை, பணியாரம் தேங்காய்ப்பால்..சாமியார் சொல்லாமல் இருப்பாரா..பற்றற்று இருந்தவனை இப்படிப் அன்பும் பாசக் கயிறும் கட்டுகிறதே என்று!! மாம்பழச் சாமியார் எங்களையும் கட்டிப் போட்டுவிட்டார். காத்திருக்கிறோம் அவரது அருளமுதங்களைக் காண..

    பதிலளிநீக்கு
  6. என் கணவர் ஒரு மாம்பழ சாமியார் கதை சொல்வார்கள், அது தானோ என்று நினைத்து படித்தேன். உங்கள் கதை நன்றாக இருக்கிறது, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. "மாஞ்சோலை உங்களுடையதா?" என்கிற சாமியாரின் கேள்விக்கு தம்பதியரின் பதில் கனகச்சிதம். தனக்கு வரும் வருமானத்தில் ஒரு குடிமகன் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பாடம்.

    பதிலளிநீக்கு
  8. தாக நேரத்தில் தண்ணீர், பசி நேரத்தில் அன்னம், பிரத்தியட்ச தெய்வம்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஆவ்வ்வ்வ் மாம்பழச்சாமியார் பெயரே சூப்பராக இருக்கு.. ஆனா நானும் இச்சாமியை நம்பிட்டேன், அடுத்த பதிவில கெடுத்திடாதீங்க:)..

    பதிலளிநீக்கு
  10. நலாமா ஐயா

    மாம்பழ சாமியார் அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆவலாக இருக்கிறது.

    தொடரக்காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. அப்போவே எழுத நினைத்தேன். நீங்க போட்டிருக்கும் மாம்பழத் துண்டுகள், சாதம் - என்னவென்று தெரியுமா?

    அது மேங்கோ ஸ்டிக்கி ரைஸ். தாய்லாந்தில் சாப்பிட்டுப் பார்த்தோம். அவர்களுக்கு இது முக்கியமான இனிப்பு வகை. விமான நிலையத்துக் கடைகளிலும் நீங்கள் இதனைக் காணலாம் (அந்த சீசனில்)

    எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என் மனைவிக்கும் எப்படிச் செய்வது என்று கற்றுக்கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..