நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 04, 2022

திருப்பூவனூர்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்றைய பதிவில்
அப்பர் பெருமான்
அருளிச்செய்த
திருப்பதிகம்

-: நன்றி :-
தருமபுர ஆதீனத்தின்
பன்னிரு திருமுறைத்
தொகுப்பு..


ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண்  65

திருத்தலம்
 திருப்பூவனூர்

இறைவன்
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர்

அம்பிகை
ஸ்ரீ கற்பகவல்லி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
( இரு சந்நிதிகள்)

தலவிருட்சம் பலா
தீர்த்தம் ஷீரபுஷ்கரணி

இத்திருக்கோயிலில் விளங்குகின்ற
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மிகவும் பிரசித்தமானவள்..

நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஐந்து கிமீ., தொலைவில் உள்ளது..

இத்திருக்கோயிலுக்கு
இரண்டு முறை சென்றிருக்கின்றேன்..

படங்கள் Fb ல் கிடைத்தவை
*

பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே..1

பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் புகழ்ந்தவர்களது பாவங்கள் எல்லாம் சிதைந்து கெட்டுப் போகும். அவர்கள் தேவேந்திரனை விட மிகப் பெரிய செல்வந்தர்கள் ஆகி சிறப்புற்று வாழ்வர்.

என்னன் என்மனை எந்தை என் ஆருயிர்
தன்னன் தன்னடி யேன் தன மாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்றறி வொண்ணான் இயற்கையே.. 2

என்னை உடையவன். என் மனையாளாகவும் உள்ளவன். என் தந்தை. என் உயிர். தனக்குத் தானே உவமை ஆனவன். அடியவனாகிய எனக்கு செல்வமாக உள்ளவன். தன் இயல்பினால் இன்ன தன்மையன் என்று அறிவதற்கு இயலாதவன் ஆவான்.. அவனே பூவனூரில் இனிது உறைகின்றான்..

(இப்பாடலில் மனையாள் என்று குறித்திருப்பது நம் பொருட்டு என உணர்க)


குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.. 3

குற்றங்களே மிகப் பெருகிக் கொண்டிருக்க நற்குணம் என்று  எதுவும் கூடாதவர்களே!. புற்றில் வாழ்கின்ற பாம்பினைச் அணிந்தவனாகிய பூவனூர் இறைவனின் திருநாமத்தை உமது காலம் முடிவதற்கு முன்பே கற்றுணர்ந்து வாழ்த்துவீராக.. அங்ஙனம் வாழ்த்தினால் இப்பூவுலகில் நீங்கள் செய்த பாவ வினைகளை இங்கேயே மாய்த்து விடலாம்.

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.. 4

பசு வழங்கும் செல்வங்களில் விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும் தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியானும் விரிந்து விளங்குகின்ற திருமார்பில் பூணூல் தரித்தவனும் ஆகிய எம்பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரையில் விளங்குவதுமாகிய பூவனூர் திருத் தலத்தில் புகுந்து தொழும் அடியவர்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிப் போகும்..


புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்லம் ஊர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல்
வல்லம் ஊரென வல்வினை மாயுமே.. 5

புல்லம், ஊர்தியூர், பூவனூர், நீர் வளம் உடைய நல்லம், ஊர்தி நல்லூர், நனிபள்ளியூர், தில்லையூர், திருவாரூர், சீர்காழி, நல்ல வல்லம் - எனும் இத்தலங்களை உளமாற நினைந்த அளவிலே வல்வினைகள் நீங்கித் தொலையும்..

அனுச யப்பட் டது இது என்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.. 6

ஐயப்பட்ட பொருள் இது என்றில்லாமல் கனிந்து தெளிந்த மனத்துடன் கண்களில் நீர் நிறைந்தவராகி பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே மனிதர்களில் சிறந்த மனிதர் ஆவர்..


ஆதி நாதன் அமரர்கள் அர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.. 7

பூவனூரில் மேவி விளங்கும் இறைவனே ஆதியில் தோன்றியவன்.. தேவர்களால் அர்ச்சிக்கப்படுபவன்.. வேதங்களை ஓதுபவன். மலைமங்கையைத் தனது மேனியில் ஒரு பாதியாய்க் கொண்டவன்.  பெரும் படைக்கலங்களை உடையதாகிய பூதங்களின் நாதனும் ஆவான்.

