நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 24, 2018

மா... - 2

அக்கா... அக்கா..வ்!...

யப்பா... எத்தனை நாளாச்சு தாமரை.. இந்தப் பக்கம் வரனும்..ன்னு இப்பவாவது நெனைச்சியே!...

என்னக்கா நீங்க.. பொங்கல் அன்னைக்குத் தான் இங்கே வந்து பொங்கல்...லாம் சாப்பிட்டுப் போனேன்... அதுக்குள்ளயும் எத்தனை நாளான மாதிரி..ங்கிறீங்க!..

ஆமாண்டா... செல்லம்!... உன்னைப் பார்க்கலேன்னா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு...

தாமரையைத் தோளோடு சாய்த்துக் கொண்டாள் அக்கா..

இந்த வருஷம் கன்னிப் பொங்கல் அதுவுமா - கிராமத்துக்கு போக முடியலை.. அன்னைக்கு தை அமாவாசை வந்ததாலே அவங்க அவங்களும் வீட்டு வேலையா ஆகிட்டாங்க.. நாங்களும் திருக்கடவூருக்குப் போய்ட்டோம்...

ஆமாக்கா!... மாமாவும் அத்தையும் திருவையாறு போய் இருந்தாங்க...
இந்த வருஷம் செண்பகத்தைப் பார்க்க முடியலை..

அதுக்கு வேறொரு யோசனை வெச்சிருக்கேனே!...

என்னக்கா அது!?.. ஜொல்லுங்க.. அக்கா!...

ம்ஹூம்.. அப்புறமாத்தான்!...

சரி.. எங்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்லப் போறீங்க!..
அப்புறம்.... உங்க அண்ணாச்சி நேத்து போட்ட பதிவைப் படிச்சீங்களா!...

ம்.. படிச்சேனே!... மா மரத்தைப் பத்தி எழுதியிருந்தார்.. 
ஏன்.. அதுல என்னபிரச்னை?..


பிரச்னை ஒன்னுமில்லை... அது..ல .... வந்து.. வந்து...

என்னம்மா?.. என்ன சந்தேகம்!?...

ஆமாக்கா!.. அது..ல... அந்த பொன்னுமணிக்கு மாவடு!..
அது.. ஏங்..க்கா மாசமா இருந்தா மாவடு வாங்கித் தரணுமா!...

திக்கித் திணறினாள் தாமரை...

அடிப் பைத்தியமே.... புள்ள உண்டாயிருந்தா மசக்கை ஆயிடும்...

மசக்கை..ன்னா!...

மசக்கை..ன்னா தெரியாதா?... இப்படியும் ஒரு அப்பாவியா!..

அச்சச்சோ... உள்ளே அத்தான் இருக்காங்களா?.. - தாமரைக்குத் தயக்கம்..

நீ பயப்படாதே.. அவங்க காலேஜுக்குப் போய்ட்டாங்க..
அவங்க கிட்ட இதக் கேட்டா இன்னும் விளக்கமாகவே சொல்லுவாங்க...

அத்தான்..கிட்ட கேக்குறதா!.. வேற வினையே வேண்டாம்!..
இதெல்லாமா போய் அத்தான்... கிட்ட கேக்க முடியும்?..

அம்மாடி.. அத்தானப் பத்தி என்ன நெனைச்சிக்கிட்டு இருக்கே.. 
அவங்க என் பின்னாடி சுத்துனப்பவே எனக்கு பாடம் நடத்துனவங்க....

என்னது பாடம் நடத்துனாங்களா!?...

அந்தக் காலத்தில ஊருக்கு ஊரு மாந்தோப்பு இருக்கும்...
ரகசியமா பார்த்துப் பேசற இடமே மாந்தோப்பு தான்..
அப்படியே கூடைய எடுத்துக்கிட்டு மாங்கா பறிக்கிற மாதிரி
மச்சானோட மனசையும் பறிச்சுக்கிட்டு வருவாங்க!...

சே.. இந்த ஆம்பிளைங்களுக்கு விவஸ்தையே கிடையாதுப்பா!...

தாமரை.... இதெல்லாம் தெரிஞ்சிருக்கிறது தான் சந்தோஷமான இல்லறம்.... உனக்கு என்ன சந்தேகம் அதைக் கேளு!..

அந்த மாவடு... மாங்காய்!..

