நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 05, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 21  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: திருத்தணிகை :-


தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான


வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட ... விசையாலே

வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு ... மதியாலே

பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு ... மழியாதே

பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று ... வரவேணும்

நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த ... கழல்வீரா

நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த ... ழுவுமார்பா

எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு ... முருகோனே

எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட ... பெருமாளே.
-; அருணகிரிநாதர் :-


வெற்றி தரக்கூடிய
கரும்பு வில்லை வளைத்து
மன்மதன் எய்த மலர்
அம்புகளின் வேகத்தினாலும்

வெட்ட வெளியில்
தெருக்களில், வட்டமாய் நெருப்பென  
ஒளி பரப்பும் நிலவினாலும்

வசை மொழிகளைப் பயின்று, 
அவற்றைப் பேசுகின்ற
பெண்களின் பேச்சாலும்
குழலின் இசையாலும் நான் நலிவுறாமல்

பக்தி நெறியை எனக்கருளி முத்தியையும்  அளிப்பதற்கு
பச்சை மயில் வாகனத்தில்  நீ வந்தருள வேண்டும்..

நெற்றி விழியால் மன்மதன் எரிந்து 
போகும்படி நடமிட்ட சிவபெருமானின் மனதில் நிலைத்திருந்த கழல்வீரனே

தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற 
தனங்களை உடைய,  குறவள்ளி 
அன்பு கொள்ளும்படி 
நித்தம் தழுவுகின்ற திருமார்பனே...

அலைகடல் சூழ்ந்த புவியின் 
திருத்தணி மலையில் என்றும் 
நின்றருள்கின்ற முருகனே..

எட்டுப் பெருமலைகள்  வரையிலும் 
எட்டிப் பரவி உலகெல்லாம் 
தங்கள் ஆட்சியைச் செலுத்திய 
அசுரர்கள் -

அடைத்து வைத்த 
தேவர்களை சிறையினின்றும்  
விடுவித்த பெருமாளே..
**


இன்றைய தணிகைத் திருப்புகழின் விளைவாக நமது தளத்தில் - 
தினையரிசி பால் கொழுக்கட்டை .. 

தேவையானவை:

1) தினையரிசி மாவு 250 gr
2) பால் 350 ml
3) தேங்காய் ஒரு மூடி
4) பழுப்பு வெல்லம் 250 gr
5) ஏலக்காய் 3
6) நெய் சிறிதளவு

செய்முறை:

பாத்திரம் ஒன்றில் அளவான  தண்ணீர் விட்டு வெல்லத்தை  ஊற வைத்து  வடிகட்டி
அடி கனமான பாத்திரத்தில் - வெல்லம் கரைத்த நீரைக் கொதிக்க வைக்கவும்..

வெல்ல நீர் கொதிக்கும் போது  அதனுடன்  தினை மாவு, 
தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து - கை விடாமல் ஐந்து நிமிடங்கள்  கிளறவும்..

இறுகித் திரண்டு வரும் மாவை - சற்று ஆறிய நிலையில் சின்னச் சின்ன  உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்..

தொடர்ந்து, அடுப்பில் இட்லி பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி அந்த இட்லித் தட்டில்   உருண்டைகளை வைத்து நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

அடுத்ததாக 
சிறிதளவு நீரில் ஒரு தேக்கரண்டி தினை மாவைக் கரைத்து அத்துடன் பாலையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்..

மிதமான சூட்டில் கொதிக்க ஆரம்பித்தவுடன்  வேக வைத்திருக்கும் உருண்டைகள் ஏலப் பொடி சேர்த்து  ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்..

பால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்..

தினையரிசி பால் கொழுக்கட்டை ..

முருகனுக்கு நிவேத்யம் செய்யவும்..

பாரம்பரியமாக வீட்டில் இடித்த - பச்சரிசி மாவில் செய்யப்படும் பால் கொழுக்கட்டை குறிப்பு ஒன்றும் உள்ளது.. அது பிறகு!..
ஃஃஃ


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    அவருக்கு பிடித்த தினையருசியில் பால் கொழுக்கட்டை செய்முறை அருமை.

    பதிலளிநீக்கு
  2. முருகனைப் பணிந்து வணங்கி விட்டு பிரசாதமாக பால் கொழுக்கட்டை எடுத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தரிசனமும், பிரசாதமும் நன்று.

    பதிலளிநீக்கு
  4. முருகன் படங்களும் பாடலும் நன்று.

    தினையரிசியில் கொழுக்கட்டை... ஆஹா...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..