நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 07, 2013

கணேச சரணம்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல 
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால். 
                                                                          - விவேக சிந்தாமணி


அல்லல்கள் அகல்கின்றன. அருவினைகள் அழிகின்றன. பிறவிகள் தோறும் நம்மைத் தொடர்ந்து வரும் வல்வினைகள் வழி மாறிச் செல்கின்றன. 

அன்னையின் வயிற்றில் கருக் கொண்டு நம்முடனேயே பிறக்கும் முன்வினைகளும்  உருத் தெரியாமல் ஒழிந்து போகின்றன. 

இதற்கும் மேல் - பின்னைப் பிறவிக்கு என்று நம் மனத்துள் துயரங்களாக மாறி மண்டிக் கிடக்கும் மாசுகளும் மறைந்து போகின்றன. 

ஆக பிராரப்தம் சஞ்சிதம் ஆகாமியம் என அனைத்தும் அழிந்த பின் ,

நல்ல குணங்களின் வடிவில்  - உயிர் எனும் பயிர் - தழைக்கின்றது.

இவ்வளவும் -


ஞானம் எனும் செல்வத்தை வாரி வழங்குதற்கென்று - திருஅண்ணாமலைக் கோபுரத்துள் - விளங்கி வீற்றிருக்கும் ,

கணபதியைக் கைகூப்பித் தொழும் போது!..

கரிமா முகனின்  அருள் வேண்டி  அழும் போது!..

''..ஐயா!.. நீயே சரணம்!..'' -  என்று, விழுந்து வணங்கி எழும் போது!..

ஐங்கரனின் அருள் பெற்று - மனம் எனும் காட்டை உழும் போது!..

இப்படியிருக்க - 


விநாயகப் பெருமானின் திருவடிகளை வணங்குவது என்ன கஷ்டமான வேலையா!..

நாம் சிரமப்படக் கூடாது என்றுதானே - மிக மிக எளிதாக விநாயக வழிபாட்டினை சொல்லி வைத்தார்கள்.

வீட்டிற்குள் இருக்கும் மஞ்சளை அரைத்து பிடித்து வைத்தால்  - பிள்ளையார்!.

வெளியில் தொழுவத்தில் பசுஞ்சாணத்தை உருட்டி வைத்தால் -  பிள்ளையார்!.

இவருக்காக -  செண்பகப் பூவோ, பாரிஜாத மலரோ தேவையில்லை!. 

கையருகே படர்ந்து கிடக்கும் அருகு!.. சற்று தொலைவில் நம்மை யாரும் கண்டு கொள்ளமாட்டார்களா - என ஏங்கித் தவிக்கும் எருக்கு!..


அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றான்  - என்று ஒரு சொல் வழக்கு உண்டு!..

அதை அப்படியே நிரூபிப்பவர் - பிள்ளையார்!..

சிவபெருமானுக்கு உகந்தவை - எருக்கும் ஊமத்தமும்!..

சிவ லிங்க வடிவம் என்பது, மூண்டு முளைத்தெழும் வித்து முதற்கொண்டு - அண்டப் பெருவெளியாய் விரிந்து கிடக்கும் ஆகாயம் வரை லிங்க ஸ்வரூபம் தான்!.. 

ஆற்று மணலைக் குவித்து வைத்து சிவ வழிபாடு செய்யலாம்!..  பூஜை முடிந்ததும் அப்படியே அள்ளி நீரில் கரைத்து விடலாம்.

வெண்ணெய் மற்றும் சகல விதமான தான்யங்களையும் கொண்டு இப்படி வழிபாடு செய்யலாம். 

இதுதான் மகரிஷிகளும் சித்தர்களும் செய்த ஆதி வழிபாடு. இதன் சூட்சுமம் பல தலங்களின் வரலாற்றுக்குள் பொதிந்து கிடக்கின்றது. 