பூவனூர் தண் புறம்பயம் பூம்பொழில்
நாவலூர் நள்ளாறொடு நன்னிலங்
கோவலூர் குடவாயில் கொடுமுடி
மூவலூரும் முக்கண்ணனூர் காண்மினே.. 8

பூவனூரும், குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும், நள்ளாறும், நன்னிலமும், கோவலூரும், குடவாயிலும், கொடுமுடியும், மூவலூரும் ஆகிய அனைத்து ஊர்களும் மூன்று கண்களை உடைய
எம்பெருமானின் ஊர்கள் என்பதைக்  கண்டு உணர்வீர்களாக..

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன்
ஏவம் ஏதுமிலா அமண் ஏதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.. 9

விதி ஏதும் இல்லாத அமணர்கள் குற்றமுடையோர் பாவகாரிகள் ஆகியவர் சொல் வலையில் பட்டு அல்லலுற்ற நான் தேவதேவனாகிய சிவபெருமானின் திருநெறியில் கலந்து பூவனூர் தலத்தினுள் நுழைந்த இந்நாளே நாள்.. இன்றே நல்ல நாள்..


நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன் எனை ஆளுடைக் காளையே.. 10

நாராயணனும் பிரம்மனும் இந்திரனும் விநாயகரும் முருகனும் வணங்குகின்ற திருவடிகளை உடைய பூரணன். அவனே திருப்பூவனூரில் பொருந்தியுள்ள காரணன். அவனே, என்னை ஆளுகின்ற காளையும் ஆனவன்.

மைக்க டுத்த நிறத்து அரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்அடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.. 11

மேகத்தைப் போன்ற நிறத்தை உடைய அரக்கன் இராவணன் திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்தெடுத்தபோது,  இறைவன் தனது திருவடியின்  பெருவிரலைச் சற்று ஊன்றினான்.. அந்த அளவில் அரக்கனின் உடல்  உறுப்புகள் எல்லாம் பிளந்து நைந்தன.. மனம் வருந்திய அரக்கன் போற்றிப் பாடி அருள்பெற்று உய்ந்தான்.. அப்படியாகிய அரக்கனுக்கும் அருள் புரிந்த ஈசனே பூவனூரில் மேவி விளங்குகின்றான்..

 - திருச்சிற்றம்பலம் -

அப்பர் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. இன்று இங்கு சதுரங்க வல்லபநாதர் விஜயமா? திருச்சிற்றம்பலம்... ஓம் நமச்சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..

      நீக்கு
  2. திருப்பூவனூர் தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. திருப்பூவனூர் படங்கள் அழகு, தரிசனமும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  4. மோதி சொல்லலைனா இந்த ஊர் இத்தனை பிரபலம் ஆகி இருக்காது. பகிர்வுக்கு நன்றி. நாங்க மன்னார்குடி/நீடாமங்கலம் போனோம். ஆனால் இங்கே போகலை.

    பதிலளிநீக்கு
  5. திப்பூவனூர் பாடலும் படங்களும் அருமை.
    முன்பு பார்த்தது மீண்டும் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருப்பூவனூர் கோவில் தரிசனம் பெற்றுக் கொண்டேன். அறியாத கோவில். கோவில் கோபுரம், மற்றும் அன்னை ஸ்ரீ சாமுண்டீஸ்வரி படங்களும், அப்பர் சுவாமிகள் அருளிய பாடல்களும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அழகான கோயில் இயற்கை சூழலில் மனதிற்கு மகிழ்ச்சி..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. இந்தப் பதிவில் நான் கொடுத்த கருத்து மெயில் பாக்ஸில் இருந்து!
    "Geetha Sambasivam "திருப்பூவனூர்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    மோதி சொல்லலைனா இந்த ஊர் இத்தனை பிரபலம் ஆகி இருக்காது. பகிர்வுக்கு நன்றி. நாங்க மன்னார்குடி/நீடாமங்கலம் போனோம். ஆனால் இங்கே போகலை." ம்ம்ம்ம்ம், என்னன்னே தெரியலை. கொடுக்கும் கருத்துகள் மெயில் பாக்ஸில் இருக்கின்றன. ஆனால் பதிவுகளில் தெரிவதே இல்லை. எங்கள் ப்ளாகிலும் அப்படித் தான் ஆச்சு! எத்தனை இருக்கோ! :( பின் தொடரும் கருத்துகள் ஒழுங்காய் வந்துவிடுகின்றன. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இதுவரைக்கும் எளிமையாக இருந்த கோயில்.. இனி வருங்காலத்தில் எப்படி ஆகுமோ?..

      கோயிலை கடைகளும் கடைகளில் சதுரங்க விளையாட்டு அட்டைகளும்.. ஆகா..

      கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  8. திருப் பூவனூர் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..