நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 02, 2025

கையருகே..

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 18 
ஞாயிற்றுக்கிழமை


பொதுவாக
மூலிகைகள் என்றாலே காடுகளிலும் ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திலும் தான் கிடைப்பதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

உண்மையில் அவை நம்மைச் சுற்றி தழைத்திருப்பவை... நமது அன்றாட  உணவில் கலந்திருக்கின்ற பலவும் மூலிகைப் பொருட்களே -  மிளகாயைத் தவிர்த்து..

தக்கபடி எடுத்துரைக்க ஆள் இன்றி தடுமாறிக் கிடக்கின்றனர் பலரும்..

இதைப் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்..

- என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்..

இதோ - கையருகே!.. 


சீரகம் :
நாம் உட்கொண்ட உணவு நல்ல முறையில் செரிப்பதற்கு துணையாகின்றது..

சீரகத்தினால் வாயுத் தொல்லை நீங்குகின்றது..

சீரகத்தைப் பொடி செய்து பழுப்புச் சர்க்கரையுடன்  எடுத்துக் கொள்ளும் போது, தேகத்தின்  தசைகள் வலிமை ஆகின்றன.. 

கேரளத்தின் பாரம்பரிய சீரகக் குடிநீர் பற்றி நாம் அறிந்ததே..

சோம்பு :
கடினமான புலால் உணவுகள்
சீக்கிரமாக ஜீரணமாவதற்கு இது துணை புரிகின்றது.. அடுத்த வேளைக்கான பசியைத் தூண்டி விடும்..

புலால் உணவு உண்பவர்கள் உணவுக்குப் பின் சிறிது சோம்பினை வாயில் இட்டுக் கொள்வர்.. ஏனெனில் இது நறுமணம் உடையது.. பார்ப்பதற்கு இளம் சீரகத்தைப் போலவே இருப்பது சோம்பு..

சோம்பினை சிறிதளவு கொதிக்க வைத்து கஷாயமாகக்  குடித்தால்  வறட்டு இருமல் சரியாகும்..

கடுகு :
இது எண்ணெயில் பொரியும்  போது ஏற்படுகின்ற வாசம் பசியைத் தூண்டுகின்றது.. அத்துடன் செரிமானத்தையும் சீராக்குகின்றது..

தசை வலி, வீக்கம், வாத நோய், மற்றும் மூட்டு வலியைப் போக்குகின்றது..

வெந்தயம்
நீரிழிவில் இருந்து மீள்வதற்கு வெந்தயம்
மிகச்சிறந்த ஒன்று.. யார் சாட்சி எனில் நான்.. நானே சாட்சி..

இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டுகின்றது... கல்லீரல் செயல்பாடுகளை மீட்டெடுக்கின்றது.. இரத்த சோகை உள்ளவர்களை  அதிலிருந்து விடுவிக்கின்றது .. அஜீரணக் கோளாறுகளைப் போக்குகின்றது.

மிளகு :
இதைத் தேடியே அந்நியர் இந்நாட்டிற்குள் புகுந்தனர்..
புலால் வகை சமையலில்  அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகும்.. காரச் சுவையுடைய இதன் பயன்கள் மிகவும் அதிகம்..  பழந்தமிழ் இலக்கியங்களில் மிளகினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன..


உலர்ந்த கொத்தமல்லி :
கையளவு கொத்தமல்லியை 
இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 150 மிலி யாக காய்ச்சி வடிகட்டி - பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட  நா வறட்சி, பித்த மயக்கம்,  வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.. 

இன்னும் பல மருத்துவ குணங்களை உடையதாய் திகழ்கின்றது கொத்தமல்லி... 

இதனை வறட்டு மிளகாயுடன் சேர்த்து அரைத்துப் பயன் படுத்துகின்ற நிலைக்கு ஆளாகி விட்டோம்..


பட்டை (இலவங்கம்) :
புலால் வகை சமையலில்  தவறாமல் இடம் பெறுவது..

உணவின் நறுமணம் மற்றும் ருசிக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது..

