நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 5
புதன் கிழமை
திரு ஆவடுதுறை
இறைவன்
ஸ்ரீ கோமுக்தீசுவரர்
ஸ்ரீ மாசிலாமணியீஸ்வரர்
அம்பிகை
ஒப்பில்லா முலையாள்
தீர்த்தம் பத்ம தீர்த்தம்
தல விருட்சம் அரசு
திருக்கயிலையில் பரமனுக்கும் பரந்தாமனுக்குமிடையே சொக்கட்டான் ஆட்டம்.. நடுவராக அன்னை பராசக்தி..
மகேசனும் மாலவனும் ஆடிய விளையாட்டில் அன்னை மாலவன் புறத்தே களி கூர்ந்தாள்..
ஈசன் கோபம் கொண்டார்..
நெறி தவறியதால் பசுவாகும் படி ஆணையிடுகின்றார்.. அன்னையும் தெய்வப் பசுவாக பூமியில் பல தலங்களை வலம் வந்தனள்.. மாதவனும் இடையனாக மாறி, சோதரிக்கு துணையாகத் நடந்தான்.
இப் புராணம்
தேரழுந்தூரில் துவங்கி திரு ஆவடுதுறையில் மங்களகரமாக நிறைவேறியது..
இத்தலத்தில் அம்பிகை ஐயனை ஆராதனை செய்ய ஈசனும் அகமகிழ்ந்து
அன்புடன் அரவணைத்துக் கொண்டார்..
அணைத்தெழுந்த பிரான் என்பது இத் தலத்தின் திருக்கோலச் சிறப்பு..
தல விருட்சமாகிய அரச மரத்தின் கீழ் சிவபெருமான் ஆனந்த நடனம் புரிந்ததாக ஐதீகம்..
திருக் கயிலாயத்தில் அட்ட மா சித்திகளையும் அறிந்திருந்த தவயோகி ஒருவர் இறைவனின் அருளாணைப்படி தென்னகத்திற்கு வந்த போது இவ்வூரில் பசுக் கூட்டத்தின் கதறலைக் கேட்டு உற்று நோக்க ஆநிரை மேய்த்த மூலன் என்ற இடையன் காலகதி அடைந்திருக்க - தானே இடையன் உடலில் புகுந்து ஊரார்க்கு உண்மையை உரைத்து ஆவடுதுறை தலத்தின் அரச மரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார்..
இம்மரத்தின் கீழிருந்து தான்
திருமூலர் திருமந்திரம் இயற்றியருளினார்..
திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக ஈசனிடம் பொற்கிழி பெற்ற திருத்தலம்..
இத் திருக்கோயிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.
தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தியம் பெருமான் இத் திருக்கோயிலில் அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம்.
(நன்றி விக்கி)
தமிழ் வளர்த்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்டது இத்திருக்கோயில்.
கும்பகோணம் மயிலாடுதுறை
சாலை வழியில் திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிமீ நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்..
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே..
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உன தின்னருள்
ஆவடு துறையரனே…3/4/1
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பா உன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உன தின்னருள்
ஆவடு துறையரனே. 3/4/7
-; திருஞானசம்பந்தர் :+
உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடு துறைய னாரே. 4/56
திருவே என் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் உறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேஎன் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே.. 6/47
-: திருநாவுக்கரசர் :-
ஒப்பிலா முலையாள் ஒரு பாகா
உத்தமா மத்தமார் தரு சடையாய்
முப்புரங்களைத் தீ வளைத் தங்கே
மூவருக்கருள் செய்ய வல்லானே
செப்ப ஆல் நிழற் கீழிருந் தருளுஞ்
செல்வனே திரு ஆவடு துறையுள்
அப்பனே எனை அஞ்சல் என்றருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.. 7/66
-: சுந்தரர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
அணைத்தெழுந்த பிரான் - அருமை.
பதிலளிநீக்குஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
திருவாவடுதுறை அணைத்தெழுந்தபிரான் புராணக் கதை அறிந்தோம். தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குஓம் நமசிவாய.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருஆவடுதுறை கோவில் கோபுரங்களை தரிசனம் செய்து கொண்டேன். கோவிலின் ஸ்தல வரலாறு அறிந்து கொண்டேன்.
அன்னையின் சகோதர பாசமும், அன்னைக்குத் துணையாக வந்த மாலவனின் சகோதர வாஞ்சையும் பிரமிக்க வைக்கிறது. இறைவன், இறைவியை பணிந்து வணங்கி கொண்டேன். நல்லதோர் கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.