உதாரணத்திற்கு,

ஸ்ரீராமன்  வழிபட - சீதை உருவாக்கிய மணல் லிங்கம் - ஸ்ரீராமேஸ்வரர்.

வசிஷ்டர் வழிபட, காமதேனுவின் வெண்ணெய்யினால் உருவாக்கிய லிங்கம் - ஸ்ரீ நவநீதேஸ்வரர் - சிக்கல்.

வைணவ நம்பிக்கு வாழ்க்கைப்பட்ட சிவநேசச்செல்வி வழிபட்ட,  கன்று கட்டும் தறி  - சிவலிங்கமாகியது. கன்றாப்பூர். அப்பர் பெருமானின் திருப்பாடல் பெற்ற திருத்தலம். திருஆரூருக்கு அருகில் உள்ளது.

இன்னும் நிறைய!..

இது அப்படியே - கணபதி வழிபாட்டுக்கும் பொருந்துகின்றது தானே!..

அரிசியைக் குவித்து வைத்து சிவமாகவோ - பிள்ளையாராகவோ - பாவித்து வழிபட்டு அதன்பின்,  அந்த அரிசியை பானையில்  (விசர்ஜனம்) கலந்து பாருங்கள்!..

அரிசி மட்டுமா!.. 

உண்ணும் போது, 

(சோற்றை உருண்டையாக உருட்டக்கூடாது. அது அமங்கலம்)

முதல் பிடி சோற்றினை அப்படியே அள்ளி,

சிவமாகவோ, பிள்ளையாராகவோ -  ஒரு கணம் - ஒரே ஒரு கணம் - பாவித்து,

உண்ணுங்கள்!..  நீங்களே உணர்வீர்கள்!..


பிள்ளையார்  பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை அதனிலே அரச மரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்துவைக்கும் பிள்ளையார்!..
ஊரைக் காக்கும் பிள்ளையார்  உறவைக் காக்கும் பிள்ளையார்
பாரிலுள்ள அனைவருக்கும் அருள் கொடுக்கும் பிள்ளையார்
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்!..
அவல் கடலை பொரியுடன் அரிசி கொழுக் கட்டையும்
கவலை யின்றித் தின்னுவார் கண்ணை மூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்!..


ஜய கணேச.. ஜய கணேச.. ஜய கணேச.. வாழ்கவே!..
ஸ்ரீ கணேச.. ஸ்ரீ கணேச.. ஸ்ரீ கணேச.. வாழ்கவே!..

ஓம் கம் கணபதயே நமஹ:

11 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி!.. தங்களின் ஊக்கத்தால், நமது வலைத்தளம் மீண்டும் வலைச்சரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

      நீக்கு
  4. you can listen to this song here.
    https://www.youtube.com/watch?v=kUj0Y8Y5AX0
    subbu thatha.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இசை இணைப்பிற்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

  5. எளிய வழிகளில் துன்பங்கள் விலகும் என்றால் மக்கள் அதை ஏன் கடைபிடித்து இன்பமாய் இருக்கக் கூடாது.? இங்கு கர்நாடகத்தில் கணேச வழிபாடு பிரசித்தம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிபாட்டின் பொருள் உணர்ந்தால் தான் - பிரச்னைகளில் இருந்து நீங்கி விடுவார்களே!.. மக்கள் அத்தனை சீக்கிரம் - தம்மை விடுவித்துக் கொள்வார்களா!.. அன்புடையீர்!.. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. திரு. சே. குமார் அவர்களுக்கு அன்பின் வணக்கம்!. தத்தித் தளர் நடையிடும் குழந்தையாய் உணர்கின்றேன்.. வலைச்சரத்தில் தஞ்சையம்பதியினை அறிமுகம் செய்வித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி..

    பதிலளிநீக்கு
  7. மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
    ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்!..

    இதயத்தில் இனிக்கும் அருமையான
    விநாயகர் பற்றிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. சித்தத்தை சிவமயமாக்குபவர் ஸ்ரீ மகாகணபதியே!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..