கடைசி..ல - அந்த சின்னமணி  
மாங்காய்....ங்கறதுக்குப் பதிலா - 
மாவடு..ன்னு வாத்யார்..கிட்ட உளறிட்டான்!.
நம்ம நெல்லை அதக் கண்டு பிடிச்சுட்டாங்க!...

அது.. ஏங்..க்கா?...

கல்யாணத்துக்கு அப்புறம் கரு உருவான சில வாரங்கள்..ல மசக்கை ஆரம்பமாயிடும்... எதுவுமே சாப்பிடப் பிடிக்காது.. லேசா தலை சுற்றல் வாந்தி இருக்கும்...மனசுக்குப் பிடிச்ச எதையும் சாப்பிடப் பிடிக்காது.. 

ஆனா புளிப்பு ருசிக்கு மட்டும் வாயும் மனசும் ஏங்கும்..

ஓஹோ!..

சில பொண்ணுங்க.. புளி அது...இது...ன்னு இறங்கிடுவாங்க.. புளிப்புச் சுவை நல்லது என்றாலும் புளி ஆபத்து... அதனால தான் மாங்காய் மேல ஈர்ப்பு ஆகிடுது... புளிப்பு மாங்காய் இருந்தாலும் அது உடம்புக்கு நல்லதாகி விடுது...

இப்படி எத்தனை மாசத்துக்கு இருக்கும்?...

கர்ப்பப் பையில கரு தங்கினதும் சரியாகிடும்.. அதுக்கு அப்புறம் 
மூனு மாசத்துக்கு மேலயும் தலை சுற்றல் வாந்தி இருந்தா டாக்டரைப் பார்க்க வேண்டியது தான்...

நீங்க மாங்காய் தின்னுருக்கீங்களா!..

மரத்தில ஒரு காய் விடாம பறிச்சுக் கொண்டாந்துட்டாங்களே உங்க அத்தான்!.. இப்படி மாங்காய் திங்கிறதுக்கு உண்மையான காரணம் என்னா..னு தெரியுமா!..

நான் என்னத்தைக் கண்டேன்.. அக்கா!.. நீங்களே சொல்லுங்க!..

இனிய இல்லறம் நன்மக்கட்பேறு.. இதுக்கெல்லாம் காரணம் அன்பான காதல்!... இந்த காதலுக்கு அதிபதி யாருன்னு தெரியுமா?..


ஓ.. தெரியுமே!.. ரதியும் மன்மதனும் தானே!..

அப்பா.. நல்ல அறிவான பொண்ணு... அந்த மன்மதன் கையில கரும்பு வில்லும் அஞ்சு மலர் அம்புகளும் இருக்குது.. ன்னு சொல்வாங்க!..

அந்த அஞ்சு அம்புகளுக்கும் பேர் சொல்லவா...
முல்லை, தாமரை, மா, கருங்குவளை, அசோகம் - அப்படின்னு பூக்கள்...

ராசாத்தி!... இந்த அஞ்சு பூக்கள்...ல - 
மாம் பூ தான் மனக் கிளர்ச்சியை உண்டு பண்ணுதாம்..

ஓ!...

அதனால தான் மன்மதனுக்கு ஆத்மார்த்த நன்றி சொல்றதா 
மாங்காய் மேல ஈர்ப்பு.. அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...

இதெல்லாம் எங்க போயி அக்கா படிச்சீங்க!...

இதெல்லாத்தையும் பள்ளிக் கூடத்தில.. யா சொல்லித் தருவாங்க...
நாம தெரிஞ்சுக்கிடட்டும்....ன்னே அரசல் புரசலா
வீட்டுத் திண்ணையில பெரியவங்க பேசிக்கிட்டு இருப்பாங்க...

நாம வீட்டுக்குள்ள இருந்துகிட்டே காதுல வாங்கி 
மனசு..ல பதிய வெச்சிக்க வேண்டியது தான்!...

மாங்காய்... ல இவ்வளவு ரகசியம் இருக்கா...
நீங்க...ல்லாம் கொடுத்து வெச்சவங்க அக்கா!...

முக்கனிகள்...ல முதல் கனி மாம்பழம் தானே!..
இந்தப் பழத்தால தானே கயிலாயத்து..ல கலவரம் உண்டானது!..

ஆமா.. நானும் திருவிளையாடல் பார்த்திருக்கேன்...

ஈஸ்வரனுக்கு தயிர் சோற்றோட மாம்பழம் கொடுத்தவங்க யாரு..ன்னு
தெரியுமா?...

