நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 02, 2024

புளிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 18
செவ்வாய்க்கிழமை

உணவுத் திருவிழா 2


இன்று புளிப்புச்சுவை

உணவில் நிகழும்  
மாற்றங்களுக்கு புளிப்புச் சுவையே காரணமாகின்றது..

இது அதிகமாயின், தாக உணர்வை அதிகரிக்கும். 
பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற இன்னல்களை உண்டாக்கும். உடல் தளரச் செய்யும்..
(நன்றி விக்கி)

எலுமிச்சை, புளிச்சக் கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி புளி,  மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது..


எலுமிச்சை  சாதம் 

தேவையானவை :
சீரகச் சம்பா சோறு  2 Cup
எலுமிச்சம் பழம் 2
மஞ்சள் தூள் 1⁄2 tsp
பச்சை மிளகாய் 2
பெருங்காயம்ஒரு சிட்டிகை
வறுத்த வேர்க்கடலை கையளவு

தாளிக்க :
நல்லெண்ணெய் தேவைக்கு
கடுகு - 1⁄2 tsp
உளுத்தம்பருப்பு - 1 tsp
கடலைப் பருப்பு - 1⁄2 tsp
சீரகம் - 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை :

எலுமிச்சம் பழத்தை நறுக்கி  சாறு  பிழிந்து விதைகளை  நீக்கி விட்டு சிறிது நீர் விட்டு உப்பு, மஞ்சள்  சேர்த்துக் கலக்கி வைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து 

பெருங்காயம் மஞ்சள் தூள்  உப்பு - போட்டு எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து தாளிப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும்..


எலுமிச்சையின் சாறு கொதித்ததும் இறக்கி -  
எடுத்து வைத்திருக்கும் சோற்றை, மேலும் சிறிது நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைத்து சில நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்..:


புளியோதரை :


புளியோதரை செய்யும் போது சற்றே குழைய வடித்த சாதத்துடன் இறுக்கமான புளிக் காய்ச்சலைக் கலந்து விருப்பமான வேர்க் கடலையையோ முந்திரியையோ வறுத்துப் போட்டு நல்லண்ணெய் தளர விட்டுக் கிளற வேண்டியது..
அவ்வளவே... 

ஆனாலும்,
வேறு வேறு பக்குவங்களும் நிலவுகின்றன..

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை.. காரணம் பிறகு சொல்கின்றேன்.. ஆனாலும் நன்றி..)

உணவுத் திருவிழா எனச் சொல்லி விட்டு  அரைத்த மாவைத் தானே!?... - என்று நினைக்க வேண்டாம்.. 

அரைக்கப்பட்ட மாவு தான்..
சுவையையும் சுவை சார்ந்த உணவையும் தன்மைகளையும் குறிப்பதே இதன் நோக்கம்..

உணவில் புளிப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூலை 01, 2024

இனிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 17 
திங்கட்கிழமை

உணவுத் திருவிழா 1

இறைவன் அளித்த இந்த உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது.. 

இதில் ஏழாவது தாது ஆகிய மூளை சரிவர இயங்குவதற்கு முதல் ஆறு தாதுக்கள் தக்கபடி  அமைய வேண்டியது அவசியம். 

இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்க்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு தசையை வளர்க்கின்றது

புளிப்பு கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு எலும்புகளை வளர்க்கின்றது

உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

துவர்ப்பு இரத்தத்தைப் பெருக்குகின்றது

கசப்பு நரம்புகளை பலப்படுத்துகின்றது

அக்காலத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவங்களும்,  இதனை வலியுறுத்தி நின்றன.. 

இன்று மாற்று முறை உணவுப் பழக்கத்தால் நமது நாட்டில் நோயாளிகள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்..

அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பழங்கள், காரட் போன்ற கிழங்குகள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது..
(நன்றி விக்கி)

இந்த அளவில் இனிப்புச் சுவையுடன் கூடிய பொங்கல் இன்று அறிமுகம்...

மகிழ்ச்சிக்கு ஆதாரமாகிய சுவை இனிப்பு..

இது யாருக்கும் தெரியாதா என்றால் இது தான் மரபு..

இன்று தொடங்கி ஏழு நாட்களும்  சிறு சிறு உணவுக் குறிப்புகள் தங்களுக்காக...

சர்க்கரைப் பொங்கல்  


தேவையானவை:
பச்சரிசி 250 gr
வெல்லம் 500 gr
பசும்பால் 750 ml
ஏலக்காய் 3
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு  15
உலர்ந்த திராட்சை 20 

பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
(விருப்பம் எனில்)

வாணலியில் நெய் விட்டு  தேவையான  முந்திரிப்பருப்பு உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 

பாத்திரம் ஒன்றில்
பச்சரிசியை நன்றாக அலசி விட்டு ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.. 


வேறு ஒரு உருளியில்  வெல்லத்தைப் போட்டு
மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு சூடாக்கவும்..

வெல்லம் இளகிக்
கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

தளதள என்று குழைந்து இருக்கின்ற சாதத்தில் வெல்லப் பாகினைச் சேர்க்கவும்..

ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் பாலும் பாகும் அதிகமாகி விடக் கூடாது.. 

வெல்லப்பாகினைச் சேர்த்த பிறகு   ஏலக்காயைத் தட்டிப் போட்டு வறுத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கிளறவும்..

முந்திரி திராட்சையைப் பொங்கலில் சேர்த்ததும் மேலும் சிறிது நெய் சேர்க்கவும்..

நெய்யின் முறுகலான வாசம்  வீடெங்கும் பரவி நிற்கும்...

மாதம் ஓரிரு முறை சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை..


(விருப்பம் எனில் பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்துக்  கொள்ளலாம்..)

உணவில் இனிப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. அளவுடன் இருப்பது அவசியம்.. முயற்சிக்கவும்..

சர்க்கரை பொங்கல்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)
**

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***