மிருகக் கொழுப்பினை உட்கொண்டால் - உட்கொண்ட கொழுப்பு வயிற்றில் விரைவில் செரிப்பதற்கு இதுவே காரணம்.. ரத்த ஓட்டத்தை சீராக்கி தூய்மைப் படுத்துகின்றது.. நீரிழிவு குறைபாட்டில் உடல் நலத்திற்கு பெரும்பங்கினைச் செய்கின்றது..

கிராம்பு :
புலால் வகை சமையலில்  இதுவும் தனித்துவமான பங்கு வகிக்கின்றது... கிராம்பினால் பற்பல நன்மைகள்.. 

புலால் உணவுகளின் செரிமானத்தை மேம்படுத்தி வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது.. நோய் எதிர்ப்புப் பண்புகளை மேம்படுத்தி நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது..


ஏலக்காய் :
நம் நாட்டிற்குள் அந்நியர் புகுந்து தேடி - வாரிச் சுருட்டியவற்றுள் ஏலக்காயும் ஒன்று..

சமையலுக்கான இயற்கை நறுமணமூட்டிகளுள் மிகச் சிறந்தது ..

வாய் நாற்றத்தைப் போக்குகின்றது.. இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது..

மூச்சுக் குழாய் அழற்சியை சமன் செய்கின்றது..

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை சமன் செய்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது..

புற்று நோய்த் திசுக்களின்

வளர்ச்சியைக் குறைக்கின்றது..

ஜாதிக்காய் :
புலால் சமையலில் கடினமான இறைச்சி (பெருஞ்சதை) வகைகள் வெந்து பக்குவம் ஆவதில் ஜாதிக்காயின் பங்கு  உள்ளது..

பொதுவாக நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை ஜாதிக்காய் பேணுகின்றது. 

ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் போது அருந்தினால் மன அழுத்தம் நீங்கி, நல்ல தூக்கம்
 கிடைக்கின்றது..

இவற்றை தக்கபடி சேர்த்து  சுத்தம் சுகாதாரத்துடனும் பொறுப்புணர்வுடனும் தயாரிக்கப்படும் உணவுகள் எதுவாயினும் அவரவர் வாழ்வியல் முறைக்கு சிறந்தவையே...

அவ்வாறே அனைவருக்கும் அமைவதற்குப் பிரார்த்தனை செய்து கொள்வோம்..

நானறிந்த குறிப்புகளும்  விக்கியில் இருந்து சில நுணுக்கங்களும் பதிவில் இடம் பெற்றுள்ளன..

எல்லாவற்றிற்கும் மேலாக
நமது சமையலே
நமது ஆரோக்கியம்

வாழ்க நலம்..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. அந்தந்த உடல் சீரின்மைக்கு ஒவ்வொன்றாய் எடுத்துக் கொள்வதைவிட, எல்லாவற்றையும் தினசரி உணவில் சமச்சீராய் சேர்த்துக் கொள்ளுதல் உடல் நலத்திற்கு நல்லது என்பதை முன்னோர் அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவு போட்டு இன்று சனிக்கிழமை என்று சொல்லுதல் என்ன நியாயம்??!!

    பதிலளிநீக்கு
  3. சீரகத்தை பொடி செய்து நாட்டுச்சக்கரையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதை சற்று விளக்கி எப்படி உபயோகிப்பது என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நம் பாரம்பரிய உணவினால், கலந்து நம்மோடு பயணிக்கும் , கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், சோம்பு ஏலம் என அனைத்து மூலிகைகளின் நன்மைகளை விளக்கிய விதம் நன்று. படித்து ரசித்தேன். பதிவில் அதன் நிறைகளை நன்றாக சொல்லியுள்ளீர்கள். பயனுள்ள பதிவுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வைத் தந்துள்ளீர்கள் இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலே போதும்.

    அஞ்சறைபெட்டி
    கை வைத்தியத்துடன் நம் முன்னோர் வாழ்ந்து மிகுந்த ஆரோக்கியமாக இருந்ததை நாம் மறக்கக் கூடாது.

    நீங்கள் கூறுவதுபோல "நமது நலம் நம் கையில்" சிந்திப்போம் கைக்கொள்ளுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..