ஓ.. தெரியுமே!.. நம்ம காரைக்கால் அம்மையார்!..

சரி... ஈஸ்வரனுக்கு செந்நெல் சோறும் செங்கீரைக் கூட்டும்
உப்பிட்ட மா வடுவும் கொடுத்தவர் யாருன்னு தெரியுமா?...

தெரியாதே!... உப்பு போட்ட மா வடு யார் கொடுத்தாங்க.. அக்கா!..


அவர் பேர் தாயனார்.. திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில கணமங்கலம் ...ங்கற ஊர்க்காரர்... ஈசனுக்கு தினமும் நிவேத்தியம் கொண்டு போறப்ப ஒருநாள் வயல்...ல தடுக்கி விழுந்து சோற்றுப் பானை ஒடைஞ்சி போகுது..

அடப்பாவமே!...

கடவுளுக்கு கொண்டு போனது இப்படி ஆயிடிச்சே..ன்னு வருத்தப்பட்டு கழுத்தை அறுத்துக்கிறப்போ பூமியில இருந்து ஈசன் வெளிப்பட்டு மா வடுவை
விடேர்..விடேர்..ன்னு கடிச்சு சாப்பிட்டுட்டு..

தாயனே.. நீ கொண்டு வந்த சோற்றையும் கீரையையும் மா வடுவையும் நான் சந்தோஷமா சாப்பிட்டேன்.. நீ கழுத்தை அறுத்துக்காதே!..ன்னு - அருள் செஞ்சதா புராணம்..

இதனால அரிவாள் தாய நாயனார்.. அப்படின்னு சிறப்பு..
அறுபத்து மூன்று அடியார்கள்...ல இவரும் ஒருவர்...

ம்.... அப்போ பக்தியோட கொடுத்தால் கடவுள் வந்து சாப்பிடுவார்..ங்கிறீங்க!..
அக்கா.. மாங்காய்..ல என்னென்ன செய்யலாம்?...

உப்பு தடவி வைக்கிற அடை மாங்காய், வற்றல், ஊறுகாய், தொக்கு, 
மாங்காய் இனிப்பு பச்சடி, கார பச்சடி...

சாம்பார், கார குழம்பு, வற்றல் குழம்பு 
இதுல எல்லாம் மாங்காய் போடறதே தனிச்சுவை...

வண்டு துளைக்காத மாங்கொட்டைய உடைச்சி 
உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து தக்காளியோட சேர்த்து
மாங்கொட்டை ரசம் வைக்கலாம்...

அந்தத் துவர்ப்பு உடம்புக்கு ரொம்பவும் நல்லது... ஆனா - 
மாம்பிஞ்சில இருக்குற பால் உதட்டுல பட்டால் புண்ணாகி விடும்.. 

அப்புறம் மாம்பழ லஸ்ஸி, மில்க் ஷேக்!.. 

சரி.. அவ்வளவு தானா மாவடு புராணம்!..

இருக்குதே.. இன்னும் இருக்குதே!..
அம்பாளுக்கே வடு வகிர் கண்ணி..ன்னு திருப்பேர்..
மீன் மாதிரி கண்.. அதனால மீனாட்சி... அவ இருக்கிறது மதுரையில...

இங்கே அம்பிகைக்கு மாவடு மாதிரி கண்களாம்!..
மாவடுவுக்கு அவ்வளவு பெருமை...

எந்த ஊர்ல அக்கா... இப்படியான பேர்?...

மேலப் பெரும்பள்ளம் .. பூம்புகார் போற வழியில் இருக்கு..
தேவாரப் பதிகம் பெற்ற கோயில்.. திருவலம்புரம்..ன்னு தொன்மைப் பேர்...



ஜாக்கெட்..ல மாவடு எம்பிராய்டரி எல்லாருக்கும் பிடிக்கும் தானே...
மாம்பழ நிறச் சேலை கட்டுனா பொண்ணுங்களுக்கே தனியழகு...  

பட்டு ஜரிகை..ல கூட மாங்காய் டிசைன்... 
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!..



அதுமட்டுமா!.. எனக்கு ரொம்பப் பிடிச்சது மாங்காய் மாலை...நெக்லஸ் தான்!..
பத்தாவது படிக்கிறப்போ மூனரை பவுன்...ல போட்டிருந்தேன்...
மாம்பிஞ்சு மாதிரி தொங்கலும் இருந்துச்சு..

