நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி மாதத்தின்
நான்காவது
வெள்ளிக்கிழமை..
இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்போரூர்
திருப்புகழ்..
(நன்றி : கௌமாரம்)
தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன ... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய ... திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாஅரி நாரணன் ... மருகோனே..
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி ... தருகோவே..
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள் ... மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித ... பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல ... பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் ... முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய ... பெருமாளே!..
*
இருள் அடைந்த மனத்தையும்,
மிக்க அறியாமையையும் மட்டுமே
கொண்ட எனது
வருத்தங்களையும்,
ஆணவத்தையும் விலக்கி
வைக்கின்ற ஞான சூரியனே!.
மூவுலகங்களுக்கும் ஒளி தருகின்ற
சூரியனே.. சிவனே.. மூலாதாரனே!.
நாகாபரணனும் வேத முதல்வனுமாகிய
சிவபெருமானின் குமாரனே!.
ஹரி நாராயணனின் மருகனே!.
குமரியும், கருமை கலந்த
பச்சை நிறத்து சியாமளையும்,
உமா தேவியும், மாசற்றவளும்,
பச்சை நிறத்து யாமளையும்
எங்கும் நிறைந்திருப்பவளும்,
குணச்செல்வியும்,
கலைச்செல்வியும் ஆகிய
நாராயணி பெற்றெடுத்த அரசே!.
குருநாத குகனே
குமரேச சரவணனே
உருவாய்
இலங்கித் திகழும் ஈசனே!.
குறவர்தம் தவப் புதல்வியாகிய
வள்ளி நாச்சியாரின் மீது
ஆசை வைத்த மாமணியே!.
வண்டுகள் கூட்டமாக
மொய்க்கும்படிக்கு ஒளிவீசிச்
சிவந்த வெட்சி மாலைகளை
அணிந்தவனே,
ப்ரணவப் பொருளான
பேரின்பப் பெருநிதியே!.
பாசுரங்களைப் (தேவாரத்தை)
பாடி உலகுக்குக் கொடுத்தவனே,
செம்பட்டு அணிந்தவனே,
மலைகளுக்கு அரசனே!.
திருநீற்றில் திளைப்பவனே,
சேவற்கொடியினை உடையவனே!.
மேன்மை மிகுந்த
வேலினைக்
கரத்தில் கொண்டிருப்பவனே!.
பாலவனே, யோக மூர்த்தியே!.
வாதப் பிரதிவாதப் போரினில்
ஈடுபட்ட புறச் சமயங்களின்
(புத்தம், சமணம்)
நசிவுக்குக் காரணனே!.
அகச்சமயம் ஆறிலும்
புறச்சமயம் ஆறிலும்
இலங்கும் தெய்வமே!.
தக்க சமயத்தில் வந்து
உதவுகின்ற எங்கள் தலைவனே,
அழகிய மயிலில் ஏறி
வருகின்ற அறிவுசால் அழகனே!.
சகல உலகங்களும், குற்றமற்று
விளங்குகின்ற எல்லா வேதங்களும்
கைகூப்பித் தொழுகின்ற
சமர மாபுரி என்கின்ற
திருப்போரூரில் வீற்றிருந்தருளும்
பெருமாளே!..
*
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா..
வீரவேல் முருகனுக்கு
அரோகரா..
***
முருகனுக்கு, கந்தனுக்கு, எங்கப்பனுக்கு, எங்க பாட்டனுக்கு அரோகரா... அரோகரா.. அரோகரா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்..
நீக்குநீங்களும் அரசியலுக்கு வந்து விட்டீர்களா!..
நீக்குமுருகனுக்கு அரோகரா வாழ்க வையகம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
நீக்குவாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
முருகா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குநல்ல திருப்புகழ். விளக்கமும் அருமை. திருப்போரூர் வழியா எத்தனை முறை போயிருக்கேனோ, தெரியலை. ஆனால் கோயிலுக்குப் போனதில்லை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..
நீக்குதிருபொருர் போயிருக்கிறேன் ஒரே ஒருமுறை. அழான கோயில்.
பதிலளிநீக்குதிருப்புகழை வாசிக்கும் போதே அந்த ரிதம் மனதில் தாளம் போடுகிறது ரசிக்கிறது.
விளக்கம் அருமை துரை அண்ணா...
கீதா
திருப்புகழின் இசைக் கட்டமைப்பே அந்தச் சந்தம் தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
திருப்போருர் போய் இருக்கிறோம். திருப்புகழ் பாடி விளக்கமும் படித்தேன். நன்றி.
பதிலளிநீக்குஎல்லாம் முருகனின் அருள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
வாழ்க நலம்..