நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 11, 2014

கல்யாண கோலாகலம்

நிகழும் ஸ்ரீஜய வருடத்தின் சித்திரையில் இரண்டு பௌர்ணமி நிகழ்வதால், மதுரை சித்திரைத் திருவிழா இரண்டாவது பௌர்ணமி நாளை அனுசரித்து கொண்டாடப்படுகிறது. 


சித்திரைத் திருவிழாவின்  -  கொடியேற்றம் கார்த்திகை நட்சத்திரத்திலும், மீனாட்சி திருக்கல்யாணம்  உத்திர நட்சத்திரத்திலும், கடைசி நாள் தீர்த்தவாரி உச்சிக் காலத்தில் சித்திரை நட்சத்திரத்திலும் நிகழ வேண்டும் என்பது மரபு. 

அந்த வகையில் - சித்திரை மாதத்தின் இரண்டாவது  பௌர்ணமி நாளே பொருத்தமாக அமைகின்றது.
 
சித்திரைத் திருவிழாவின் எட்டாம் திருநாளில் - வியாழக்கிழமை இரவு -  ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்  நடைபெற்றது.



ஒன்பதாம் திருநாள்

ஒன்பதாம் திருநாளன்று (வெள்ளிக்கிழமை இரவு) மாலையில் மாசி வீதிகளில் அம்மனும் சுவாமியும் இந்திர விமானங்களில் எழுந்தருளினர். இரவில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் சுவாமி அம்பாள் வேடமணிந்த - சிறார்கள் வில் ஏந்திய நிலையில் திக்விஜயம் நடைபெற்றது. 

பெருமானைக் கண்டு அம்மன் நாணிய அளவில் - சிறப்பு பூஜைகள் நிகழ - அம்மன் எழுந்தருளியிருந்த இந்திர விமானத்தின் பின்னால் - சீர்வரிசைத் தட்டுகளுடன் பெண்கள் சென்றனர்.  

சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் (மே.10) ஸ்ரீமீனாக்ஷி அம்மனுக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.


திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். 

அதிகாலையில் கட்டளைதாரர் மண்டகப்படிகளில், ஸ்வாமியும் பிரியா விடையும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.

பின், முத்துராமையர் மண்டபத்தில் மீனாட்சி கன்னி ஊஞ்சல் அடினாள்.

இதற்கிடையே, திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடனும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளினர்.

தொடர்ந்து - பலவண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதப் பெருமான் பிரியாவிடையுடன் காலை 9.54 மணிக்கு மேடையில் எழுந்தருளினார்.

இதையடுத்த ஐந்து நிமிடத்தில் சிவப்பு பட்டு தரித்தவளாக முத்து மாலை அணிந்து திருக்கரத்தில் கிளியுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளினாள்.

வெள்ளைப் பட்டுடன் சுப்ரமணியரும், வாடாமல்லிப் பட்டில் தெய்வானையும் மஞ்சள் பட்டில் பவளக்கனிவாய்ப் பெருமாளும்  மேடையில் எழுந்தருளினர்.

காலை 10 மணி அளவில் திருமணச் சடங்குகள் தொடங்கி மாங்கல்ய பூஜைக்குப் பிறகு  மாலை மாற்றினர். அதன்பின் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் கட்டளைப்படி அனைத்து தெய்வ திருமேனிகளுக்கும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன.

திருமாங்கல்யதாரணத்துக்குப் பின் மல்லிகைப் பூ சுற்றிய திருமாங்கல்யம் சுவாமி சார்பில் காலை 10.49 மணிக்கு அருள்மிகு ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு சாற்றினர். பிரியாவிடைக்கும் மங்களநாண் சூட்டப்பட்டது. பல்வகை உபசார தீபாராதனைகளுக்குப் பின் மகாதீபாராதனை நடந்தது.

பகல் 11.15 மணி அளவில் சுவாமி, அம்மன் மற்றும் சுப்ரமணியர், தெய்வானை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள -  பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து இன்புற்றனர்.




அறைந்தன தூரியம் ஆர்த்தன சங்கம் 
நிறைந்தன வானவர் நீண்மலர் மாரி 
எறிந்தன சாமரை ஏந்திழை யார்வாய்ச் 
சிறந்தன மங்கல வாழ்த்தெழு செல்வம்!..
(திருவிளையாடற்புராணம்)


அத்தலை நின்ற மாயோனாதி செங்கரத்து நங்கை 
கைத்தலங் கமலப்போது பூத்ததோர் காந்தளொப்ப 
வைத்தரு மனுவாயோதக் கரகநீர் மாரி பெய்தான் 
தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுது பூமாரி பெய்தார்!..
(திருவிளையாடற்புராணம்)

பவளக்கனிவாய்ப் பெருமாள் திருக்கரத்தில் கெண்டியுடன் எழுந்தருள, வேத மந்திரங்கள் ஒலிக்க காலை 10.47 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். 


மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றியபோது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். 

திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெற்றது.  

பழமுதிர்சோலை திருவருள் பக்த சபை சார்பில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாண விருந்து காலை 8 மணி முதல்  பக்தர்கள் வரும் வரை தொடர்ந்து நடந்தது. 

கடந்த ஆண்டு திருக்கல்யாண விருந்தில், 45 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 60 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப் பட்டது. 

மாப்பிள்ளை அழைப்பினை முன்னிட்டு முன்தினம் மாலை 6.30 மணி அளவில் வெண்பொங்கல், கேசரி, போண்டா இவற்றுடன் விருந்து உபசரிப்பு நிகழ்ந்தது.

மல்லிகைப் பல்லக்கில் மரகதவல்லி


ஸ்ரீபவளக்கனிவாய் பெருமாள்
திருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். 

இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், ஸ்வாமி பிரியாவிடையுடனும், எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

இன்று -  ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 

கீழ மாசிவீதியிலிருந்து புறப்படும் தேர்  - தெற்கு, மேற்கு, வடக்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடையும்.


அன்னை மீனாட்சியின் உச்சி முதல் பாதம் வரை - போற்றி புகழ்ந்து -  பரஞ்சோதியார்  அருளிய திருப்பாடல் இது!..

சுரும்பு முரல் கடி மலர்பூங்குழல் போற்றி 
உத்தரியத் தொடித்தோள் போற்றி 
கரும்புருவச் சிலை போற்றி 
கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி 
இரும்பு மனம் குழைத் தென்னை 
எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி 
அரும்பும் இளநகை போற்றி ஆரண 
நூபுரஞ்சிலம்பும் அடிகள் போற்றி!..
(திருவிளையாடற் புராணம்)

ஓம் சக்தி ஓம்..
* * *

14 கருத்துகள்:

  1. சித்திரைத் திருவிழா அறிந்து மகிழ்ந்தேன்
    ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான திருப்பாடலோடு படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. சித்திரைத் திருவிழாவை இல்லத்தில் இருந்தபடி ரசித்தேன். எங்களை விழாவிற்கு அழைத்துச்சென்ற தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் சித்திரை திருவிழாவிற்கு வருகை தந்தமைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில்கண்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. நேரடி ஒளிபரப்பில் கண்டதை நிறுத்தி நிதானித்து புகைப்படமாக பார்க்க மனம் மகிழ்ச்சி அடைகிறது. நன்றி சார் திருமணக் கோலம் பதிவாக போட்டதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கரும்பாய் தித்திக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..... பதிவிற்கான படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..