அக்கா... ஆச்சர்யமா இருக்கு!..
மாவடு மாங்காய்... க்கும் பெண்களுக்கும் இவ்வளவு தூரம் ராசியா!..

இன்னொன்னும் கேளும்மா!...
மாம்பழக் கன்னத்தை வர்ணிக்காதவங்க யாரு!..
மாம்பழக் கன்னத்தை பிடிக்காதவங்க யாரு!..

ஆமா.. இந்தப் பாட்டுக்காரனுங்களுக்கு வேற வேலை இல்லை... 
எதையாவது ஆபாசமா எழுதி...

அதை விடு... பராசக்தி படத்தில 
கண்ணே கண்மணியே.. கண்ணுறங்காயோ... - ங்கிற பாட்டுல

உந்தன் மாம்பழக் கன்னத்திலே
முத்தமாரி பொழிந்திட வருவார்..

- அப்படின்னு தாலாட்டு வரும்... நல்ல இனிமையா இருக்கும்!..

கவியரசரும் 
மாவடுக் கண்ணல்லவோ.. 
மைனாவின் மொழியல்லவோ!.. - ன்னு பாடுவார்..

மாந்தோப்புக் கிளிகள்
நாணத்தைப் பற்றிச் சொல்றப்போ,
செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி!.. - என்பார்..

இன்னொரு பாட்டில்,
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்..
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்!.. - அப்படின்னு வரும்...

மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்..
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலைத் தோரணங்கள்...

இது வாலி எழுதுன பாட்டு...

மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ.. - ந்னு ஒரு பாட்டு..
மாஞ்சோலைக் கிளி தானோ.. மான் தானோ.. - ந்னு ஒரு பாட்டு..
மாம்பூவே.. சிறு மைனாவே.. - ந்னு ஒரு பாட்டு..

மாம்பழம் மட்டுமா....
மாம்பழத்து வண்டு கூட பாட்டுக்குள்ள வந்திருக்கு...

சரி.. அக்கா நான் கிளம்பறேன்!...

இரு.. தாமரை.. நேத்து நெல்லை அவங்க சொன்ன பக்குவத்துல 
மாங்கா ஊறுகாய் செஞ்சேன்.. நீ கொஞ்சம் எடுத்துக்க...

அவ்வளவு சீக்கிரம் செஞ்சிட்டீங்களா!..

மாங்கா ஊறுகாய் செய்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்!..
அது சரி.. நீ எப்போ மாங்காய் திங்கப் போகிறாய்!...

என்ன கேக்கிறீங்க... ஒன்னும் புரியலையே...


உன்னோட டார்லிங் எப்போ துபாய்...ல இருந்து வர்றார்?...
நீ எப்போ மாங்காய் திங்கப் போகிறாய்!...
நீ எப்போ தாலாட்டு பாடப் போகிறாய்!...

அவங்க பங்குனிப் பொங்கலுக்கு வர்றாங்களாம்!..

ஓகோ... மாங்காய்க்கு இப்பவே சொல்லிட வேண்டியது தான்!...
முத்தத்துல மணித்தொட்டில் கட்டிட வேண்டியது தான்!...

போங்க அக்கா.. எனக்கு வெக்கமா இருக்கு!...

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள் தாமரை...
*
வாழ்க நலமுடன்..
வளர்க வளமுடன்.. 
***

8 கருத்துகள்:

  1. மாங்காயோடு மனசையும் பறிச்சுக்கிட்டு... ..ஆஹா.

    மலர் அம்புகளுக்கெல்லாம் பெயர்களா? இப்போதான் கேள்விப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு
  2. அப்பாடி... எல்லாப் பாட்டையும் சொல்லிக் கொண்டே வந்தாலும் எனக்கும் ஒரு பாட்டு சொல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள்! சீர்காழி குரலில் "மாம்பழத் தோட்டம்... மல்லிகைக் கூட்டம்.."

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    மா வரலாற்று விடயங்கள் கண்டு மகிழ்ந்தேன் தொடர்கிறேன்...

    "மாந்தோப்பு கிளியே மச்சானைப்பாரு"

    "மாம்பழக் கன்னங்கள் மாதுளை வண்ணங்கள்"

    "மாம்பழமாம் மாம்பழம் மல்க்கோவா மாம்பழம்"

    பதிலளிநீக்கு
  4. மா பற்றி சரித்திரமே எழுதிவிட்டீர்களே ஐயா!! மாங்காயே இனிக்கிறது! எத்தனை விஷயங்கள்! புதிய புராணக் கதை, மாங்காய் சாப்பிடும் காரணம் என்று பல தகவல்கள் அறிய முடிந்தது..புடவை, நெக்லஸ் என்றும் பாடல்களும் சொல்லி அசத்தல்.

