நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 24, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11  
வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
பொதுப்பாடல்

தனதன தனதனத் தனதன தனதனத்
தனதன தனதனத் ... தனதான


பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
பரவிய ம்ருகமதக் ... குழல்மானார்

பருமணி வயிரமுத் திலகிய குழையினிற்
படைபொரு வனவிழிக் ... கயலாலே

எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்
கினிமையோ டுருகவிட் ... டவமேயான்

இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட் 
டிடர்படு வதுகெடுத் ... தருள்வாயே..

சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்
தொளைபடு கரமலையிற் ... கிளையோனே

துடி இடை ஒருகுறக் குலமயில் புளகிதத் 
துணைமுலை தழுவுபொற் ... புயவீரா

அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்
கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி

அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்
தமர்செயு மறுமுகப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நறுமணம் மிக்க மலர்கள் சூடப் பெற்று 
அகிலின் வாசத்தில் தோய்ந்து கருநிறம் 
பரந்துள்ளதாகத் திகழ்கின்ற கூந்தலுடன்
கஸ்தூரித் திலகம் அணிந்துள்ள  பெண்களின்

பெரிய பெரிய ரத்ன, வைர, முத்துகள் 
திகழ்கின்ற காதணிகளுடன் 
போர் புரிவது போலப் பாய்கின்ற 
மீன் விழிகளாலே

நெருப்பில் இடப்பட்ட மெழுகைப் போலத் 
துணையின்றி நிற்கும் என் மனமானது 
சிற்றின்பத்தில் நெகிழ்ந்து உருகும்படியாக
  
எனது இரு வினைகளும் 
வலிமையுடன் என்னை வதைக்க - 
நான் அறிவு கெட்டு வேதனையுறாமல் 
இருப்பதற்கு அருள் புரிவாயாக..

மதநீரை அருவி எனச் சொரிகின்றதும் புள்ளிகள் நிறைந்த முகத்தையும், தோள்களையும் கொண்ட
துதிக்கையையும் உடையதாகிய யானையின் முகத்தையுடைய கணபதிக்கு இளையவனே..

உடுக்கை போன்ற இடை உடைய குறவர் குல மயிலாகிய வள்ளி நாச்சியாரின் திருத்தன பாரங்களைத் தழுவுகின்ற அழகனே.. 

பல வகைப்பட்ட திமிலை எனும் பறைகளுடன்
உடுக்கைகள் மொகு மொகு என்று ஒலிக்கவும் கோடிக் கணக்கான பேய்கள்  கூத்தாடி குதுகலித்துக் களிக்கவும்

கூரான வேலாயுதத்துடன்  போர் புரிகின்ற அழகனே.. ஆறுமுகப் பெருமாளே...
**
 

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. முருகா...  முருகா...  முருகா வா...   மோகன குஞ்சரி பதியே வா...

    பதிலளிநீக்கு
  2. வருவான் வடிவேலன்..

    தருவான் தயாபரன்!..

    மகிழ்ச்சி..
    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  3. திருப்புகழ் படிக்க கஷ்டமான சந்தங்களைக் கொண்டது. தெய்வீக புலவர்களுக்கே அதை எழுதுவது சாத்தியம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..