    கீதா: அக்கருத்துடன் இதோ என்னோடதுக்கு இருங்க வரேன்...அண்ணா...

    பதிலளிநீக்கு
  5. துளசி நேற்றே வாசித்துவிட்டார்...நான் தான் தாமதம். அதனாலதான் கருத்தும் தாமதமாகிவிட்டது. நான் தானே கருத்தைப் பதியணும் இங்கு கணினி இருப்பதால்..

    ஹா!! கருத்து போயிடுச்சு! வடு வகிர் கண்ணி!! என்ன அழகான பெயர்....தாயனார் சரித்திரம் தெரிந்து கொண்டாச்சு. கண்ணியின் திருத்தலமும் மேலப்பெரும்பள்ளம் அறிந்து கொண்டோம்..

    நெல்லை மாவடு பற்றிக் கேட்டதையும் சொல்லி அழகான உரையாடல்...

    என் அம்மாவிடமும் அத்தையிடம் எல்லாம் இந்த மாங்கா நெக்லஸ் இருந்தது..ரொம்ப பிராபல்யம் ஒரு காலத்தில். அது போல மாம்பழக் கலர் பட்டும் ரொம்பவே. இப்போதும் கூட மாம்பழக் கலருக்குத் தனி மவுசுதான்...
    மன்மதன் மலர் அம்புகளுக்குப் பெயரும் உண்டா!! அதில் மாம்பூ வும் அடக்கம்!! ஓ! எத்தனை தகவல்கள்!

    மாம்பழக்கன்னம் என்றால் ஆபாசமில்லையே அண்ணா கவித்துவமாக இனிமையாக இருக்கே!! இது போன்ற வர்ணனைகள்...அக்கா சொல்லுவது போல் இல்லறத்துக்கும் இனிமை சேர்ப்பது காதல்தானே!!

    படங்கள் ரொம்ப அழகா இருக்கு அண்ணா...கிளி கடிக்கும் மாம்பழம் ஆஹா என்ன அழகு. எங்கள் மாமியார் வீட்டில் கூட மாங்காய் காய்த்தால் அணிலார் கூட்டமாக வந்துவிடுவார்கள்...பூனைகளும் வேட்டையாடுவார்கள் அணில்களை. கிளிகளும் நிறைய வரும்...

    மாங்காய்னாலே நாவில் நீர் ஊறும்...அண்ணா உங்க பதிவு மனதையும் கொள்ளை கொண்டுவிட்டது!!...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அஆவ் !!!என் பின்னூட்டத்தை காணோம் !! சரி திரும்பி தட்டறேன் :)

    மாம்பழம் மா பற்றிய விரிவான தகவல்கள் அருமை அண்ணா .
    மா விதை பருப்பில் ரசம் செய்து பார்க்கணும் .இதுவரை செஞ்சதில்லை .

    மாந்தளிர் நிற பட்டுப்புடவை கூட பேமஸ் :) மாங்கா டிசைன் நெக்லஸ் இருந்தது நானேதான் அவசரப்பட்டு பழைய டிசைன்னு மாற்றிட்டேன் :(

    இங்கே பதிவில் உள்ள பார்டர் அதெ கலர் புடவையும் என்கிட்டே இருக்கே :)

    பதிலளிநீக்கு
  7. மாம்பருப்பில் நாங்க மிளகு குழம்பு செய்வோம். ரசம் செய்தது இல்லை! மாம்பழக் கலர்ப் புடைவைகள் அலுத்துப் போகும் வண்ணம் கட்டியாச்சு! :)))) மாம்பழச் செய்திகள் எல்லாமே மாம்பழம் போல் இனிப்பு! கடைசியிலே "லதா"வின் ஓவியம்! ராஜமுத்திரை நாவலோ?

    பதிலளிநீக்கு
  8. நான் சாதாரணமான நாட்களில் சாப்பிடும் மாங்காய்கள், மாம்பழங்கள் கூட மசக்கையில் சாப்பிட்டதில்லை! :) சாம்பல் கூடத்தின்பார்களாம்! அதுவும் கிடையாது! :))))

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..